• Sun. Mar 8th, 2026

24×7 Live News

Apdin News

வடம் | திரை விமர்சனம் – Vanakkam London

Byadmin

Mar 8, 2026


தயாரிப்பு: மாசாணி பிக்சர்ஸ்

நடிகர்கள்: விமல், நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனிஸ்காந்த், பால சரவணன், மதுசூதனன் ராவ், தீபா, இந்துமதி மணிகண்டன், ‘ஆடுகளம்’ நரேன் மற்றும் பலர்

இயக்கம்: கேந்திரன்.வி.

மதிப்பீடு: 2.5/5

ரூரல் ஸ்போர்ட்ஸ் எனும் வரையறைக்குள் உள்ள மஞ்சுவிரட்டு எனும் தமிழர்களின் மண் சார்ந்த வீர விளையாட்டை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கும் படைப்பு என்பதாலும், விமல் – நட்டி நட்ராஜ் ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடித்திருப்பதாலும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த ‘வடம்’ எனும் திரைப்படம் -அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தமிழகத்தின் தென் பகுதி ஊர் ஒன்றின் பெரிய மனிதராக இருக்கும் சந்தன வேல் ( ‘ஆடுகளம்’ நரேன்) அறம் சார்ந்த மனிதராக இருப்பதுடன், கறவை நின்று போன பசு மாடு – கைவிடப்பட்ட காளை மாடு- ஆகிய ஐந்தறிவு ஜீவன்களை பராமரிக்கும் வகையில் கோசாலை ஒன்றை நிறுவி, அதனை நடத்தியும் வருகிறார்.

அதற்கு நேர் எதிராக அதே ஊரில் இருக்கும் ரத்னவேல் பாண்டியன் ( நட்டி நட்ராஜ்) என்பவர் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி மட்டும் பெறும் காளையை வளர்த்து வருகிறார். இவருக்கு காளைகளை வளர்ப்பது கௌரவம் சார்ந்த விடயமாக இருக்கிறது. சந்தன வேலின் மகனான வெற்றிவேல் ( விமல் ) தந்தையை போலவே ஐந்தறிவு ஜீவன்கள் மீது அன்பும், அரவணைப்பும் கொண்டிருக்கிறார்.

இவர் ரத்னவேல் பாண்டியனால் கைவிடப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட காளை கன்னுக்குட்டியை ஆசையாக ‘பாண்டி முனி’ என பெயரிட்டு வளர்க்கிறார்.

இவருடைய வளர்ப்பில் பாண்டி முனி யாராலும் வெற்றி கொள்ள இயலாத காளையாக மாறுகிறது. சுற்று வட்டாரத்தில் எந்த ஒரு போட்டி என்றாலும் வெற்றி என்ற ஒற்றை சிந்தனையுடன் வலம் வரும் ரத்னவேல் பாண்டியனின் காளையை விட வெற்றிவேல் வளர்க்கும் பாண்டி முனி தொடர் வெற்றிகளை பெற பாண்டி முனியை கைப்பற்ற வேண்டும் அல்லது அழித்து விட வேண்டும் என திட்டமிடுகிறார். அவரின் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பது ஒரு கதை.

ரத்னவேல் பாண்டியன் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை பழி வெற்றிவேல் மீது விழுகிறது. விசாரணையின் போது வெற்றி வேலுக்கு பிணை கிடைக்கிறது. ஆனால் பிணை கிடைத்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வருவதற்குள் அந்த வளாகத்திலேயே ஒரு கும்பல் வெற்றிவேல் மீது கொடூரமாக தாக்குதல் நடத்துகிறது. அதிலிருந்து தப்பித்து வரும் வெற்றிவேல் மீது காதல் கொள்கிறாள் தேவகி.

தேவகி வெற்றிவேலை தனியாக சந்திக்க விருப்பம் தெரிவிக்கிறாள். காதலுடன் வரும் வெற்றிவேலை தான் வளர்க்கும் காளையால் கொலை செய்ய முயற்சிக்கிறார் தேவகி. தேவகி யார்?  வெற்றிவேலை எதற்காக கொலை செய்கிறார்? ரத்னவேல் பாண்டியனை உண்மையில் கொலை செய்தது யார்? இப்படி பல வினாக்களுக்கு விடை அளிக்கும் வகையில் விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

பல அடுக்குகள் கொண்ட திரைக்கதை-   மஞ்சுவிரட்டு எனும் வீர விளையாட்டு பின்னணி – குறிப்பிட்ட நேரத்திற்குள் ஏதேனும் ஒரு எதிர்பாராத திருப்பத்தை தரும் திரைக்கதை- என வடத்தை விறுவிறுப்பாக இழுத்து கொண்டு செல்கிறார் இயக்குநர். உச்சகட்ட காட்சியில் ரத்னவேல் பாண்டியனை கொன்ற குற்றவாளி இவர்..! என்று அடையாளப்படுத்துவது எதிர்பாராத ட்விஸ்ட்டை வைத்து ரசிகர்களை கவர்கிறார் இயக்குநர்.

மஞ்சுவிரட்டு எனும் வீர விளையாட்டு தொடர்பான காட்சிகளின் நீளம் அதிகம்.  அதுவே சோர்வையும் தருகிறது.

இதற்கு முன் வெளியான பல திரைப்படங்களின் காட்சிகள் நினைவுக்கு வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை.

வெற்றிவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விமல் இடைவேளைக்கு முன்னரான சண்டைக் காட்சியில் அபாரமாக நடித்து ரசிகர்களின் கவனத்தை கவர்கிறார்.

தேவகி கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகை சனஸ்கா ஸ்ரீ  அழகும் இளமையும் திறமையும் கொண்ட கலைஞராக இருக்கிறார். விரைவில் தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்ட் வரக்கூடும்.

ரத்னவேல் பாண்டியன் எனும் கம்பீரமான வேடத்தில் நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் அந்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

திரைக்கதையின் சுவாரசியத்திற்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் மதுசூதன் ராவ் மற்றும் மூர்த்தி கதாபாத்திரம் சிறப்பு.

டி இமானின் பாடல்களை விட பின்னணி இசையில் முத்திரை பதிக்கிறார்.

ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் இயக்குநருக்கு பக்கபலமாக இருக்கிறது.

வடம் – ‘மஞ்சுவிரட்டு’ தடம்.

By admin