• Sun. Feb 22nd, 2026

24×7 Live News

Apdin News

வரலாற்றுத் திருப்பத்திற்கு வாய்ப்பைக் கொடுத்த தலைவர்… பிரபா – ரணில் ஒப்பந்தம் நிகழ்ந்த நாளிது | தீபச்செல்வன்

Byadmin

Feb 22, 2026


 

சுவர்களில் கடிகாரம் இல்லாத காலமொன்று இருந்த்து. கடிகாரங்கள் என்ன சுவர்களே இல்லாத காலம் ஒன்று இருந்த்து. 90களின் நடுவில் தொடங்கிய போர் வீடுகள் இல்லாத ஒரு காலத்தைப் பரிசளித்த்து. ஆனாலும் விடுதலைப் போராட்டத்தில் பலமான நிலையை அடைந்தோம். தலைவரின் மொழியில் சொல்வதானால் மக்களின் மனோ பலத்தால் அடைந்த வெற்றி அது. அப்படியொரு காலத்தில் சமாதானப் பேச்சு வரப்போகிறது என்று ஒரு பள்ளி மாணவர்களாய் அந்தச் செய்தியை அறிந்தபோது மிகவும் மகிழ்ந்தோம். ஏனெனில் நாம் எப்பொதும் போரை வெறுப்பவர்கள், ஆனால் போராடுவதில் உறுதியாய் இருப்பவர்கள். அப்படியொரு காலத்தில் தலைவர் பிரபாகரனும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்த மேசைக்கடிகாரமொன்று என் படிப்பு மேசையிலிருந்தது.

பெப்ரவரி 22

மீளவும் யுத்தம் வந்துவிடாது என்றும் அப்பாவி மக்களை அரச படைகளும் விமானங்களும் பலியெடுக்காது என்றும் அதற்கு எதிராய் களமாடி எங்கள் வீடுகளில் வீரச்சாவுகள் நடக்காது என்றும் உண்மையில் நம்பினோம். அப்படியொரு நம்பிக்கையுடன் போரில் அறத்தை வரித்துக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், சமாதான முயற்சிகளிலும் அறத்தை வரித்துப் பயணத்தை தொடங்கிய நாள் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் நாள். இலங்கையின் அரசியல் மற்றும் போர் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனைக்கு வித்திட்ட நாள்.

பல ஆண்டுகளாக இரத்தத்தாலும் துயரத்தாலும் நிரம்பியிருந்த போருக்கு இடையே, சமாதானத்திற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கிய ஒப்பந்தம் அந்நாளில் கையெழுத்திடப்பட்டது. போரில் பெரும் வெற்றிகளை குவித்த காலத்தில் நல்லெண்ண வெளிப்பாடாக சமாதான முயற்சிக்கு புலிகள் இயக்கம் சமிக்ஞையை வெளிப்படுத்தியது. அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தலைமையிலான இயக்கமும் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இணைந்தன. இவ் ஒப்பந்தம் வெறுமனே போர் நிறுத்த ஒப்பந்தமாக மட்டுமின்றி, வரலாற்றை மாற்றக்கூடிய ஒரு அரசியல் வாய்ப்பாகவும் அமைந்த்து.

நடுவராக செயற்பட்ட நோர்வே

இலங்கையின் இன மோதல் பல தசாப்தங்களாக நீடித்தது. வடக்கு மற்றும் கிழக்கில் வாழ்ந்த தமிழர்கள் அரசியல், மொழி, மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், மோதல் ஆயுதப் போருக்கு மாறியது. 1990களிலும் 2000களின் தொடக்கத்திலும் போர் தீவிரமாகியிருந்த சூழலில், மக்கள் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும், இடம்பெயர்வுகளும், பொருளாதார வீழ்ச்சியும் நாட்டை ஆழ்ந்த காயங்களுடன் நிறுத்தின. இந்நிலையிலேயே சமாதானத்திற்கான ஒரு புதிய பாதையைத் தேட முயற்சிகள் தொடங்கின.

இந்த முயற்சிகளில் முக்கிய பங்கு வகித்தது நோர்வே அரசாங்கத்தின் நடுவர் பணியாகும். சர்வதேச ஆதரவுடன் நடந்த பேச்சுவார்த்தைகள், இரு தரப்புக்கும் இடையே குறைந்தபட்ச நம்பிக்கையை உருவாக்க முயன்றன. அதன் விளைவாக கையெழுத்தான போர் நிறுத்த ஒப்பந்தம், மோதலை தற்காலிகமாக நிறுத்தி, அரசியல் தீர்வை நோக்கிச் செல்லும் ஒரு வாய்ப்பைத் திறந்தது. ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அம்சமாக  இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு, போர் நிறுத்தம் மீறப்பட்டதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.

மலர்ந்த வாழ்வு

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த பிறகு சில காலம் இலங்கையில் நம்பிக்கை நிறைந்த சூழல் உருவானது. வடக்கு மற்றும் தெற்குக்கிடையிலான வீதிகள் திறக்கப்பட்டன. நீண்ட காலமாக பிரிந்திருந்த குடும்பங்கள் மீண்டும் சந்திக்கத் தொடங்கின. வர்த்தகம், கல்வி, சமூக உறவுகள் ஆகியவை மீண்டும் உயிர்ப்பெடுத்தன. குறிப்பாக போர் பாதித்த பகுதிகளில் மக்கள் வாழ்வில் சிறிய மாற்றங்களே பெரிய நம்பிக்கையாக உணரப்பட்டன. அமைதி என்பது சாத்தியமற்ற கனவு அல்ல; என்றும் அரசியல் துணிச்சலால் உருவாக்கக்கூடிய எதிர்காலம் என்றுமான எண்ணம் அப்போது பலரிடமும் தோன்றியது.

ஆனால் இந்த நம்பிக்கை நீண்ட காலம் நிலைக்கவில்லை. இலங்கை அரசு போர் நிறுத்த மீறல்களை நிகழ்த்தத் தொடங்கியது. புலிகளின் போராளிகள் பலரும் படுகொலை செய்யப்பட்டனர். இராணுவம் மக்கள் மத்தியில் அத்துமீறலைத் தொடங்கியது. புலிகளின் கப்பல்கள் அரச படைகளால் அழிக்கப்பட்டன. ஆங்காங்கே போராளிகளை சீண்டுகின்ற வேலைகளில் அரச படைகள் ஈடுபட்டன. அரசியல் கொலைகள், பதற்றம், மற்றும் நிலப்பரப்பு கட்டுப்பாட்டைச் சுற்றிய விவாதங்கள் அமைதி முயற்சியை பலவீனப்படுத்தின. அதே நேரத்தில் இலங்கையின் உள்நாட்டு அரசியல் மாற்றங்களும், சர்வதேச சூழ்நிலைகளும் அமைதி செயல்முறைக்கு அழுத்தம் ஏற்படுத்தின.

போரில் கண்ணாயிருந்த மகிந்த

இவ்வாறான சூழ்நிலையில், ஆரம்பத்தில் வரலாற்று வாய்ப்பாக தோன்றிய இந்த ஒப்பந்தம் மெதுவாக சிதைவடைந்தது. சமாதான ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலத்திலேயே இலங்கை அரசு புலிகளுடன் போரை ஆரம்பித்தது. பின்னாளில் இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றிய மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு போரை நடாத்தி புலிகளை அழிப்பதில் பெரும் அக்கறை காட்டியது. இறுதியில் 2008 ஆம் ஆண்டு அரசாங்கம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக கைவிட்டது. அதன்பின் மீண்டும் போர் தீவிரமடைந்து, சில ஆண்டுகளில் அதன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்தது. இவ்வாறு, சமாதானத்தை நோக்கி திறந்திருந்த கதவு மீண்டும் மூடப்பட்டதாக பலர் உணர்ந்தனர்.

பிரபா – ரணில் ஒப்பந்தம் இலங்கையின் வரலாற்றில் ஒரு முக்கிய பாடமாக இன்றும் என்றும் கொள்ள வேண்டிய நிகழ்வு. அது சமாதானத்திற்கான வாய்ப்பு உருவாகலாம் என்பதை நிரூபித்ததோடு, அந்த வாய்ப்பை நிலைநிறுத்த அரசியல் துணிவு, பரஸ்பர நம்பிக்கை, மற்றும் நீண்டகால தீர்வு தேடும் மனப்பாங்கு அவசியம் என்பதை இன்றும் வலியுறுத்திக்கொண்டே இருக்கிறது. ஒரு போரை நிறுத்துவது எளிதாக இருக்கலாம். ஆனால் நீதியுடனும் சமத்துவத்துடனும் கூடிய நிலையான அமைதியை உருவாக்குவது மிகவும் கடினமான பணியாகும்.

சமாதானத்தை எதிர்த்த அனுர

இன்று ஆட்சியில் உள்ள ஜனாதிபதி அனுரகுமார உள்ளிட்ட ஜேவிபி அரசியல் தலைவர்களும் அன்று புலிகளுடன் சமாதான ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு போரைத் தொடங்கி புலிகளை அழிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதில் அனுரகுமார முன்களத்தில் இளைஞனாக நின்றார். அத்துடன் மகிந்த அரசில் அவர் அமைச்சராகவும் இருந்தார். இந்தப் பொன்னான வாய்ப்பை அழித்தவர்களும் ஆனையிட்டவர்களுமே இன்று இலங்கையை ஆள்கின்றனர்.

எவ்வாறாயினும் இன்றும் அந்த ஒப்பந்தம் குறித்து பேசப்படுவது என்பது அது வெறும் கடந்தகால நிகழ்வாக மட்டுமல்ல. தமிழர் தேசத்தின் நல்லெண்ண வெளிப்பாட்டை போரால் அழித்த  நினைவாகவும், இனப்படுகொலையில் மாத்திரமே உறுதியாய் இருந்த சிங்கள அரசின் காலாகாலமான  மனப்பாங்களையும் இதில் உணர்ந்துகொள்ள முடிகிறது. இலங்கையில் இரண்டு இனங்களுக்கு இடையிலும் ஒரு சமாதான சூழலை உருவாக்க இந்த அனுபவம் வரலாறு முழுவதும் நினைவாகவும் பாடமாகவும் இருக்கும்.

தீபச்செல்வன்

By admin