சென்னை: “வடகாடு சம்பவத்தில் புலன் விசாரணைக்கு முன்னரே காவல் துறை ஒரு முன்முடிவை எடுத்து அறிவிப்பது சரியா? ஒரு சார்பான இப்போக்கை காவல் துறை கைவிட வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் திருவோணம் அருகேயுள்ள வடகாடு என்னுமிடத்தில் நேற்று (மே 5) நள்ளிரவில் ஆதிதிராவிடர் குடியிருப்பில் ஆதிக்க சாதிவெறிக் கும்பல் கொடூர ஆயுதங்களுடன் நுழைந்து, கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளது. அதில் ஆறு பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வடகாடு அருகேயுள்ள ஆலங்குடி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை மீண்டும் மருத்துவமனைக்குள்ளே நுழைந்து அச்சாதிவெறியர்கள் தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்புக் கருதி அவர்களைப் புதுக்கோட்டை மருத்துவமனைக்கு மாற்றியுள்ளனர். மேலும், அக்கும்பல் ஆதிதிராவிடரின் குடியிருப்பில் தீவைத்துள்ளது. மக்கள் போராடி தீயை அணைத்ததால் ஒரு வீட்டுடன் அது பரவாமல் தடுக்கப்பட்டுவிட்டது. அத்துடன், அக்கும்பல் இருசக்கர வாகனங்களையும் நான்கு சக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கி வெறியாட்டம் நடத்தியுள்ளது.
வடகாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் முத்துமாரியம்மன் கோயிலின் தோரோட்டத் திருவிழாவில் பங்கேற்கச் சென்ற ஆதிதிராவிடர்களைச் சாதிப்பெயரைச் சொல்லி இழிவுப்படுத்தியதுடன், தேர்வடத்தைத் தொடவிடாமல் தடுத்து தாக்கியுள்ளனர். அதே நேரத்தில் திட்டமிட்டு ஆதிதிராவிடர் குடியிருப்பிற்குள் ஒரு கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. கண்ணில் பட்டவர்களையெல்லாம் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கியுள்ளது.
இதற்கு ஏற்கனவே அக்கிராமத்தில் இருதரப்புக்கும் இடையில் நடந்த அய்யனார் கோயில் தகராறு மற்றும் அது தொடர்பான வழக்கும்தாம் பின்னணி காரணமாக உள்ளன என்பது தெரிய வருகிறது.
ஆதிதிராவிடர்களால் கட்டப்பட்டுள்ள ‘அடைக்கலம் தந்த அய்யனார்’ கோயிலிலும்; அதனருகேயுள்ள மூன்று ஏக்கர் பரப்பளவுள்ள காலியிடத்திலும்; முத்தரையர் சமூகத்தினருக்கும் உரிமை உண்டு என கோரி அவர்கள் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பாக ஆதிதிராவிடர்கள் நீதிமன்றத்தை நாடி வழக்காடி அக்கோயில் தங்களுக்கு மட்டுமே உரியது எனத் தீர்ப்பையும் பெற்றுள்ளனர்.
ஆனாலும், காவல் துறையினர் வழக்கம்போல சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி, அந்தக் கோயிலை இன்னும் பூட்டியே வைத்துள்ளனர். காலியிடத்தை ஆதிதிராவிடர்களும் பயன்படுத்தக் கூடாதென தடுத்து வைத்துள்ளனர். இந்த முரண்பாடும் பகையும் ஏற்கனவே அந்த ஊரில் நிலவும் சூழலில் தான், இந்த தேரோட்டத் திருவிழாவுக்குச் சென்ற ஆதிதிராவிடர்களை வடம் பிடிக்கக் கூடாதென வம்புக்கிழுத்து, அவர்தம் குடியிருப்புக்குள் வெறித்தனமாகத் தாக்கியுள்ளனர். எனவே, இது சாதிவெறித் தாக்குதல் தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஆனால், காவல் துறையினர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியளிப்பதாகவுள்ளது. புலனாய்வுத் தொடங்குவதற்கு முன்னரே, ஒரு ‘முன்முடிவை’ எடுத்து தனிநபர்களுக்கிடையிலான பிரச்சினைகள் தான் இந்த சாதிவெறியாட்டத்திற்குக் காரணம் என்று அறுதியிட்டுக் கூறுவது எவ்வகையில் சரியென அமையும்? இது வழக்கின் விசாரணையைப் பாதிக்காதா? இது வதந்தி பரப்புவதைத் தடுக்கும் முயற்சி என்பதைவிட, நேர்மையான விசாரணைக்கு முட்டுக்கட்டைப்போடும் சதி என்றே கருத வேண்டியுள்ளது. இத்தகைய போக்கை காவல்துறை கைவிட வேண்டுமெனவும் விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்.

நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மட்டுமே கொண்ட சிறுபான்மையினராக அங்கே ஆதிதிராவிடர் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான குடும்பங்களைக் கொண்ட பெரும்பான்மை ஆதிக்க சாதியினராகவுள்ள முத்தரையர்கள் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டு ஆதிதிராவிடர்களை எப்போதும் அச்சத்திலேயே ஒடுக்கி வைத்துள்ளனர். இத்தகைய சூழலில்தான் இந்த சாதி வெறியாட்டம் அரங்கேறியுள்ளது.
இந்த வன்கொடுமைகளில் வெளியூர்களைச் சார்ந்த சாதிவெறியர்களும் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது. இந்நிலையில், ஒரு சிலரை மட்டுமே காவல்துறை கைது செய்துள்ளது. என்றாலும், ஆதிதிராவிடர்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ள வெளியூர் ஆட்கள் உட்பட அனைவரையும் கைது செய்து சிறைப்படுத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
வடகாட்டிலுள்ள ஆதிதிராவிடர்களுக்குரிய அய்யனார் கோவிலைத் திறந்துவிட வேண்டுமெனவும், அதனருகேயுள்ள காலியிடத்தை ஆதிதிராவிடர் சமூகத்தினரே பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டுமெனவும் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்” என கூறியுள்ளார்.