22
வடக்கு அயர்லாந்தின் கவுண்டி அர்மாக் (County Armagh) பகுதியில் உள்ள பெலீக்ஸ் (Belleeks) என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை (17) பிற்பகல் பாடசாலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்ஸை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் உயிரிழந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த பஸ்ஸில் பெஸ்ப்ரூக்கில் (Bessbrook) உள்ள செயின்ட் பால்ஸ் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 40 மாணவர்கள் பயணம் செய்தனர். இந்த விபத்தில் மாணவர்கள் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என்று அந்தப் பாடசாலையில் அதிபர் தெரிவித்தார். நியூடவுன்ஹாமில்டன் (Newtownhamilton) மற்றும் கேம்லக் (Camlough) ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள துல்யா வீதியில் (Tullyah Road) மாலை 04:30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தனியார் நிறுவனமான குயின் கோச்சஸ் (Quinn Coaches), தங்களின் மதிப்பிற்குரிய மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. வடக்கு அயர்லாந்து காவல்துறை (PSNI) இந்தச் சம்பவத்தை தற்போது ஒரு “திடீர் மரணம்” (sudden death) என்று கருதி முதற்கட்ட விசாரணை நடத்தி வருகிறது.
சம்பவ இடத்திற்கு ஐந்து ஆம்புலன்ஸ்கள், இரண்டு மேம்பட்ட துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவர் ஒரவர் அடங்கிய குழுவினர் விரைந்து சென்று சிகிச்சை அளித்தனர். விபத்தினால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்குத் தேவையான மனநல மற்றும் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கக் கல்வி ஆணையம் (Education Authority) ஒரு சிறப்பு மேலாண்மைக் குழுவை அமைத்துள்ளது.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்குத் தாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகக் குயின் கோச்சஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.