• Mon. Oct 6th, 2025

24×7 Live News

Apdin News

வரலாற்று ஆய்வாளர் நடன.காசிநாதன் மறைவு: முதல்வர் இரங்கல் | Historian Natana Kasinathan Passed Away: CM Stalin Condolences

Byadmin

Oct 6, 2025


சென்னை: வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். காசிநாதன் பல்வேறு கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள், பழமையான சிற்பங்கள், நடுகற்களை கண்டுபிடித்த பெருமைக்குரியவர்.

தமிழரின் தொன்மையை நிலைநாட்ட பூம்புகார் ஆழ்கடலாய்வு உள்ளிட்ட பல ஆய்வுகளைச் செய்தவர். வட்டெழுத்துக் கல்வெட்டுகளை சரளமாகப் படிக்கக் கூடிய ஆற்றல் பெற்ற காசிநாதன் தமிழகம் முழுவதும் வரலாற்றுக் கருத்தரங்குகளையும், கல்வெட்டுப் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி பல இளைஞர்களும் இத்துறையில் ஆர்வம் பெற உழைத்துள்ளார்.

இதுதவிர, கல்லெழுத்துக் கலை, சோழர் செப்பேடுகள், தமிழர் காசு இயல், ராசராசேச்சுரம் உட்பட பல்வேறு நூல்களை எழுதியதுடன், பல நூல்களை பதிப்பித்து, தொல்லியல் துறைக்கு பெரும் பங்களிப்பை ஆற்றியுள்ளார். இவரது அளப்பரிய பங்களிப்புகளுக்கு அங்கீகாரமாக, தமிழக அரசின் உ.வே.சா. விருது, சிறந்த நூல் விருது உட்பட பல விருதுகளை பெற்றார்.

பணி ஓய்வுக்கு பின்னும், தீவிரமாக தன் ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்த அறிஞரான காசிநாதன் மறைவு தொல்லியல் துறைக்குப் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தார், அறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



By admin