மதுரை/ புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் இருபிரிவினரிடையே நடைபெற்ற மோதல் வழக்கில் திருச்சி ஐஜி, புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி. இன்று நேரில் ஆஜராக அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடகாடு கிராமத்தில் பட்டியலினத்தவர்களுக்கு கோயில் வழிபாடு உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு திருமணஞ்சேரியைச் சேர்ந்த சண்முகம் தரப்பில் வழக்கறிஞர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
அதில், வடகாடு மோதல் தொடர்பாக தேசிய ஆதிதிராவிட நலத் துறை ஆணையம், தமிழக ஆதிதிராவிட நலத்துறையின் உறுப்பினர், சமூக ஆர்வலர், வழக்கறிஞர் ஆகியோரை கொண்ட குழு அமைத்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும், வடகாடு மாரியம்மன் கோயிலில் பட்டியல் சமூகத்தினர் வழிபடுவதை உறுதிப்படுத்தவும், சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ பதிவுகளைக் கொண்டு அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யவும் உத்தரவிட வேண்டும்.
இதை அவசர வழக்காக எடுத்து விசாரித்து உரிய உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்றார். பின்னர் நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வு, மனுதாரர் கோரிக்கை தொடர்பாக மனு தாக்கல் செய்யவும், திருச்சி ஐஜி, புதுக்கோட்டை ஆட்சியர், எஸ்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் இன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிட்டனர்.
சமாதான பேச்சுவார்த்தை: இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டையில் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா முன்னிலையில் சமாதான பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இரு தரப்பிலும் தலா 10 பேர் வீதம் பங்கேற்றனர். அப்போது, அரசு இடத்தை இரு தரப்பினரும் உரிமை கோரும் வழக்கை, நீதிமன்றத்தில் தொடர்ந்து நடத்தி உரிமை பெற்றுக் கொள்ள வேண்டும். அதுவரை அந்த இடத்துக்குள் இரு தரப்பினரும் செல்லக் கூடாது. பேனர் வைக்கக் கூடாது.கலவரத்தைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிடக் கூடாது என முடிவெடுக்கப்பட்டது.