பட மூலாதாரம், Getty Images
போப் பிரான்சிஸுக்கு பிறகு அடுத்த போப் ஆண்டவரைத் தேர்வு செய்யும் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டின் அடிப்படை விதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நிறுவப்பட்ட ஒன்று.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் உள்ள கார்டினல்கள், இத்தகைய முக்கியமான முடிவை எடுக்க தங்களை வெளி உலகிடம் இருந்து முழுமையாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதியை ‘போப் பத்தாம் கிரகோரி’ நிறுவினார்.
காலப்போக்கில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், அவர் நிறுவிய விதிகள் இன்றும் நடைமுறையில் உள்ளன.
பத்தாம் கிரிகோரி தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் ஒரு பாதிரியாராகக்கூட இல்லை என்றாலும், அவரது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே (1271-1276) நீடித்தது என்றாலும், வரலாற்றில் மிகவும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய போப்களில் ஒருவராக அவர் மாறினார்.
போப் பத்தாம் கிரிகோரியின் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள, நீங்கள் அவர் வாழ்ந்த காலத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
பிளவுபட்ட திருச்சபை
கடந்த 13ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், கிறிஸ்தவத்தில் ஆழமான பிளவு ஏற்பட்டது. 11ஆம் நூற்றாண்டில் இருந்து, போப் ஆண்டவருக்கும் சார்லமேனின் பிராங்கிஷ் பேரரசுக்கும் இடையிலான முரண்பாடுகள் இருந்தது. இந்த பிரதேசம் இன்றைய ஜெர்மனியில் உள்ளது
தற்கால வரலாற்று ஆசிரியர்கள் இந்தப் பேரரசை புனித ரோமானிய பேரரசு என்று அழைக்கின்றனர்.
“இப்போது நாம் புனித ரோமானிய பேரரசு என்று அழைக்கும் பேரரசின் பேரரசரும், போப்பும் கிறிஸ்தவ உலகின் தலைமைக்கான அதிகாரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்” என்று ஸ்பெயினில் உள்ள சிஈயூ சான் பாப்லோ பல்கலைக்கழக இடைக்கால வரலாற்றுப் பேராசிரியர் அலெஜான்ட்ரோ ரோட்ரிகஸ் டி லா பெனா, பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.
“பல நூற்றாண்டுகளாக, பேரரசர்கள் போப்களுடன் கடுமையாக முரண்பட்டனர். சில நேரங்களில் அது ராணுவ மோதல் வரை சென்றது.” என்றும் அவர் கூறினார்.
போப் ஆண்டவராக இருந்த நான்காவது போப் கிளெமென்ட் நவம்பர் 29, 1268 அன்று விட்டர்போ எனும் நகரத்தில் இறந்தார். அப்போது போப் ஆண்டவர் தலைமையிலான நாடுகளின் ஒரு பகுதியாக இருந்த விட்டர்போ, தற்போதைய வாடிகனுக்கு அப்பால் நீண்டிருந்தது.
வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி, போப் கிளெமென்ட் இறந்த இடத்திற்குச் சென்ற கார்டினல்கள், அடுத்த போப் ஆண்டவரைத் தேர்வு செய்யும் நடைமுறையில் ஈடுபட்டனர்.
பட மூலாதாரம், Getty Images
ஆனால் கார்டினல்கள் இரண்டு முகாம்களாகப் பிளவுபட்டிருந்தனர். இது அந்தக் காலகட்டத்தில் நிலவிய பதற்றங்களைப் பிரதிபலித்தது.
ஒருபுறம், புனித ரோமானிய பேரரசை ஆதரித்த கிபெல்லைன்ஸ் எனும் குழுவாக இத்தாலிய கார்டினல்கள் இணைந்திருந்தனர். மறுபுறம், புனித ரோமானிய பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் அப்போதைய கத்தோலிக்க திருச்சபையின் அரசியல், பொருளாதார மற்றும் மதத்தின் சக்தி இருப்பதை எதிர்த்த குயெல்ப்ஸ் என்று அழைக்கப்படும் பிரெஞ்சு கார்டினல்கள் இருந்தனர்.
இருபுறமும் போட்டி மிகவும் அதிகமாக இருந்ததால், கார்டினல்கள் ஓர் உடன்பாட்டை எட்ட முடியாமல் மாதங்கள் கடந்து சென்றன.
போப் ஆண்டவர் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த வேட்பாளரும் பதவியேற்கத் தேவையான பெரும்பான்மையை அடையவில்லை. எனவே மாநாடு நடைபெற்ற காலம் நீண்டு கொண்டே சென்றது.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நீடித்த இந்த மாநாடு திருச்சபையின் வரலாற்றில் மிக நீண்டகாலம் நீடித்த மாநாடாக மாறியது.
தீர்வு கிடைக்காமல் காத்திருந்து சோர்வடைந்த விட்டர்போ நகர கவுன்சிலர்கள், கார்டினல்களை அவர்கள் சந்தித்த அரண்மனையிலேயே பூட்டி வைத்தனர். மேலும், ஓர் உடன்பாட்டை எட்டும்படி கட்டாயப்படுத்த அவர்களின் அன்றாட உணவைக்கூட குறைத்தனர்.
ஒரு ‘சிறிய கதாபாத்திரம்’
பட மூலாதாரம், Getty Images
தியோபால்டோ விஸ்கொண்டி என்பவர் எதிர்பாராத விதமாக போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவரை பாதிரியாராகக்கூட நியமிக்கப்படாமல், மூத்த தேவாலய அதிகாரியாக மட்டுமே தியோபால்டோ அப்போது இருந்து வந்தார்.
அடுத்த போப் ஆண்டவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில், புனித ஜீன் டி’ஏக்கரில் (இன்றைய சிரியா) இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெற்ற சிலுவைப் போரில் ஈடுபட்டிருந்தார்.
” ஒரு சிறிய பங்கு வகித்த ஒரு நபரை அவர்கள் ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பது தற்போது கிடைக்கக்கூடிய வரலாற்று ஆதாரங்களைக் கொண்டு நம்மால் கண்டுபிடிக்கவே முடியாத ஒரு மர்மமாக உள்ளது” என்கிறார் ரோட்ரிக்ஸ் டி லா பெனா.
தியோபால்டோ விஸ்கொண்டி ஓர் இத்தாலியர். அதுவரை அவர் பாதிரியார் பதவியைக்கூட பெறவில்லை என்றாலும், பல்வேறு பதவிகளில் இருந்த பல பிரெஞ்சு கார்டினல்களை சந்தித்துப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருந்தது. மேலும் அவர்களுடன் நல்ல தொடர்புகளும் அவருக்கு இருந்தன.
“அதனால், அவர் ஒரு சமரச வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம் என்று நாம் ஊகிக்கலாம்,” எனக் குறிப்பிடுகிறார் ஸ்பானிய வரலாற்று ஆசிரியரான ரோட்ரிக்ஸ் டி லா பெனா. ஆனாலும் திருச்சபை ஆட்சியில் ஏற்பட்டிருந்த இடைவெளி உடனடியாக நிரப்பப்படவில்லை.
ஏனென்றால் விஸ்கொண்டி திரும்பி வருவதற்குப் பல மாதங்கள் ஆகின. மேலும் அவர் போப்பாக முடி சூட்டப்படுவதற்கு முன்பு ஒரு பாதிரியாராக நியமிக்கப்பட்டு, ரோம் நகர பிஷப்பாக நியமிக்கப்பட வேண்டியிருந்தது.
ஆனால், புனித பீட்டரின் அரியணையில் அமர்ந்தவுடன் (போப் ஆண்டவராகப் பதவி ஏற்றவுடன்), ” பத்தாம் கிரிகோரி (தியோபால்டோ விஸ்கொண்டி) ஒரு சுதந்திரமான போப்பாக இருக்கப் போகிறார், எந்த அழுத்தத்திற்கும் இடம் கொடுக்க மாட்டார் என்பதைத் தெளிவுபடுத்தினார். இறுதியில், அவர் ஒரு நல்ல போப்பாக ஆனார்,” என்கிறார் ரோட்ரிக்ஸ் டி லா பெனா.
புதிய போப்பாக நியமிக்கப்பட்டிருந்த பத்தாம் கிரிகோரி, திருச்சபையில் இருந்த முரண்பாடுகளைத் தீர்க்க, மரபுவழி கத்தோலிக்க திருச்சபையுடன் உறவுகளை வலுப்படுத்த, புனித பூமியை மீட்பதை நோக்கமாகக் கொண்டு சிலுவைப் போரை முடிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
ஆனால் வேறொரு முக்கிய மரபு உருவாவதற்கும் அவர் காரணமாக இருந்தார் .
கடுமையான அமைப்பு
பட மூலாதாரம், Getty Images
கடந்த 1274ஆம் ஆண்டு நடைபெற்ற லியோன் மாநாட்டில், ‘உபி பெரிகுலம்’ என்ற ஆணையை வெளியிட்டு, “பூமியிலுள்ள அரசியல் அதிகாரங்களின் கட்டுப்பாட்டில்” இருந்து திருச்சபை சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று பத்தாம் கிரிகோரி உறுதியாகக் கூறினார்.
“அப்போதைய ஆட்சியாளர்கள் செய்யும் இடையூறுகள் மற்றும் அழுத்தங்களில் இருந்து கார்டினல்களை தனிமைப்படுத்த உபி பெரிகுலம் முயல்கிறது. அவர்கள் அந்தக் காலத்தில் போப் ஆண்டவரின் ஆட்சி போன்ற சக்திவாய்ந்த நிறுவனத்தைக் கட்டுப்படுத்த விரும்பினர்” என்று ரோட்ரிக்ஸ் டி லா பேனா விளக்குகிறார்.
போப் பத்தாம் கிரிகோரியின் கல்லறை இத்தாலியின் அரேஸ்ஸோ கதீட்ரலில் உள்ளது. போப் இறந்த அரண்மனையில் கார்டினல்கள் காவலில் இருக்க வேண்டும் என்றும், உடல்நலக் குறைவு ஏற்பட்டால் தவிர, அடுத்த போப் தேர்வு செய்யப்பட்ட பின்னரே அவர்கள் அதிலிருந்து வெளியேற முடியும் என்றும் உபி பெரிகுலம் உறுதிப்படுத்தியது.
மேலும் மாநாடு நடைபெறும்போது, துணியால் மட்டுமே பிரிக்கப்பட்ட அறைகளில் கார்டினல்கள் தங்க வேண்டும். மாநாடு தொடங்கிய மூன்று நாட்களுக்குப் பிறகு, கார்டினல்கள் அடுத்த போப்பைத் தேர்வு செய்யவில்லை என்றால், ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே அவர்களுக்கு உணவு கொடுக்கப்படும்.
அதன் பின்னும் கார்டினல்கள் அடுத்த போப்பை தேர்ந்தெடுக்கவில்லை என்றால், எட்டாம் நாள் முதல், அவர்களுக்கு ரொட்டி மற்றும் தண்ணீர் மட்டுமே வழங்கப்படும்.
கிரிகோரி ஏற்படுத்திய இந்த விதிகள் மாநாடு நடைபெறும்போது கார்டினல்களின் வாழ்க்கையைக் கடினமாக்கியது. அவர் உருவாக்கிய உடன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கத்திலும், தனது சொந்தத் தேர்தலுக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான வெளிப்படையான முயற்சியாகவும் இந்த விதிகள் அமைந்தன.
“கார்டினல்களை தனிமைப்படுத்தி, வெளிப்புற அரசியல் அழுத்தங்களில் இருந்து விடுவித்து, அடுத்த போப்பைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையில் அவர்கள் பரிசுத்த ஆவியின் பேச்சைக் கேட்டு, தெய்வீகத் தூண்டுதலால் முடிவெடுக்க முடியும்” என்ற இறையியல் கோணமும் இந்த விதிகளில் உள்ளதாகக் கூறுகிறார் ரோட்ரிக்ஸ் டி லா பேனா.
போப் பத்தாம் கிரிகோரி 1278இல் இறந்தார். 1713இல் அவருக்கு அருளாளர் பட்டம் கொடுக்கப்பட்டது. புதிய போப்பைத் தேர்ந்தெடுக்கும் சில கடுமையான விதிகள் பிற்கால போப் ஆண்டவர்களால் மென்மையாக்கப்பட்டன, மற்றவை காலப்போக்கில் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டன.
ஆனால், கார்டினல்களை தனிமைப்படுத்தும் அத்தியாவசிய யோசனை இன்றும் நடைமுறையில் உள்ளது. போப் பிரான்சிஸின் வாரிசாக அடுத்த போப்பைத் தேர்ந்தெடுக்கும் மாநாட்டில் இது மீண்டும் வலியுறுத்தப்படும்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு