0
மழையுடனான சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வட மாகாணத்தில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 7,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 29 வீடுகள் சேதமடைந்துள்ளன.
அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்தில் 365 பேரும் மன்னார் மாவட்டத்தில் 7,854 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 122 குடும்பங்களைச் சேர்ந்த 399 பேர் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழமுக்கப் பிரதேசம் உருவாகியுள்ளதாகவும், அது மேற்கு – வடமேற்கு திசையினூடாக நகர்வதுடன் நாளை மேலும் தீவிரமடைந்து தாழமுக்கமாக வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தாழமுக்கமானது மேலும் தீவிரமடைவதுடன் இலங்கையின் வட கரையை நோக்கி நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இது சூறாவளியாக மாறும் பட்சத்தில் சவூதி நாட்டினால் முன்மொழியப்பட்ட “பெயின்ஜல்” எனும் பெயர் சூட்டப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.