பட மூலாதாரம், Anastasia Samsonova
ரஷ்யாவைச் சேர்ந்த 33 வயதான அனஸ்தேசீயா சாம்சோனோவா மனித வள துறையில் வேலை செய்கிறார். வெளி உலகிற்கு மூடப்பட்ட வட கொரியாவுக்கு சுற்றுலா சென்று வெகு சிலரில் இவரும் ஒருவர்.
கிம் ஜாங் உன் தனது இளமைக் காலத்தில் நேரத்தை கழித்த மேற்கு கரையில் அமைந்துள்ள பிரத்யேக இடமான வொன்சான் கல்மா கடற்கரை சுற்றுலா மண்டலம் ஜூலை 1 ஆம் தேதி திறக்கப்பட்டது.
ஏவுகணை சோதனை தளம் அருகே அமைந்துள்ள இந்த இடத்தில் விடுதிகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் தண்ணீர் விளையாட்டு பூங்கா இருப்பதாக வட கொரிய அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டது எனக் கூறப்பட்டாலும் தற்போது வரை குழுக்களாகவும் அங்கீகரிக்கப்பட்ட பயண முகமைகள் மூலமும் வரும் ரஷ்யர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
பட மூலாதாரம், KCNA
அனஸ்தேசீயா கடந்த மாதம் 14 பேருடன் இங்கு பயணித்தார். அவரின் பயணம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டது. வழிகாட்டிகளும் பாதுகாவலர்களும் அவர் உடன் சென்றனர். சுற்றுலாவின் நிகழ்ச்சி நிரலை வட கொரிய அதிகாரிகள் அனுமதியில்லாமல் மாற்ற முடியாது.
உள்ளூர் மக்களுடன் உரையாடி அவர்களை திடுக்கிடச் செய்யும் சூழ்நிலைகளை தவிர்க்க பாதுகாவலர்கள் தேவைப்படுகிறார்கள் என வழிகாட்டிகள் தன்னிடம் கூறியதாக தெரிவிக்கிறார் அனஸ்தேசீயா சாம்சோனோவா.
“நாங்கள் தெருவில் நடந்து சென்றபோது வட கொரிய மக்கள் எங்களை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். ஏனென்றால் நீண்ட காலமாக இந்த நாடு சுற்றுலாவுக்கு மூடப்பட்டிருந்தது.” எனத் தெரிவித்தார்.
அந்த ரிசார்டிற்கு பயணித்தவர்களின் ஜீயோடேக்குகளை சமூக ஊடகங்களில் தேடி பிபிசி நியூஸ் ரஷ்யன் அவரைத் தொடர்பு கொண்டது.
சிறப்பான ஓய்வறைகள்
அவரின் குழுவினர் கட்டுமான இடங்களை புகைப்படம் எடுப்பதையும் மிகவும் உடலை வெளிப்படுத்தும் ஆடைகள் அணிவதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டதாக கூறுகிறார் அனஸ்தேசீயா சாம்சோனோவா.
ஆனால் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் வெள்ளை மணல் கொண்ட ஆள் அரவமில்லாத கடற்கரையில் தனது விடுமுறையை ரசித்ததாக அவர் கூறுகிறார்.
“ஒவ்வொரு நாளும் கடற்கரை சுத்தம் செய்யப்பட்டு சமன் செய்யப்படுகிறது. எல்லாமே சுத்தமாக இருந்தது” எனத் தெரிவித்தார்.
“ஓய்வறைகள் புதிதாகவும் கறையில்லாமலும் இருந்தன. கடற்கரைக்கான நுழைவு இடம் மிகவும் சிறப்பாக இருந்தது. கடற்கரையும் நன்றாக இருந்தது” என்றார்.
பட மூலாதாரம், Anastasia Samsonova
கொரோனா பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து வைரல் பரவலைத் தடுக்க வட கொரியாவில் சர்வதேச சுற்றுலா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,
ஆனால் கடந்த ஆண்டு ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் வர அனுமதிக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் போன்ற மேற்கு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சில வாரங்களிலே காரணமின்றி அது நிறுத்தப்பட்டது.
வட கொரியாவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் கிம்மின் நோக்கத்தில் வொன்சான் கல்மா முக்கியமான அங்கமாக பார்க்கப்படுகிறது.
ஸ்பெயின் சுற்றுலாத் தலமான பெனிட்ரோமில் உந்துததால் இந்த இடம் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு வட கொரியா குழு அங்கு சென்று வந்தது.
ஆனால் அது எவ்வாறு கட்டப்பட்டது என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் தொழிலாளர்கள் கடுமையாக நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டி விமர்சித்துள்ளன.
இந்த இடம் திறக்கப்பட்ட சில வாரங்களிலே, வட கொரியாவின் கூட்டாளியான ரஷ்ய சுற்றுலாப் பயணிகளைத் தவிர மற்ற வெளிநாட்டு பயணிகள் தற்காலிகமாக அனுமதிக்கப்படுவதில்லை என அந்த நாடு அறிவித்தது.
தற்போது இரண்டு ரஷ்ய குழுக்கள் அங்கு சென்றுள்ளன. ஒரு குழு தற்போது அங்கு இருக்கிறது.
பட மூலாதாரம், Anastasia Samsonova
ரஷ்யாவிலிருந்து வட கொரியாவுக்கு ஒரு வாரம் செல்வதற்கு, குறிப்பாக வொன்சான் கல்மா விடுதிக்கு மூன்று நாட்கள் செல்வது 1,800 டாலர் (1,300 யூரோ அல்லது இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.5 லட்சம்) செலவாகும். இது ரஷ்யாவில் சராசரி மாதாந்திர சம்பளத்தை விட 60% அதிகம்.
சில விளம்பரங்களும் இந்த ஏவுகணை சோதனை தளத்தைக் குறிப்பிட்டு இதனை தனித்துவமான சுற்றுலாத் தலம் எனக் குறிப்பிட்டு வருகின்றன.
அனஸ்தேசீயா, தான் அங்கு இருந்தபோது எந்த ஏவுகணையும் செலுத்தப்படவில்லை எனக் கூறினார். ஆனால் பொம்மை ராக்கெட்டுகள் 40 டாலருக்கு விற்கப்படுகின்றன.
தனது சுற்றுலாப் பயணத்தை பற்றி குறிப்பிட்ட அனஸ்தேசீயா, பல்வேறு விளையாட்டுகள் திட்டமிடப்பட்டிருக்கும் நாட்களில் காலை உணவு 8 மணிக்கும் மற்ற நாட்களில் 9.30 மணிக்கும் எடுத்துக் கொள்வோம் எனத் தெரிவித்தார்.
அங்கு வழங்கப்பட்ட உணவில் நிறைய இறைச்சி இருக்கும், இனிப்பு மற்றும் கசப்பு சுவையுடைய சாஸ் இடம்பெறும், நன்றாக நறுக்கிய முட்டைக்கோஸ் மற்றும் கேரட்டை உள்ளடக்கிய ஒரு உணவும் இடம்பெற்றிருக்கும்
500 மில்லி பீர் பாட்டில் மிகவும் மலிவாக கடற்கரையில் 60 செண்ட்களுக்கு கிடைக்கின்றன எனத் தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகள் வட கொரியாவின் ஒலிம்பிக் ஆடைகளை பரிசுப் பொருளாக வாங்கிச் செல்கின்றனர்.
மற்றுமொரு சுற்றுலாப் பயணியான தாரியா தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் வித்தியாசமாக இருந்தது எனக் குறிப்பிட்டார். “இத்தகைய சுற்றுலாவுக்கு ரஷ்யர்கள் பழக்கப்பட்டிருக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
“ஆனால் நீங்கள் ஆசியா, துருக்கி போன்ற இடங்களால் சலித்துபோய் கவர்ச்சியான இடத்தை தேடினால் இந்த இடம் சரியாக இருக்கும்” எனவும் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Vostok Intur
ஆனால் வொன்சன் கல்மாவிற்கு அடுத்து எப்போது ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதில் நிலையற்றத்தன்மை உள்ளது.
இந்த விடுதிக்கு முதல் மூன்று பயணங்களை ஒருங்கிணைத்திருந்த வொஸ்தோக் இன்டூர் செப்டம்பர் மாதத்தில் சுற்றுலா ஏற்பாடு செய்ய அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் வட கொரிய அதிகாரிகள் தற்போது வரை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளது.
முதலில் செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சுற்றுலாவுக்கான விளம்பரங்களை ரஷ்ய சுற்றுலா நிறுவனங்கள் அறிவித்திருந்தன. ஆனால் இவை பின்னர் நீக்கப்பட்டன.
பட மூலாதாரம், Anastasia Samsonova
வொன்சான் கல்மாவிற்குச் செல்ல ரஷ்யர்களுக்கு மட்டும் சிரமமில்லை.
வட கொரியாவின் அண்டை நாடும் மிகவும் முக்கியமான கூட்டாளி மற்றும் பொருளாதார நட்பு நாடான சீன குடிமக்களுக்கும் சிரமங்களைச் சந்திக்கின்றனர் என கூக்மின் பல்கலைக்கழக பேராசிரியரும் வட கொரியா-ரஷ்ய உறவுகள் வல்லுநருமான ஆண்ட்ரே லன்கோவ் கூறுகிறார்.
வட கொரியா வேண்டுமென்றே சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தி அவர்களின் நடமாட்டத்தை மிகவும் நெருக்கமாக கண்காணிக்கிறது. வட கொரியர்கள் பணக்கார வெளிநாட்டினருடன் தங்களை ஒப்பிட்டுக் கொள்ளக்கூடாது என்பதற்காக இது செய்யப்படுகிறது.
“நம்முடைய பெரும் தலைவர் அல்லது அவரின் மகன் அல்லது மகள் போன்று இவர்கள் எப்படி இவ்வளவு நன்றாக வாழ்கின்றனர் என சாதாரண மக்கள் குழப்பமடையக் கூடும்” என்கிறார் லன்கோவ்.
இந்த காரணத்திற்காகத் தான் வட கொரியா பல வெளிநாட்டினர்களை தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பது சிறந்தது என முடிவெடுத்துவிட்டது” என்றார்.
பட மூலாதாரம், AFP
வட கொரியாவுக்குச் செல்வதற்கான சுற்றுலா கட்டுப்பாடுகள் தளர்ந்து ரஷ்யாவிலிருந்து சுற்றுலாப் பயணிகள் செல்வது அதிகரித்து வருகிற நிலையில் மற்ற இடங்களைக் காட்டிலும் இது சிறப்பானதாக உள்ளது.
2024-இல் 1,500 ரஷ்யர்கள் வட கொரியாவுக்கு சுற்றுலா சென்றதாக ரஷ்ய மத்திய பாதுகாப்பு சேவை எல்லை படை தெரிவிக்கிறது.
அதற்கு மாறாக 67 லட்சம் பேர் துருக்கிக்கும், சீனாவுக்கு 19 லட்சம் பேரும் சென்றனர்.
2025-இன் இரண்டாம் காலாண்டில் 1,673 ரஷ்யர்கள் சுற்றுலாப் பயணிகளாக வட கொரியாவுக்குச் சென்றுள்ளனர். இதற்கு முன்பாக சுற்றுலா கட்டுப்பாடுகள் அமலாவதற்கு முன்பு 2010-இல் தான் இந்த அளவிற்குச் சுற்றுலா சென்றனர்.
வொன்சான் கல்மா சரிந்து வரும் வட கொரியாவின் பொருளாதாரத்தை மீட்பதற்கான கருவியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் சர்ச்சைகள் இல்லாமல் இல்லை.
2018-இல் இந்த விடுதியின் கட்டுமானம் தொடங்கியதிலிருந்து தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளன. மிகவும் கடினமான சூழ்நிலை மற்றும் குறைவான ஊதியத்தில் பெரிய திட்டங்களை முடிக்க தொழிலாளர்கள் நீண்ட நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.
இது தொடர்பாக கருத்து பெற லண்டனில் உள்ள வட கொரிய தூதரகத்தை பிபிசி தொடர்பு கொண்டது.
பட மூலாதாரம், Anastasia Samsonova
வொன்சான் கல்மாவிற்குச் செல்வதற்கான சவால்கள் மற்றும் ரஷ்யா சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தான் அடுத்த ஆண்டும் வர விரும்புவதாக அனஸ்தேசீயா கூறுகிறார்.
“அடுத்த ஆண்டு இதே இடத்திற்குச் செல்ல மொத்த குழுவையும் ஒன்று சேர்க்க யோசித்து வருகிறோம். அது நடக்குமா என்று தெரியவில்லை. அதற்கு பக்கத்திலே ஒரு ஸ்கை ரிசார்ட் இருப்பதாக கேள்விப்பட்டேன். ஒருநாள் அந்த இடத்திற்கும் செல்வேன்” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு