பட மூலாதாரம், Getty Images
ஆபரேஷன் சிந்தூர் பற்றி இந்திய ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி சமீபத்தில் பேசியிருந்த நிலையில் பாகிஸ்தான் அதற்கு எதிர்வினையாற்றியுள்ளது, “நமது அண்டை நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பு ஆக்கிரமிப்பு மேற்கொள்ள காரணங்களைத் தேடிவருகிறது” என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு பிரிவு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி மற்றும் விமானப் படை தளபதியின் கருத்துக்களை தனது அறிக்கையில் மேற்கோள்காட்டியுள்ளது என பிபிசி உருது சேவை தெரிவிக்கிறது.
அதில், “பாகிஸ்தானை வரைபடத்திலிருந்து துடைத்தெறியும்” நோக்கம் இருந்தால் இந்தியா ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய சூழல் எழுந்தால் இரண்டு பக்கங்களிலும் இழப்புகள் இருக்கும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்திய ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி, பாகிஸ்தான் வரலாற்றிலும் வரைபடத்திலும் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அந்நாடு ‘அரசு ஊக்குவிக்கும் பயங்கரவாதத்தை’ நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
முன்னதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சர் க்ரீக் விவகாரம் பற்றியும் விமானப் படை தளபதி அமர் ப்ரீத் சிங் இந்தியா – பாகிஸ்தான் ராணுவ மோதல் பற்றியும் பேசியிருந்தனர்.
பிபிசி உருது செய்தியின் படி, பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் இந்திய பாதுகாப்பு அமைப்புகளின் தலைவர்கள் தெரிவிக்கும், “யதார்த்தமற்ற, ஆத்திரமூட்டுகிற மற்றும் போரைத் தூண்டும் கருத்துக்கள்” ஆழ்ந்த கவலையளிப்பதாகத் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2025-ல் காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ராணுவம் மே 6-ஆம் தேதி இரவு பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம்களைத் தாக்கியது. இதற்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிடப்பட்டிருந்தது.
இதனால் இரு நாடுகளுக்குமிடையே ராணுவ மோதல் நடைபெற்றது. இந்த மோதல் மே 10-ஆம் தேதி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட உடன் முடிவுக்கு வந்தது.
இந்திய ராணுவ தளபதி என்ன கூறினார்?
பட மூலாதாரம், ANI
ராணுவ தளபதி உபேந்திர துவிவேதி கடந்த வெள்ளிக்கிழமை ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீகங்காநகர் பகுதியின் அனுப்கருக்குச் சென்று ராணுவ ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
அங்கு ராணுவத்தின் நடவடிக்கைகளை ஆய்வு செய்த பிறகு வீரர்கள் எந்நேரமும் தயார்நிலையில் இருக்கும்படி கூறினார்.
“ஆபரேஷன் சிந்தூர் 1.0-ன் போது இந்தியா கட்டுப்பாட்டுடன் இருந்தது. ஆனால் அதே போன்றதொரு சூழ்நிலை மீண்டு எழுந்தால் நாம் முழுவதும் தயாராக இருக்கிறோம். இந்த முறை இந்தியா முன்பு கடைப்பிடித்த கட்டுப்பாட்டுடன் இருக்காது.” என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர், “இந்த முறை நாம் மேலும் நடவடிக்கை எடுப்போம். பாகிஸ்தான் தான் வரலாற்றிலும் வரைபடத்திலும் நிலைத்திருக்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டிய அளவிற்கு அந்த நடவடிக்கைகள் இருக்கும்.” என்றார்.
வீரர்கள் தங்களின் ஏற்பாடுகளை முழுமையாக வைத்திருக்குமாறும் அவர் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூரில் ராணுவ இலக்குகளைத் தாக்குவதற்கு எந்த நோக்கமும் இல்லை எனக் கூறிய அவர், “ராணுவம் ஒன்பது ‘தீவிரவாத இலக்குகளை’ அடையாளம் கண்டிருந்தது. எங்களுக்கு தீவிரவாத இலக்குகளை மட்டுமே அழிக்க வேண்டும். குறிப்பாக தீவிரவாதிகளுக்குப் பயிற்சியளிக்கும் இடங்களையும் அவர்களைக் கையாள்பவர்களையும் தான்.” எனத் தெரிவித்தார்.
இந்த முறை ஒவ்வொரு இலக்கிலும் ஏற்பட்ட அழிவுக்கான ஆதாரத்தை ஒட்டுமொத்த உலகிற்கும் காண்பித்ததாகக் கூறும் உபேந்திர துவிவேதி, முன்னர் பாகிஸ்தான் இதனை மறைத்து வந்ததாகவும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகம் என்றும் தெரிவித்தார்.
‘வரலாறும் வரைபடமும் மாறும்’
பட மூலாதாரம், ANI
பாகிஸ்தான் சர் க்ரீக் அருகே ராணுவ உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருவதாக ராஜ்நாத் சிங் கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி தெரிவித்திருந்தார்.
குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள ராணுவ நிலையில் நடைபெற்ற ஆயுத பயிற்சி முகாமில் கலந்து கொள்ள வந்திருந்த ராஜ்நாத் சிங், சுதந்திரத்திற்கு 78 ஆண்டுகள் கழித்தும் சர் க்ரீக் பகுதியில் எல்லை தகராறு தூண்டப்படுகிறது எனத் தெரிவித்தார்.
“சர் கீர்க் பகுதியை ஒட்டிய இடங்களில் தனது ராணுவ உள்கட்டமைப்புகளை பாகிஸ்தான் ராணுவம் விரிவுபடுத்திய விதமே அதன் நோக்கங்களைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் தவறான செயல்கள் செய்ய பாகிஸ்தான் ஏதாவது முயற்சி செய்தால் ‘அதன் வரலாறும் வரைபடமும் மாறக்கூடிய அளவிலான எதிர்வினையை எதிர்கொள்ள நேரிடும்.” என்றார்.
பாகிஸ்தானின் சிந்த் மாகாணம் மற்றும் இந்தியாவின் குஜராத் இடையே 96 கிலோமீட்டர் இடைவெளியில் அமைந்துள்ள சதுப்பு நிலப்பரப்பு தான் சர் க்ரீக். இதனைப் பகிர்ந்து கொள்வதில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நீண்டகாலமாக தகராறு இருந்து வருகிறது.
இந்த இடம் முன்னர் பான் கங்கா என அழைக்கப்பட்டது. பின்னர் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சர் க்ரீக் எனப் பெயரிடப்பட்டது. அப்போது இருந்தே இந்தப் பகுதி சர்ச்சைக்குள் சிக்கித் தவிக்கிறது. இந்த கடல்சார் எல்லையை இந்தியாவும் பாகிஸ்தானும் வேறு வேறாக பார்க்கின்றன.
வளைகுடாவின் நடுப்பகுதியில் இருந்து எல்லை வகுக்கப்பட வேண்டும் என இந்தியா கூறுகிறது. ஆனால் பாகிஸ்தான் தனது கரையிலிருந்து எல்லை வகுக்கப்பட வேண்டும் எனக் கோருகிறது. ஏனென்றால் பிரிட்டிஷ் அரசு 1914-ல் இந்தப் பகுதி கடல் போக்குவரத்துக்கு உகந்தது அல்ல எனக் கூறி அவ்வாறு தீர்மானித்தது.
பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகக் கூறும் இந்திய விமானப்படை
பட மூலாதாரம், Getty Images
இந்திய விமானப்படையின் 93வது ஆண்டு நிகழ்வின்போது டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய விமானப்படைத் தளபதிஅமர் ப்ரீத் சிங், ஆபரேஷன் சிந்தூரில் 4, 5 பாகிஸ்தான் போர் விமானங்கள், பெரும்பாலும் எஃப்-16 சுட்டு வீழ்த்தப்பட்டது.” எனத் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் பல்வேறு விமான நிலைகளை இந்திய விமானப்படை தாக்கியதாக அவர் குறிப்பிட்டார். அதில் ரேடார்கள், கட்டளை மையங்கள், ஓடுதளங்கள், ஹேங்கர்கள் மற்றும் நிலத்திலிருந்து ஏவுகணைகளைச் செலுத்தும் அமைப்புகள் பாதிப்படைந்தன என்றும் குறிப்பிட்டார்.
ஆபரேஷன் சிந்தூரில் எந்த வகை பாகிஸ்தான் போர் விமானம் அழிக்கப்பட்டது என்பது முதல் முறையாக உறுதி செய்யப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமர் ப்ரீத் சிங், ஐந்து பாகிஸ்தான் போர் விமானங்களும் ஒரு பெரிய விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனாலும் அவை எந்த மாடல் என்பதை தெரிவிக்கவில்லை.
“பாகிஸ்தான் இழப்புகளைப் பொருத்தவரை, நாங்கள் பல்வேறு இலக்குகளைக் குறிவைத்தோம். இந்தத் தாக்குதல்களில் நான்கு இடங்களில் ரேடார்களும், இரண்டு இடங்களில் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களும், இரண்டு ஓடுதளங்களும், மூன்று வெவ்வேறு நிலையங்களில் மூன்று ஹேங்கர்களும் சேதமடைந்தன. ஒரு சி-130 ரக விமானம் மற்றும் 4-5 போர் விமானங்கள், பெரும்பாலும் எஃப்-16 போன்றவற்றுக்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அப்போது அங்கு எஃப்-16 இருந்தன மற்றும் அவை பழுதுபார்க்கப்பட்டு வந்தன.” எனத் தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய விமானப்படையின் நவீனமான நீண்ட தூர இலக்கு கொண்ட நிலத்திலிருந்து வான் நோக்கி ஏவுகணைகளைச் செலுத்தும் அமைப்பு பாகிஸ்தானை அதன் சொந்த எல்லைக்கு உள்ளே சிறிது தூரம் வரை செயல்பட விடாமல் தடுத்தது என இந்திய விமானப்படைத் தளபதி கூறுகிறார்.
இந்தியா உடனான ராணுவ மோதலின்போது இந்திய போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தொடர்ந்து தெரிவித்துவந்தது. ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் பாகிஸ்தான் வழங்கவில்லை.
பாகிஸ்தான் ராணுவம் கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
சர் க்ரீக் பற்றி ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்துக்கு தனியாக எதுவும் பதில் தெரிவிக்காத பாகிஸ்தான், அதன் ராணுவத்தைக் குறிவைத்து பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி மற்றும் விமானப்படை தளபதி கூறிய விஷயங்களுக்கு, “இத்தகைய கருத்துகள் தெற்கு ஆசியாவின் அமைதி மற்றும் நிலைத்தன்மை மீது தீவிரமான தாக்கம் ஏற்படுத்தும்.” எனத் தெரிவித்ததாக பிபிசி உருது வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிபிசி உருதுவின்படி, ராணுவத்தின் அறிக்கையில், “மே மாதம் இந்தியாவின் ஆக்கிரமிப்பு இரு அணு ஆயுத நாடுகளையும் போரின் விளிம்பிற்கு கொண்டு வந்தது. ஒருவேளை இந்தியா அதன் போர் விமானங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மறந்திருக்கும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தரப்பிலிருந்து வெளிப்படுத்தப்படும் ஆத்திரமூட்டும் கருத்துகள் எதிர்காலத்தில் பெரிய அளவிலான அழிவிற்கு இட்டுச் செல்லும் என பாகிஸ்தான் ராணுவம் எச்சரித்துள்ளது. மேலும் பாகிஸ்தான் பின்வாங்காது என்றும் தயக்கமின்றி பதிலடி கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
“எதிரிநாட்டின் அனைத்து மூலை வரை சண்டையிட பாகிஸ்தான் பாதுகாப்பு படைகளிடம் திறனும் உறுதிப்பாடும் உள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு