தமிழ் திரையிசையில் பல பாடல்களில் வயலின்கள் முக்கியப் பங்கை வகித்திருக்கின்றன. பாடல்களின் பின்னணி இசையாகவும் இரு சரணங்களுக்கு இடையிலும் ஒலித்த வயலின்கள், திரையிசை ரசிகர்களுக்கு மிகச் சிறப்பான இசையின்பத்தை வழங்கியிருக்கின்றன.
டிசம்பர் 13ஆம் தேதி சர்வதேச வயலின் தினமாகக் கொண்டாடப்படும் நிலையில், வயலின் அற்புதமாகப் பயன்படுத்தப்பட்ட தமிழ் திரைப்படப் பாடல்களில் குறிப்பிடத்தக்க 10 பாடல்களின் தொகுப்பு இது.
1. எங்கே நிம்மதி
1964ல் வெளியான ‘புதிய பறவை’ படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் படத்திற்கு எம்.எஸ். விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் இணைந்து இசையமைத்திருந்தார்கள்.
அந்தக் காலகட்டத்தில், இந்தப் பாடல் உருவாக்கப்பட்டவிதமே பெரும் மலைப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட இசைக் கருவிகள் இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டன. இந்தப் பாடலின் பின்னணியில் தொடர்ந்து ஒலிக்கும் வயலின் இசை, பாடலுக்கு ஒரு மர்ம உணர்வைக் கொடுக்கும். இப்போதும் மெல்லிசை நிகழ்ச்சிகளில் இந்தப் பாடல் பாடப்பட்டால், வயலின்கள் பெரும் எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுவதைப் பார்க்கலாம்.
2. நிலவே நீ சாட்சி
1970ஆம் ஆண்டில் பி. மாதவன் இயக்கத்தில் வெளியான ‘நிலவே நீ சாட்சி’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. எம்.எஸ். விஸ்வநாதன் படத்திற்கு இசையமைத்திருந்தார். “நிலவே நீ சாட்சி.. நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம் நிலவே நீ சாட்சி” என்று கே.ஆர். விஜயா பாடப் பாட, ஜெய்சங்கர் வயலினை இசைப்பார். அடிப்படையிலேயே மிகவும் இனிமையான, உருக வைக்கும் பாடல் இது. வயலினின் இசை இந்தப் பாடலுக்கு கூடுதல் உயிர்கொடுத்தது.
பட மூலாதாரம், Thenappan P – Shree Raajalakshmi Films
படக்குறிப்பு, எங்கே நிம்மதி பாடல்
3. எனக்கொரு காதலி இருக்கின்றாள்
1976ஆம் ஆண்டில் வெளியான ‘முத்தான முத்தல்லவோ’ படத்தில் இடம்பெற்ற பாடல் இது. படத்திற்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். இதில் ஒரு பாடலை, தேங்காய் சீனிவாசனும் ஜெய் கணேஷும் பாடுவதைப் போல அமைக்கப்பட்டிருக்கும். அந்தப் பாடலை எம்.எஸ். விஸ்வநாதனும் எஸ்.பி. பாலசுப்ரமணியனும் பாடியிருந்தார்கள். பாடலைப் பாடியபடியே ஜெய் கணேஷ் வயலின் வாசிப்பதைப்போல அமைந்த பாடல் இது. இரு ஆண்கள் பாடுவதைப் போல அமைந்திருந்தாலும், மிக இனிமையாக அமைந்த பாடல் இது.
பட மூலாதாரம், Wahid
படக்குறிப்பு, நிலவே நீ சாட்சி பாடல்
4. வான் நிலா நிலா அல்ல
1977ல் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘பட்டினப் பிரவேசம்’ படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் பாடலுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் அளித்த ‘ந… நந்நா… நந்நா…நந்நா.. நந்நாநநாநநா’ என்ற மெட்டைப் பார்த்து கண்ணதாசன் கோபமடைந்து, “இப்படி ‘நாநாநாநா’ என ஒரு மெட்டைப் போட்டுக்கொடுத்தால், எப்படி எழுத முடியும்? வேற ட்யூனைப் போடு” எனச் சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டதாக எம்.எஸ். விஸ்வநாதன் ‘நான் ஒரு ரசிகன்’ நூலில் குறிப்பிடுகிறார்.
ஒரு வழியாக சம்மதித்த கண்ணதாசன் பாடலை எழுதிக் கொடுத்தார். படத்தின் நாயகி மிகச் சிறப்பாக வயலின் வாசிப்பார். ஒரு தருணத்தில் அவள் வாசிக்க, நாயகனாக நடிக்கும் சிவச்சந்திரன், அந்த மெட்டிற்கு பாடுவார். பிறகு அதே பாட்டை, நாயகியே வயலினை இசைத்தபடி பாடுவார். வயலின் இசையும் வரிகளும் போட்டிபோட்டுக்கொண்டு இன்பத்தை அளிக்கும் பாடல் இது.
5. மடை திறந்து பாடும் நதியலை நான்
1980ஆம் ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. தயாரிப்பாளர்களுக்கு மெட்டுப்போட்டுக் காண்பிக்கும் ஹரி (சந்திரசேகர்), “தலலலலா.. தால லலா.. தலலலலா.. தால லலா” என்று வாசித்து முடித்ததும் பல வயலின்கள் ஒரே நேரத்தில் ஒலிக்கும். சந்திரசேகரின் உள்ளப் பெருக்கைக் காண்பிக்கும்வகையில் இந்த இசை பயன்படுத்தப்பட்டிருக்கும். பாடல் நெடுகவே வயலின்கள் உற்சாகத்தை அள்ளித் தெளிக்கும் அற்புதமான பாடல் இது. இதே படத்தில் இடம்பெற்ற “பூங்கதவே தாள் திறவாய்” பாடலிலும் வயலின் அற்புதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்
பட மூலாதாரம், Pyramid
படக்குறிப்பு, மடை திறந்து பாடும் நதியலை நான் பாடல்
6. கனா காணும் கண்கள் மெல்ல
1982ல் சிவகுமார், சரிதா நடித்து கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘அக்னி சாட்சி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் எம்.எஸ். விஸ்வநாதன். பாடலை எழுதியவர் வாலி. இந்தப் பாடல் முழுவதுமே வயலினைப் பெரிய அளவில் பயன்படுத்தியிருப்பார் எம்.எஸ். விஸ்வநாதன்.
“கனா காணும் கண்கள் மெல்ல” என்ற வரியை நாயகன் பாடி முடித்ததும் வயலின் மெல்ல இழையும். பிறகு ஓய்ந்து, “உறங்காதோ பாடல் சொல்ல” என்ற வரி முடிந்ததும் மீண்டும் இழையும். அதேபோல, பல்லவி முடிந்ததும் மீண்டும் ஒலிக்கும் வயலின் பரபரப்பும் மர்மமும் மிகுந்த உணர்வைத் தரும். இப்படி ஒவ்வொரு வரியின் முடிவிலும் இழையும் வயலின், ஒரு மிகச் சிறந்த இசை அனுபவத்தை வழங்கும்.
பட மூலாதாரம், NH
படக்குறிப்பு, மெல்ல மெல்ல என்னைத் தொட்டு பாடல்
7. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது
1983ல் கே. ரங்கராஜ் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சமெல்லாம் நீயே’ படத்தில் இடம்பெற்ற பாடல் இது. சங்கர் – கணேஷ் இசையமைக்க, இந்தப் பாடலை வைரமுத்து எழுதியிருந்தார். வாணி ஜெயராம் என்றவுடன் பலருக்கும் நினைவில் வரும் முதல் பாடல் இது என்றாலும் வயலின் பயன்படுத்தப்பட்ட விதத்திற்காகவும் ரசிக்கப்பட்ட பாடலும்கூட.
பாடலின் துவக்கத்தில் மோகனும் ராதாவும் மகிழச்சியில் குதிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அப்போது பின்னணியில் இசைக்கும் வயலின் அந்த மகிழ்ச்சியை பார்ப்பவர்களிடமும் கடத்தும்.
8. மெல்ல மெல்ல என்னைத் தொட்டு
1984ல் வெளிவந்த ‘வாழ்க்கை’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். இசை, இளையராஜா. வயலின் ஆதிக்கம் செலுத்தும் பாடல் என்றதும் நினைவுக்கு வரும் பாடல் இது. பாடலை, பி. சுசீலாவும் ராஜ் சீதாராமனும் பாடியிருப்பார்கள். பாடலின் துவக்கத்திலும் இறுதியிலும் வயலின்கள் அட்டகாசமாக ஒலிக்கும். வித்தியாசமான இசையோடு வெளியான இந்தப் பாடல், தமிழ் திரை இசையில் ஒரு அரிதான பாடல்.
பட மூலாதாரம், Bayshore Records
படக்குறிப்பு, காலம் காலமாக வாழும் காதலுக்கு பாடல்
9. காலம் காலமாக வாழும் காதலுக்கு
1986ஆம் ஆண்டில் வெளிவந்த ‘புன்னகை மன்னன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இசையமைத்தவர் இளையராஜா. வயலின் அதிகம் ஒலிக்கும் பாடல் என்றால் ஒருவருக்கு உடனடியாக நினைவுக்கு வரும் பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடலில் முழுக்க முழுக்க வயலினே ஆதிக்கம் செலுத்தும். பாடலின் துவக்கத்திலும் சரணங்களுக்கு இடையிலும் ஒலிக்கும் வயலின்கள், இந்தப் பாடலை வேறொரு உயரத்திற்கு எடுத்துச் செல்லும்.
பட மூலாதாரம், Ayngaran Music
படக்குறிப்பு, ராக்கம்மா கையத் தட்டு பாடல்
10. ராக்கம்மா கையத் தட்டு
1991ல் வெளியான இளையராஜா இசையில் ‘தளபதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல். பாடலை வாலி எழுத, எஸ்.பி. பாலசுப்ரமணியனும் சுவர்ணலதாவும் பாடியிருந்தார்கள். ஒட்டுமொத்தமாக பார்த்தால், உலக அளவில் மிகப் பிரபலமான திரையிசைப் பாடல்களில் இதுவும் ஒன்று. ஆனால், வயலின் இசையை அதிகம் பயன்படுத்தியதற்காக கவனிக்கப்பட வேண்டிய பாடலும்கூட. பாடலின் துவக்கத்தில் இருந்து முடிவுவரை முழுக்க முழுக்க வயலினை மிக அற்புதமாக இளையராஜா பயன்படுத்தியிருப்பார்.