8
இலங்கை முழுவதும் பெய்துவரும் கனமழை காரணமாக களனி ஆற்றின் மேல் படுகையிலுள்ள நீர்த்தேக்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மட்டம் பெருமளவு அதிகரித்து வருகிறது.
இதனால் அண்மைய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக ஆபத்துள்ள வெள்ள நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் களனி ஆற்றுப் படுகையின் தாழ்வான பகுதிகளில் இந்த வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
எனவே, அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Live Updates
The content will auto-update after 60 seconds
10:39:28
ரயில் சேவைகள் இடைநிறுத்தம்
இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலை காரணமாக, இன்று (28) காலை 6 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே திணைக்களம் இடைநிறுத்தியுள்ளது.
தொடர்ந்து பெய்யும் கனமழையால் பல ரயில் பாதைகளில் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மரங்கள் விழும் அபாயம் அதிகரித்து வருவதால், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக பொது மேலாளர் (செயல்பாடுகள்) சந்திரசேன பண்டாரா தெரிவித்தார்.
10:17:27
கொழும்பு நிலை நாளை மோசமடையலாம்
50க்கும் மேற்பட்ட பெரிய ஆறுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட சிறிய ஆறுகள் பெருக்கெடுத்தள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
அத்துடன், அவிசாவளையில் உள்ள நீர் அளவைக் கருத்தில் கொண்டு, 2016ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கை விட அதிகமான வெள்ளம், நாளை (29) இரவு கொழும்பில் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், களனி கங்கையின் நீர் மட்டம் தற்போது உயர்ந்து வருவதாகவும் அவர் எச்சரித்தார்.
இதனால் கொழும்பின் சில பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
10:10:05
பொலிஸாரும் முப்படையினரும் களத்தில்
தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காகப் பொலிஸாரும் முப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏற்கனவே இராணுவத்தினர் சென்று கொண்டிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக விமானப்படை விமானங்கள், கடற்படைப் படகுகள் மற்றும் இராணுவ வீரர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், சில இடங்களில் வானிலை அதற்குத் தடையாக இருப்பதாகவும், நிலைமையைச் சமாளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களை மீட்க 20,500 இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் உணவு வழங்கும் பொறுப்பை ஜனாதிபதி, முப்படையினரிடம் ஒப்படைத்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
இதுவரை 4,766 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் பிரதேச செயலாளர்களைத் தொடர்புகொள்வது கடினமாக இருப்பதாகவும் இராணுவத் தளபதி கூறினார்.
10:04:18
44,192 குடும்பங்கள் பாதிப்பு
25 மாவட்டங்களில் உள்ள 285 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 44,192 குடும்பங்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 42 வீடுகள் முழுமையாகவும், 2,810 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.
10:03:53
பிரதான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
நீரேந்துப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக, இலங்கையின் 6 முக்கிய ஆறுகளின் தாழ்நிலப் பகுதிகளில் ‘அபாயகர வெள்ள நிலைமை’ உருவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மகாவலி கங்கை, தெதுறு ஓயா, மஹா ஓயா, கலா ஓயா, மாணிக்க கங்கை மற்றும் மல்வத்து ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இந்த ஆறுகளுக்கு அண்மையில் வசிக்கும் பொதுமக்கள், தற்போது நிலவும் அதி தீவிர வெள்ள நிலைமையிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, இந்த ஆறுகளின் இரு மருங்கிலும் உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் தாமதமின்றி, உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தி உள்ளது.