பட மூலாதாரம், Prakash Singh/Bloomberg via Getty Images
வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டையொட்டி, மக்களவையில் திங்கட்கிழமை பிரதமர் நரேந்திர மோதி விவாதத்தை தொடங்கி வைத்தார். இந்த விவகாரம் தொடர்பாக செவ்வாய்கிழமை மாநிலங்களவையிலும் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“வந்தே மாதரம் பாடல் 50 ஆண்டுகள் நிறைவடைந்தபோது, இந்திய நாடு அடிமையாக வாழ கட்டாயப்படுத்தப்பட்டது. 100 ஆண்டுகள் நிறைவடைந்தபோது, நாடு அவசர நிலை எனும் சங்கிலியால் கட்டுப்பட்டிருந்தது.” என்றார் பிரதமர் மோதி
மேலும் அவர் கூறுகையில், “வந்தே மாதரத்தின் 150வது ஆண்டு, அதன் புகழை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பாக உள்ளது” என்றார்.
“1857 சுதந்திரப் போருக்குப் பிறகு பிரிட்டிஷ் பேரரசு பீதியில் இருந்த சமயத்தில் இந்த பாடல் எழுதப்பட்டது. இந்தியா மீது பலவித அழுத்தங்கள் இருந்தன, பலவித கொடுமைகள் நிகழ்ந்தன,” என்றார்.
ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே ‘வந்தே மாதரம்’ தொடர்பாக சச்சரவு தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக, நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே விவாதம் நடைபெறுவதற்கு சாத்தியம் உள்ளது.
சுதந்திர போராட்டத்தின் போது வந்தே மாதரம் பாடலின் சில முக்கிய பகுதிகளை காங்கிரஸ் நீக்கியதாக பாஜக குற்றம் சாட்டுகிறது, ஆனால் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என காங்கிரஸ் கூறுகிறது.
மேலும், பாஜகவின் தலைவர்கள் பலரும் இப்பாடலை கல்வி நிறுவனங்களில் பாடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என வலியுறுத்திவருகின்றனர்.
சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள், வந்தே மாதரம் பாடலை கட்டாயப்படுத்தி திணிக்கக் கூடாது என பாஜகவினர் கோரிக்கையை எதிர்த்துவருகின்றனர்.
வந்தே மாதரம் பாடலை 1875ம் ஆண்டில் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதினார். இப்பாடல் வங்க மொழி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் உள்ளது.
இப்பாடல் பின்னர் பங்கிம் எழுதிய புகழ்பெற்ற, ஆனால் சர்ச்சைக்குரிய ‘ஆனந்தமடம்’ (Anandamath’ – 1885) என்ற நாவலில் இடம்பெற்றது.
பின்னர், ரவீந்திரநாத் தாகூர் இப்பாடலுக்கு இசையமைத்தார்.
என்ன சர்ச்சை?
பட மூலாதாரம், Raj K Raj/Hindustan Times via Getty Images
‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளை நவம்பர் 7 அன்று தொடங்கி வைத்த மோதி, 1937ம் ஆண்டில் ஃபைசாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்துக்கு முன்பாக ‘அப்பாடலின் முக்கிய பகுதிகளை காங்கிரஸ் நீக்கிவிட்டதாக’ குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும் பேசிய அவர், “1937ம் ஆண்டில் வந்தே மாதரத்தின் சில பகுதிகள், அதன் ஆன்மாவின் ஒருபகுதி நீக்கப்பட்டன. வந்தே மாதரம் பிளக்கப்பட்டது. இந்த அநீதி அழைக்கப்பட்டது ஏன்? இதுதான் பிரிவினைக்கான விதைகளை விதைத்தது,” என்றார்.
பாஜக செய்தித் தொடர்பாள சம்பிட் பத்ராவும் ‘வந்தே மாதரம்’ பாடல் தொடர்பாக நேரு ‘சௌகரியமாக இல்லை’ என குற்றம் சாட்டினார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், வந்தே மாதரம் தொடர்பாக சப்யாசாச்சி பட்டாச்சார்யா எழுதிய புத்தகத்தை மேற்கோளிட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில், “1937ம் ஆண்டு காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, ரவீந்திரநாத் தாகூர் இதுகுறித்து நேருவுக்கு எழுதியிருந்தார். வந்தே மாதரத்துடன் அவர் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டிருந்தார், பாடலின் முதல் இரு சரணங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். மேலும், ரவீந்திரநாத் தாகூரின் கடிதத்தால் ஏற்பட்ட தாக்கத்தாலேயே காங்கிரஸ் கூட்டத்தில் அத்தகைய முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், தாகூர் பிரிவினைவாத கொள்கையுடன் இருந்தததாக பிரதமர் மோதி குற்றம் சாட்டுகிறார்.” என தெரிவித்துள்ளார்.
யோகி அரசின் முடிவும் அதற்கான எதிர்ப்பும்
பட மூலாதாரம், Sunil Ghosh/Hindustan Times via Getty Images)
இதுதவிர, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நவம்பர் 10ம் தேதி அன்று மாநிலத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்களில் ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயமாக்கப்படும் என அறிவித்தார்.
அம்மாநிலத்தில் நவம்பர் 11ம் தேதி, வந்தே மாதரம் பாடலின் 150ம் ஆண்டையொட்டி நடந்த நிகழ்ச்சியில், “வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் பாரத மாதாவை எதிர்க்கின்றனர்.” என யோகி ஆதித்யநாத் பேசினார்.
மேலும், “இன்றைக்கும் இந்தியாவில் வாழும், இந்தியாவில் உண்ணும் சிலர், வந்தே மாதரம் பாடலை பாடாமல் இருக்கின்றனர்.” என்றார்.
அதற்கு பதிலாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் “முதலமைச்சர் நாற்காலி ஆட்டம் காணும்போது, அவர் வகுப்புவாதியாகி விடுகிறார்.” என தெரிவித்தார்.
மேலும் அவர், “இன்றைக்கு நாம் வந்தே மாதரம் குறித்து விவாதிக்கும் நிலையில், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அந்த சமயத்தில் இதுபற்றி விவாதித்திருக்க மாட்டார்களா? அதனால்தான் தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல் வழங்கப்பட்டிருக்கின்றன. வந்தே மாதரத்தை பாடுவது அவசியம் என்றால், அது ஏன் கட்டாயமாக்கப்படவில்லை? அதை மக்களின் விருப்பத்திற்கு விட்டுள்ளனர்,” என்றார்.
“தேசிய கீதம், தேசிய பாடல் என்றால் என்ன என பாஜக தலைவர்களிடம் பலமுறை கேட்கப்பட்டது, ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை. பாஜக தலைவர்களால் தேசிய பாடலை பாட முடியாது.” என்றார் அகிலேஷ் யாதவ்.
பள்ளிகளில் வந்தே மாதரத்தை கட்டாயமாக்குவது குறித்த அறிவிப்புக்கு முஸ்லிம் தலைவர்களுக்கும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
சமாஜ்வாதி கட்சி எம்பி ஸியாவுர் ரஹ்மான் பர்க் ஊடகங்களிடம் கூறுகையில், ”வந்தே மாதரம் பாடலை பாடுவதற்கு யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது, ஏனெனில் ஒவ்வொருவருக்கும் அதுகுறித்து முடிவெடுப்பதற்கான சுதந்திரத்தை அரசியலமைப்பு வழங்கியுள்ளது” என்றார்.
‘வந்தே மாதரம்’ பாடலின் வரலாறு என்ன?
பட மூலாதாரம், Twitter@RailMinIndia
இந்திய காலனிகளை கைப்பற்றிய பிறகு 1858ம் ஆண்டு பிரிட்டன் ராணியால் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி (1838-1894) ஆவார்.
அவர் 1891ம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவருக்கு ‘ராய் பகதூர்’ உள்ளிட்ட சில பட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்டன.
வந்தே மாதரம் பாடலை 1875ம் ஆண்டு வங்கமொழி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் எழுதினார். பின்னர், அவர் தன்னுடைய பிரபல நாவலான ஆனந்தமடம் எனும் நாவலில் அப்பாடலை சேர்த்தார்.
அந்த பாடலில் வரும் அனைத்து சின்னங்கள் மற்றும் காட்சிகளும் வங்க நிலத்துடன் தொடர்புடையவை என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல்.
அப்பாடலில் பங்கிம் 7 கோடி மக்கள் குறித்து குறிப்பிட்டிருப்பார், அது அச்சமயத்தில் வங்க மாகாணத்தின் (ஒடிஷா மற்றும் பிகாரை உள்ளடக்கியது) மொத்த மக்கள்தொகை. அரவிந்த கோஷ் அதை மொழிபெயர்த்தபோது “வங்கத்தின் தேசிய கீதம்’ என அதற்கு பெயரிட்டார்.
ரவீந்திரநாத் தாகூர் இப்பாடலுக்கு இசையமைத்தார்.
வங்கப் பிரிவினை இப்பாடலை உண்மையிலேயே வங்கத்தின் தேசிய கீதமாக்கியது. 1905ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசின் வங்கப் பிரிவினைக்கு எதிரான மக்கள் சீற்றம் கொண்ட போது, இப்பாடல் குறிப்பாக அதன் ‘கோரஸ்’ பிரிட்டிஷாருக்கு எதிரான ஆயுதமாக மாறியது.
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற இந்துக்கள், முஸ்லிம்கள் உள்ளிட்டோர் இந்த பாடலை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் பரவலாக பயன்படுத்தினர்.
பரிசாலில் (தற்போது வங்கதேசத்தில் உள்ளது) விவசாய தலைவர் எம். ரசூலின் தலைமையில் நடைபெற்ற வங்க காங்கிரஸின் மாகாண மாநாட்டில் “வந்தே மாதரம்” பாடியதற்காக பிரிட்டிஷ் ராணுவம் தாக்கியபோது, “வந்தே மாதரம்” எனும் முழக்கம் காட்டுத்தீயாக பரவியது. ஒரே இரவில் அப்பாடல் வங்கம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் எதிரொலித்தது.

பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு, ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் அஷ்ஃபகுல்லா கான் ஆகிய சுதந்திரப் போராட்ட வீரர்களும் வந்தே மாதரம் பாடலை பாடினர்.
இந்த முழக்கம், ‘இன்குலாப் ஸிந்தாபாத்” போன்றே தேசியவாதத்திற்கான தாரக மந்திரமாக மாறியது. 20ம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான தேசிய இயக்கம் நாடு முழுவதும் உருவானது.
சுதந்திர இயக்கத்தை வழிநடத்திய காங்கிரஸ், 1937ம் ஆண்டில் காந்தி, நேரு, அபுல் கலாம் ஆசாத் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை உருவாக்கி, பிரிவினையைத் தவிர்க்கும் நோக்கில் மாதரம் பாடலுக்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க அழைத்தது.
இந்த பாடலுக்கு எழுந்த மிகப்பெரிய எதிர்ப்பு, அப்பாடல் இந்திய தேசியத்தை குறிப்பிட்ட மதத்தின் பார்வையில் வரையறுப்பதாக கூறப்பட்டது. முஸ்லிம் அமைப்புகள் மட்டுமல்லாமல், சீக்கியம், சமணம், கிறிஸ்துவம், புத்த அமைப்புகளும் இக்கேள்வியை எழுப்பியது.
அதற்கு தீர்வாக, எந்தவொரு மத ரீதியிலான பார்வையும் இல்லாத முதல் இரண்டு சரணங்களை மட்டுமே பாடுவது என முன்வைக்கப்பட்டது.
எனினும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசபை போன்ற அமைப்புகள் முழு பாடலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என கூறின, ஆனால் முஸ்லிம் லீக் முழு பாடலுக்கும் எதிர்ப்பு தெரிவித்தது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு