வட கடலில் ஒரு சரக்குக் கப்பல் எண்ணெய் டேங்கருடன் மோதியது. விபத்தில் சிக்கிய கப்பல்களில் இருந்த 32 பேர் கரைக்கு அழைத்துவரப்பட்டதாக பிரிட்டனின் கிரிம்ஸ்பீ துறைமுக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஸ்டெனா இம்மாகுலேட் என்ற எண்ணெய் டேங்கரில் இருந்த அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளதாக அந்த கப்பல் நிறுவனம் கூறியது.
எண்ணெய் டேங்கரில் இருந்து அடர்த்தியான புகை வெளியேறியதாகவும், பெரிய அளவில் தீ பற்றி எரிந்ததாகவும் இந்த விபத்து குறித்த வீடியோக்கள் காட்டுகின்றன.
பிபிசி வெரிஃபை ஆய்வு செய்த தரவுகளின்படி, அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட ஸ்டெனா இம்மாகுலேட் என்ற டேங்கர் கப்பல் நங்கூரமிட்டிருந்தபோது, போர்த்துகீசிய நாட்டில் பதிவு செய்யப்பட்ட சோலாங் எனப்படும் கண்டேய்னர் கப்பலால் மோதப்பட்டதாகத் தெரிகிறது.