மறைமலை நகர்: வணிகர்கள் நலனை பாதுகாக்க அதிமுக உறுதுணையாக இருக்கும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 42வது வணிகர் தினம் மற்றும் 7-வது மாநில மாநாடு மறைமலைநகர் பகுதியில் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வணிகர்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவர்கள். சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு என்று வந்தபோது மக்களவையில் அந்த மசோதாவை அதிமுக எதிர்த்து. அதிமுக வணிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இரவு 10 மணிக்கு மேல் கடைகளைத் திறந்து வியாபாரம் நடத்த சிறப்பு அரசு உத்தரவு அளிக்கப்பட்டது.
மக்களவையில் சில்லரை வணிக விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்காமல் விட்டிருந்தால் தமிழ்நாட்டில் உள்ள லட்சோப லட்சம் சிறு வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலை உருவாகி இருக்கும். இன்று வணிகர்களுக்கு தங்களை காவலாக காட்டிக் கொள்ளும் திமுக அன்று மத்திய காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் சிறு வணிகத்தில் அந்நிய முதலீடு மசோதா வாக்கெடுப்பு வந்த போது அந்நிய முதலீட்டுக்கு ஆதரவு தெரிவித்தது.
வணிகர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் சிறு வணிகத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியும். முக்கியமாக அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் எந்த ரூபத்தில் தமிழகத்தில் வந்தாலும் அதை தடுப்பதற்கு அதிமுக உங்களுக்கு எப்போதும் துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.