சென்னை: “வடகாடு கிராமத்தில் குடிபோதையில் இருந்த சிலரால் ஏற்பட்ட சம்பவம் சமூக மோதலாக சித்தரிக்கப்பட்டு, வதந்திகளும் பரப்பப்பட்டுள்ளன. இச் சம்பவம் கைமீறி சென்றதற்கு காவல் துறையின் அலட்சியமும், செயலற்ற நிலையும்தான் முக்கியக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தகராறு நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் வாய்மூடி மவுன சாட்சியாக நின்று இருந்தனர் என்பது வெட்கப்பட வேண்டிய செயலாகும்,” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகில் உள்ள வடகாடு கிராமத்தில் கடந்த மே 5ம் தேதி, சமூகப் பொறுப்பற்ற சிலர், தங்களது இருசக்கர வாகனங்களுக்கு யார் முதலில் பெட்ரோல் போடுவது என்ற முனைப்பில், குடிபோதையில் செய்து கொண்ட தகராறு வன்மையாகக் கண்டிக்கதக்கது. இந்த தகராறு நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் வாய்மூடி மவுன சாட்சியாக நின்று இருந்தனர் என்பது வெட்கப்பட வேண்டிய செயலாகும்.
தகராறு செய்து கொண்டதில் ஒரு பிரிவினர், சாதிய ஆதிக்க வெறியுடன், மற்றவர்களுக்கு தவறான தகவல் கொடுத்து, ஆட்களை திரட்டி கொண்டு, பட்டியலின சமூகப் பிரிவு மக்கள் மீதும், குடியிருப்பு மீதும் பெரும் தாக்குதல் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு கூரை வீடு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்தின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதும், சிலர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் காவல்துறையின் கவனத்துக்கு சென்றுள்ளது.
குடிபோதையில் இருந்த சிலரால் ஏற்பட்ட சம்பவம் சமூக மோதலாக சித்தரிக்கப்பட்டு, வதந்திகளும் பரப்பப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் கைமீறி சென்றதற்கு காவல் துறையின் அலட்சியமும், செயலற்ற நிலையும் தான் முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக விசாரித்து தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் பொங்கல் விழா பிரச்சினையும், அது தொடர்பான வழக்கும் இருப்பது அவ்வப்போது ஏற்படும் மோதலுக்கு காரணமாக அமைத்திருக்கிறது.
இதன் மீது விரைந்து தீர்வு காண மாவட்ட நிர்வாகம் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். உடனடியாக ஒரு அமைதிக் குழு அமைத்து சட்டம் – ஒழுங்கு, சமூக அமைதியை பராமரித்து வருவதை உறுதி செய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் முற்றிலும் எரிந்து போன வீட்டை புதுப்பித்து, அரசு செலவில் கட்டிக் கொடுக்க வேண்டும். வீடுகள், வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதாரத்திற்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி இழப்பீடு வழங்க வேண்டும்.
குடிபோதையில் தகராறு செய்வதில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் தண்டனை பெற்று தர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது,” என்று அவர் கூறியுள்ளார்.