மதுரை: வன்முறை அரசியலில் இருந்து தப்பிக்க ஆர்எஸ்எஸ், பாஜக மீது பழிபோடுகிறார் திருமாவளவன் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
மதுரை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரூர் துயரம் போன்று காஞ்சிபுரத்தில் தயாரித்த மருந்தை சாப்பிட்டு 23 குழந்தைகள் உயிரிழந்ததை ஏன் பேச மறுக்கிறோம். நீதியரசர் மீது தாக்குதலை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன் தரப்பினர் வழக்கறிஞர் ஒருவரை தாக்குகினர். திருமாவளவன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். முறைத்ததால் ஒரு தட்டு தட்டினோம் என அவர் மேடையில் பேசுகிறார். திருமாவளவன் மற்றும் அவருடன் இருப்பவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டும். ஏனென்றால் பாகிஸ்தான் காரர்கள் தான் முறைத்துக் கொண்டு இருக்கின்றனர். முறைத்தவர்களை தட்டவேண்டும் என நினைத்தால் தமிழகத்தில் திருமாவளவனுக்கு இடம் இல்லை.
தனியார் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பிய பிறகுதான் நான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டேன். நான்தான் ஏதோ வேண்டுமென்றே செய்ததாக திருமாவளவன் சந்தேகிக்கிறார். திருமாவளவன் மீது யாரும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கிறார்களா என பார்க்கவேண்டும். அப்படி இல்லையெனில் என்றால் திருமாவளவன் அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும். வன்முறைத்தனமான அரசியலை செய்து தப்பிக்க ஆர்எஸ்எஸ், பாஜக, அண்ணாமலை என பழி போடுவதை விட்டுவிட்டு இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் 2008 மும்பை தாக்குதல் பற்றி பேசினார். அதில் நாங்கள் பாகிஸ்தான் மீது தாக்குதலுக்கு தயாராக இருந்தோம். அமெரிக்காவிலிருந்து ஒரு போன் வந்த பிறகு முடிவை மாற்றினோம் என கூறினார். அதை பிரதமர் சமீபத்தில் மும்பையில் பிரதமர் சுட்டிக்காட்டினார். அதற்கு சிதம்பரம் நான் அப்படி சொல்லவில்லை வேறு மாதிரி சொன்னேன் என கூறினார்.
இன்று ப்ளூ ஸ்டார் தாக்குதல் நடந்திருக்கக்கூடாது, விந்திரா பாலையாவை அவர்களை எதிர்த்திருக்கக் கூடாது அதனால் தான் இந்திரா காந்தி அம்மையாருக்கே உயிர் ஆபத்து என்று புதிது புதிதாக பேசுகிறார். அதைப்பற்றி பேசுபவர் 1984-ல் டெல்லியில் ப்ளூஸ்டாருக்கு பிறகு சீக்கியர்களை தேடி தேடிக் கொன்றதை மறந்து விட்டார்களா. பெரிய மரம் விழும்போது பூமி அதிர தான் செய்யும் என இந்திரா குடும்பத்தினர் சொன்னார்கள். சிதம்பரம் ஞானோதயத்துடன் இன்று பேசியிருக்கிறார். இதுபோன்ற சரித்திர உண்மைகளை அவர் வெளியே கொண்டு வரவேண்டும்.
பாஜக கூட்டணி குறித்து டிடிவி கூறிய கருத்து நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அதிமுக கூட்டத்திற்கு தவெக கொடியுடன் நிர்வாகிகள் வருவது பற்றி எது உண்மை, எது பொய் என தெரியவில்லை. ஒரு சிலருக்கு வேறு ஒரு கட்சியை பிடிக்கலாம். அதனால் அவர்கள் கொடி பிடித்து வரலாம். சிலர் பாக்கெட்டில் 4 கட்சி கார்டுகள் வைத்திருப்பார்கள். இரண்டு கட்சிகளையும் சமமாக பார்ப்போம் என்ற புது கலாச்சாரத்தை பார்க்கிறேன். இது நல்லது கெட்டது என்பதை தாண்டி கூட்டத்திற்கு மக்கள் வருகின்றனர் என்பதை பார்க்கவேண்டும். திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பது ஒரு பொது லட்சியம். இதற்காக சித்தாந்தத்தை தாண்டி கூட கூட்டணி சேரலாம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.