6
மெட்டா நிறுவனத்தின் வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க ரஷ்யா முயற்சி மேற்கொண்டதாக அந்த நிறுவனம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தும் தகவல் தொடர்பு தளமாக வட்ஸ்அப் திகழ்கிறது.
ரஷ்ய மக்கள் உள்நாட்டு இணைய சேவைகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, இணைய தள சேவை நிறுவனங்கள் ரஷ்ய சட்டங்களுக்கு இணங்க செயல்பட வேண்டும் என்றும், அந்நாட்டு மக்களின் தரவுகள் ரஷ்யாவிற்குள் சேமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், வட்ஸ்அப் சேவையை முழுமையாக தடை செய்யும் முயற்சியை ரஷ்யா மேற்கொண்டதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ரஷ்ய அரசு உருவாக்கிய ‘மேக்ஸ்’ என்ற செயலியை மக்கள் பயன்படுத்த வற்புறுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் சுமார் 100 மில்லியன் பயனர்களை பாதுகாப்பான தகவல் தொடர்பு தளத்திலிருந்து விலக்க முயற்சி நடைபெற்றதாக வட்ஸ்அப் தெரிவித்துள்ளது. பயனர்களின் தொடர்பை தொடர்ந்து பாதுகாக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்றும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.