• Sat. May 10th, 2025

24×7 Live News

Apdin News

வடக்கு, கிழக்கில் இணைந்து ஆட்சி: தமிழ்க் கட்சிகள் பேச்சு நடத்தினால் ஆழமாக ஆராய்ந்து முடிவு! – அரசு அறிவிப்பு

Byadmin

May 10, 2025


“வடக்கு, கிழக்கில் இணைந்து சபைகளை நிறுவுவது குறித்து தமிழ்க் கட்சிகள் உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலையும் அரசுக்கு வழங்கவில்லை. தமிழ்க் கட்சிகள் எம்முடன் பேச்சு நடத்தினால் ஆழமாக ஆராய்ந்த பின்னரே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும்.”

– இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பன ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவையாகும். இந்த மூன்று தேர்தல்களிலும் மக்களின் நடத்தை வேறுபட்டதாகவே காணப்படும். அந்தந்தத் தேர்தல்களுடனேயே ஒப்பீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு நாடாளுமன்றத் தேர்தலுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒப்பிட்டு பார்ப்பதாயின் கடந்த தேர்தலில் 32 சதவீத வாக்குகளைப் பெற்றுக்கொண்ட சஜித் பிரேமதாஸ இம்முறை 21 சதவீத வாக்குகளையே பெற்றிருக்கின்றார்.

சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட வாக்குகளை இந்தத் தேர்தலில் உறுதிப்படுத்திக் கொள்ள முடியாது போயுள்ளது.

அவ்வாறெனில் அவர் பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கின்றார் என மதிப்பிட முடியுமல்லவா? வரலாற்றில் தனியொரு கட்சி அதிகளவான சபைகளைக் கைப்பற்றியிருக்கின்றது. 266 சபைகளை அரசு கைப்பற்றியிருக்கின்றது. வரலாற்றில் எந்தவொரு கட்சியும் இவ்வாறான வெற்றியைப் பெற்றிருக்கவில்லை.

இவை தவிர மேலும் பல சபைகளை அமைப்பதற்கான வாய்ப்பும் அரசுக்குக் காணப்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறவில்லை எனக் கூறப்படும் அகலவத்தை பிரதேச சபையில் 20 உறுப்பினர்களில் 6 தேசிய மக்கள் சக்தியும், 6 ஐக்கிய மக்கள் சக்தியும் பெற்றுள்ளது. இருவருக்கும் சபைகளை அமைப்பதற்கான வாய்ப்புள்ளது.

இவ்வாறு பல சபைகள் காணப்படுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் போட்டியிட்ட தொகுதியில் கூடத் தோல்வியடைந்துள்லார்.

சஜித் பிரேமதாஸ 14 சபைகளில் தாம் வெற்றி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவற்றில் ஒன்றில் கூட ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பின்றி அவர்களால் சபைகளை நிறுவ முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி தனித்து வெற்றி பெறவில்லை. ஆனால், அரசுக்கு 266 சபைகளை மக்கள் வழங்கியிருக்கின்றனர்.

வடக்கு, கிழக்கில் இணைந்து சபைகளை நிறுவுவது குறித்து தமிழ்க் கட்சிகள் உத்தியோகபூர்வமாக எந்த அறிவித்தலையும் அரசுக்கு வழங்கவில்லை. அதிகபட்ச சபைகளை நிறுவுவதே அரசின் எதிர்பார்ப்பாகும். தமிழ்க் கட்சிகள் எம்முடன் பேச்சு நடத்தினால் ஆழமாக ஆராய்ந்த பின்னரே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும்.” – என்றார்.

By admin