• Mon. Aug 25th, 2025

24×7 Live News

Apdin News

வரதட்சணை கொடுமையால் எரித்துக் கொல்லப்பட்ட பெண் : என்கவுண்டரில் சுடப்பட்ட கணவன் – இதுவரை நடந்தது என்ன?

Byadmin

Aug 25, 2025


தீயில் கருகி உயிரிழந்த நிக்கி

பட மூலாதாரம், ATL

படக்குறிப்பு, நிக்கியின் மரணத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அவர்களின் மொத்த கிராமமும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்

டெல்லிக்கு அருகிலுள்ள கிரேட்டர் நொய்டாவின் தாத்ரி பகுதியில், நிக்கியின் இனிய குழந்தைப் பருவம் கழிந்த வீட்டில் இப்போது சிலரின் கண்களில் கண்ணீர், சிலரின் முகத்தில் கோபம், மற்றும் சிலர் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆகஸ்ட் 21 அன்று, கிரேட்டர் நொய்டாவின் சிர்சா கிராமத்தில் நிக்கி என்ற இளம் பெண் எரித்து கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைக்கு மாமியார் வீட்டார் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது, இதில் முதல் குற்றவாளியாக நிக்கியின் கணவர் விபின் சேர்க்கப்பட்டுள்ளார்.

நிக்கியின் மீது நடத்தப்பட்ட வன்முறையின் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை நிக்கியின் மரணத்திற்கு முன் அவரது சகோதரி பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட நிக்கியின் கணவர் விபின், தான் குற்றமற்றவர் என்றும், நிக்கியின் மரணம் தானாக நிகழ்ந்தது என்றும் வாதிடுகிறார்.

நிக்கியின் கணவர் விபின் மற்றும் மாமியார் வீட்டார் தொடர்ந்து விலையுயர்ந்த கார் மற்றும் 36 லட்சம் ரூபாய் ரொக்கமும் கேட்டு வந்ததாக நிக்கியின் தந்தை குற்றம்சாட்டுகிறார்.

இதனாலேயே நிக்கியின் மீது வன்முறை நடந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட விபின், நிக்கியின் மாமியார் தயாவதி, மாமனார் சத்வீர் மற்றும் விபினின் சகோதரர் ரோகித் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறை பிடியிலிருந்து தப்ப முயன்ற விபின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

திருமணம் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது நடந்தது

நிக்கி விபின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்

பட மூலாதாரம், ATL

படக்குறிப்பு, நிக்கி மற்றும் அவரது சகோதரி காஞ்சனின் திருமணங்கள் ஒரே குடும்பத்தில் 2016 டிசம்பரில் நடந்தது

தாத்ரியின் ரூப்வாஸ் கிராமத்தைச் சேர்ந்த நிக்கி மற்றும் அவரது மூத்த சகோதரி காஞ்சன் ஆகியோரின் திருமணங்கள், 2016 டிசம்பரில் கிரேட்டர் நொய்டாவின் சிர்சா கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களுடன் நடந்தது.

அந்த நேரத்தில், நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக பெரும்பாலோரிடம் பணப் பற்றாக்குறை இருந்தது. இருந்தாலும் திருமணங்களுக்கான செல்வில் தாங்கள் எந்த குறையும் வைக்கவில்லை என நிக்கியின் தந்தை பிகாரி சிங் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

நிக்கியின் கணவருக்கு திருமணத்திற்கு பிறகு ஒரு காரும் வழங்கப்பட்டதாகவும், ஆனால் விலையுயர்ந்த காரும், 36 லட்சம் ரூபாய் ரொக்கமும் வேண்டும் என மணமகன் வீட்டில் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

“நிக்கி தாக்கப்படுவதை மூத்த சகோதரி காஞ்சன் தானே வீடியோவாக பதிவு செய்தார். அவர் நிக்கியை காப்பாற்ற தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்தார், ஆனால் நிக்கி தீயில் எறியப்பட்டார். பின்னர், அவர் நிக்கியை ஒரு போர்வையில் சுற்றி அண்டை வீட்டாரின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், ஆனால் நிக்கியை காப்பாற்ற முடியவில்லை,” என பிகாரி சிங் சொல்கிறார்.

நிக்கி, அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவரது உடல் தீயில் பெருமளவு கருகியிருந்ததால், டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால், சப்தர்ஜங் மருத்துவமனையை அடைவதற்கு முன்பே நிக்கி உயிரிழந்தார்.

காஞ்சனால் பதிவு செய்யப்பட்ட வீடியோவை சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்துள்ளனர். இப்போது, ரூப்வாஸ் கிராமத்தில் நிக்கியின் குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டாரிடையே துக்கமும் கோபமும் நிலவுகிறது.

“இனி என் மூத்த பேத்தியை என் வீட்டில் வைத்திருப்பேன், இல்லையெனில் அவரையும் வாழ விடமாட்டார்கள். இங்கு அவருக்கு ஒரு அறையை கட்டி தருவேன், அவர் தன் குழந்தைகளைப் படிக்க வைப்பார்,” என நிக்கியின் பாட்டி பூல்வதி, பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

நிக்கியின் சகோதரி காஞ்சனுக்கு இரு குழந்தைகள் உள்ளனர், அதேசமயம் நிக்கிக்கு சுமார் ஆறு வயதுடைய ஒரு மகன் உள்ளார்.

நிக்கியின் மகன் தனது தாய்க்கு நேர்ந்த கொடூரம் குறித்து பேசியதும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

“இதற்காகத்தான் நாங்கள் ஒரு பெண்ணை பெற்று வளர்க்கிறோமா? முன்பும் அவர் தாக்கப்பட்டபோதும், அவர் தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார், ஆனால் பஞ்சாயத்தார் அறிவுரைப்படி, நாங்கள் அவரை மீண்டும் மாமியார் வீட்டிற்கு அனுப்பினோம்,” என நிக்கியின் உறவினர் ஹேமலதா கூறுகிறார்.

நிக்கியின் அத்தை ஹேமலதா
படக்குறிப்பு, நிக்கியின் உறவினர் ஹேமலதா, நிக்கியின் பாதுகாப்புக்கு உறுதியளித்தவர்கள் மீதும் கோபமாக உள்ளார்.

“சமூகத்தின் விருப்பத்தையேற்று நாங்கள் சமரசம் செய்தோம். மாமியார் வீட்டார் இனி இப்படி நடக்காது என்று கூறினர். ஆனால், எங்கள் மகளுக்கு என்ன நடந்தது என பாருங்கள்,” என ஹேமலதா மேலும் கூறுகிறார்.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு நிக்கி தனது தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அதன் பின்னர், இந்த விவகாரத்தில் ஒரு பஞ்சாயத்து கூட்டப்பட்டது.

பஞ்சாயத்தாரின் உறுதி மற்றும் கணவர் மன்னிப்பு கேட்டதன் அடிப்படையில் நிக்கியை மீண்டும் மாமியார் வீட்டிற்கு அனுப்பியதாக நிக்கியின் தந்தை கூறினார்.

குற்றம்சாட்டப்பட்டவர் கூறியது என்ன?

குற்றம்சாட்டப்பட்ட விபின் தனது தாய் தயாவதியுடன் (கோப்பு புகைப்படம்)

பட மூலாதாரம், ATL

படக்குறிப்பு, குற்றம்சாட்டப்பட்ட விபின் தனது தாய் தயாவதியுடன் (கோப்பு புகைப்படம்)

இந்த வழக்கில், நிக்கியின் கணவர், மாமியார், மாமனார், மற்றும் கொழுந்தனார் (தனது கணவர்) ஆகியோருக்கு எதிராக நிக்கியின் சகோதரி காஞ்சன் புகார் பதிவு செய்தார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிக்கியின் கணவர் விபின் மற்றும் அவரது தாய் தயாவதியை காவல்துறை கைது செய்தது.

இந்த வழக்கில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விபின் மறுத்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விபினிடம் பத்திரிகையாளர்கள் இது குறித்து பல கேள்விகளைக் கேட்டனர்.

“நான் அவரை கொல்லவில்லை, எதுவும் செய்யவில்லை, அவர் தானாக இறந்துவிட்டார். கணவன்-மனைவிக்கு இடையே எல்லா இடங்களிலும் சண்டை நடக்கும். இதற்கு மேல் எனக்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை,” என விபின் சொல்கிறார்.

காவல்துறையின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை விசாரணையின்போதும் விபின் காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்றார்.

இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட எரியக்கூடிய பொருளை பறிமுதல் செய்யும்போது குற்றம் சாட்டப்பட்டவர் தப்பிக்க முயன்றதாக கிரேட்டர் நொய்டாவின் கூடுதல் காவல் ஆணையர் (ஏ.டி.சி.பி.) சுதீர் குமார் கூறுகிறார்.

“குற்றம் சாட்டப்பட்டவர், காவல் உதவி ஆய்வாளரின் துப்பாக்கியைப் பறித்து தப்பிக்க முயன்றார். காவல்துறை அவரைச் சுற்றி வளைத்தபோது, அவர் காவலர்கள் மீது துப்பாக்கியால் சுட்டார். பதிலடியாக காவல்துறையும் துப்பாக்கிச் சூடு நடத்தியது, குண்டு அவரின் காலில் பட்டது,” என சுதீர் குமார் மேலும் கூறினார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடு பூட்டப்பட்டுள்ளது

குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடு பூட்டப்பட்டுள்ளது
படக்குறிப்பு, கிரேட்டர் நொய்டாவில் நிக்கியின் மாமியார் வீடு பூட்டப்பட்டுள்ளது, மேலும் அண்டை வீட்டார் எதுவும் பேச மறுத்துவிட்டனர்.

விபின் எந்த வேலையும் செய்யவில்லை, எனவே நிக்கி சில ஆண்டுகளுக்கு முன் தனது சகோதரியுடன் இணைந்து மாமியார் வீட்டின் மேல் மாடியில் ஒரு அழகு நிலையத்தைத் தொடங்கினார் என நிக்கியின் தந்தை மற்றும் பிற உறவினர்கள் கூறுகின்றனர்.

அழகு நிலையத்தின் வியாபாரம் நன்றாக நடந்து வந்தது, ஆனால் மாமியார் வீட்டாரின் அழுத்தம் காரணமாக சில மாதங்களுக்கு முன் அவர்கள் அதை மூட வேண்டியதாயிற்று.

பிபிசி கிரேட்டர் நொய்டாவில் உள்ள குற்றம்சாட்டப்பட்டவரின் வீட்டிற்கு சென்றபோது, அங்கு பூட்டு தொங்கியது.

இந்த வீட்டின் வெளிப்புறத்தில் சில கடைகள் உள்ளன, அவை மூடப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு மூடிய மளிகைக் கடையில் ‘விபின்’ என்ற பெயர் எழுதப்பட்டிருந்தது, இது நிக்கியின் கணவரின் பெயர்.

எனினும், இந்த வழக்கு குறித்து விபினின் அண்டை வீட்டாரும் பேசத் தயாராக இல்லை.

அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மட்டும், நிக்கியின் வீட்டிலிருந்து முன்பு அடிக்கடி சண்டை மற்றும் அடிக்கும் சத்தங்கள் வந்ததாகக் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

“நிகழ்வு குறித்த தகவல் கிடைத்தவுடன், காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. ஆனால், நிக்கி முன்பு தாக்கப்பட்டதாக எந்த தகவலும் காவல்துறையிடம் தெரிவிக்கப்படவில்லை,” என தாத்ரியின் காவல் நிலையப் பொறுப்பாளர் (எஸ்.எச்.ஓ.) அரவிந்த் குமார், பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

நிக்கியின் மூத்த சகோதரி இந்த வழக்கை இப்போது சட்டத்தின் முன் கொண்டு சென்றுள்ளார். அவர்களின் சகோதரர் அதுல், இதில் தாமதமான நடவடிக்கையாக இருக்கலாம் என வருந்துகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin