பட மூலாதாரம், Getty Images
கருஞ்சிவப்பு மக்காக்கள் , மயில்கள், டார்ட் தவளைகள், வானவில் மீன்கள் என விலங்குகளின் உலகம் முழுவதும் பிரகாசமான நிறங்களால் ஒளிர்கிறது.
ஆனால் சில விலங்குகள், அவற்றின் தோலில் எந்தவிதமான நிறமும் இல்லாமல் இருப்பதால் தனித்து தெரிகின்றன.
சீனாவின் காடுகள் முதல் ஆப்பிரிக்காவின் சவன்னா வரை, கருப்பு மற்றும் வெள்ளை நிற விலங்குகள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன.
அவற்றின் நிறங்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும், அதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம்.
பூச்சிகளை விரட்டும் தன்மை
பிரிட்டனின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வின்படி, வரிக்குதிரைகளின் கருப்பு மற்றும் வெள்ளை நிற கோடுகள், அவற்றைக் கடிக்க முயலும் பூச்சிகளைத் தடுக்கும் திறன் கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
“அவை இவ்வளவு தெளிவாகக் கோடுகள் கொண்டிருப்பதற்கு மிகத் துல்லியமான, தர்க்கரீதியான காரணம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை,” என்கிறார் காட்சி சூழலியல் துறையில் இணைப் பேராசிரியரும், விலங்குகளின் பார்வை குறித்து ஆராயும் நிபுணருமான முனைவர் மார்ட்டின் ஹவ்.
“அவை கோடுகள் நிறைந்த பின்னணியில் ஒளிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பது தெளிவாகிறது. அந்தக் கோடுகளின் செயல்பாடு எப்போதுமே என்னை ஈர்த்துள்ளது” என்கிறார் முனைவர் ஹவ்.
பெண் ஹார்ஸ் ஃபிளைஸ் (குதிரைகள் போன்ற விலங்குகளின் ரத்தத்தை உறிஞ்சும் ஒரு வகை ஈ) ரத்தத்தை உறிஞ்சுவதற்காக நிலத்தில் வாழும் முதுகெலும்புள்ள விலங்குகளை கடிக்கின்றன. இதுவே வரிக்குதிரைகளின் தோல் வடிவத்தை புரிந்துகொள்ள உதவும் காரணியாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர்.
“அவை நோயை பரப்பாவிட்டாலும் தொந்தரவு விளைவிக்கும் பூச்சிகள் தான். ஆனால் அவை நோய் கிருமிகளைச் சுமந்து ஆப்பிரிக்க சமவெளிகளில் உங்களை கடித்தால், அது மரணத்துக்கு கூட வழிவகுக்கலாம்,” என்கிறார் முனைவர் ஹவ்.
“கொசுக்கள் பொதுவாக வாசனையைக் கொண்டு பிற உயிரினங்களை கண்டுபிடிக்கின்றன. ஆனால் ஹார்ஸ் ஃபிளைஸ் பார்வையையே நம்புகின்றன.”
இதனால், வரிக்குதிரைகளில் இருக்கும் கருப்பு-வெள்ளை கோடுகள், ஹார்ஸ் ஃபிளைஸ் கடிப்பதை தடுக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
சோதனையின் போது, சாம்பல் நிற போர்வை போர்த்திய குதிரைகளை நோக்கி ஹார்ஸ் ஃபிளைஸ் பறப்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். மறுபுறம், கருப்பு மற்றும் வெள்ளை கோடுகள் கொண்ட போர்வை அணிந்த குதிரைகளை நோக்கி ஹார்ஸ் ஃபிளைஸ் பறக்கின்றவா என்பதை ஒப்பிட்டனர்.
பட மூலாதாரம், Gamma-Rapho via Getty Images
சோதனையின் போது, சாம்பல் நிற போர்வை போர்த்திய குதிரைகள் மீது ஹார்ஸ் ஃபிளைஸ் அமரச் சென்றதை கவனித்ததாக முனைவர் ஹவ் கூறினார். ஆனால் வரிக்குதிரையின் கோடுகளைப் போல் வடிவமைக்கப்பட்ட போர்வை அணிந்த குதிரைகளின் அருகில் சென்றபோது, ஈக்கள் திசை மாறி பறந்தன.
“அவற்றின் செயல்பாட்டை உங்களால் நேரடியாகப் பார்க்க இயலும். அவை ஒரு விலங்கின் பக்கத்தில் வரும்போது, திடீரென ‘நான் தேடுவது இதை அல்ல’ என்று முடிவு செய்து, விலகிச் செல்கின்றன,” என்று முனைவர் ஹவ் கூறினார்.
வெவ்வேறு வடிவங்கள் கொண்ட போர்வைகளைப் பயன்படுத்தி இதேபோன்ற சோதனைகளை நடத்தியதாக அவர் கூறினார்.
“நாங்கள் பயன்படுத்திய பெரும்பாலான கருப்பு-வெள்ளை வடிவங்கள் குறிப்பாக வரிக்குதிரை கோடுகளுக்கு இணையானவையாக இருந்த வரை, ஈக்களைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தன,” என்றும் அவர் தெரிவித்தார்.
ஈக்களின் பார்வைத் திறன் “மிகக் குறைவான தெளிவுத்திறன்” கொண்டது. இதுவே அவை குழப்பமடையக் காரணமாக இருக்கலாம் என்று விளக்குகிறார் முனைவர் ஹவ்.
“தூரத்திலிருந்து வரும்போது, அவை பார்க்கிற அனைத்தும் ஒரு சாம்பல் நிறக் குமிழியைப்போல் தெரிகிறது. ஆனால் இரண்டு மீட்டர் தூரத்திற்கு வரும்போது, கண்கள் வெள்ளை மற்றும் கருப்பு கோடுகளைப் பிரித்தறிய தொடங்குகின்றன,” என்று அவர் கூறினார்.
“அப்போதுதான் ‘சாம்பல் நிறப் பொருளாக’ தோன்றிய ஒன்று, திடீரென ஒரு வடிவத்துடன் கூடிய பொருளாக மாறுகிறது. அதுவே ஈக்களை குழப்பி, அவற்றை விலகச் செய்கிறது” எனவும் அவர் விளக்கினார்.
நிறமாற்றம்
கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் வரிக்குதிரைகளின் நிற மாற்றத்துக்கு (camouflage) உதவாது என்று கருதப்பட்டாலும், அது பாண்டாக்கள் போன்ற பிற விலங்குகளுக்கு உதவக்கூடும். பாண்டாக்களின் தோல் நிறம், புலிகள், சிறுத்தைகள், செந்நாய் போன்ற வேட்டையாடும் விலங்குகளிடம் இருந்து அவற்றை மறைத்துக்கொள்ள உதவுகிறது.
“மேற்கு சீனாவின் காடுகளில், வருடத்தின் சில காலங்களில் பனி, பாறைகள், மரத்தண்டுகள் ஆகியவை கருப்பு மற்றும் வெள்ளை தழும்புகளுடன் காணப்படும்,” என்று பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விலங்கு நிற நிபுணர் பேராசிரியர் டிம் காரோ கூறினார்.
“ஒரு பெரிய பாண்டா போன்ற மெதுவாக நகரும் விலங்கு, 50 அல்லது 100 மீட்டர் தொலைவில் இருந்தால், அதன் பனி மற்றும் பாறை நிறம் கொண்ட பின்னணியில் இருந்து அதை தனியாக ஒரு விலங்கு என்று அடையாளம் காண்பது மிகவும் கடினம்,” எனவும் அவர் விளக்கினார்.
பட மூலாதாரம், Getty Images
இதேபோன்ற நிறமாற்றம் ஜென்டூ பென்குயின்களிடமும் (gentoo penguins) காணப்படுகிறது. கருப்பு நிற முதுகும், இறக்கைகளும் கொண்ட இந்த உயிரினத்தின் வயிறு வெள்ளை நிறத்தில் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
“அவற்றை கீழே இருந்து பார்க்கும்போது, அவற்றின் வெள்ளை நிற வயிறு வானத்தின் நிறத்துடன் கலந்து விடுகிறது,” என்று வட பிரிட்டனின் லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் பரிணாமம், சூழலியல் மற்றும் நடத்தைத் துறையின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஹன்னா ரோலண்ட் கூறினார்.
“மேலிருந்து பார்க்கும்போது, குறிப்பாக தண்ணீரில், அவை இருண்ட பின்னணியுடன் கலந்துவிடுகின்றன” என்றும் அவர் கூறினார்.
எச்சரிக்கை
சில விலங்குகள் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் இருப்பதற்கான காரணம், விஷம் கொண்ட டார்ட் தவளைகள் (poison dart frogs) பிரகாசமான நிறத்தில் இருப்பதற்கான காரணத்தை போலவே இருக்கலாம். அதாவது, அது எச்சரிக்கை அளிப்பதற்காக இருக்கலாம்.
பட மூலாதாரம், Getty Images
பேராசிரியர் டிம் காரோவின் கூற்றுப்படி, ஸ்கங்க் எனப்படும் விலங்குகளால் “மிகவும் துர்நாற்றமுள்ள” மற்றும் ஆபத்தான ஆசனவாய் சுரப்புகளை (anal secretions) தெளிக்க முடியும்.
“பாருங்கள், நான் கருப்பு-வெள்ளை நிறத்தில் இருக்கிறேன். என்னைத் தாக்க முயற்சிக்க வேண்டாம், நான் ஆபத்தானவன்” என அவை வேட்டையாட வரும் விலங்குகளிடம் சொல்வது போல இருக்கிறது என்று அவர் கூறினார்.
இந்தக் கோட்பாட்டுக்கு ஆதாரமாக, அதிகமாக வேட்டையாடும் விலங்குகள் இருக்கும் பகுதிகளில் உள்ள ஸ்கங்க் விலங்குகள் தெளிவான கோடுகள் கொண்டிருப்பதை பார்க்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
சமிக்ஞை
கருப்பு மற்றும் வெள்ளை நிற அடையாளங்கள், மற்ற விலங்குகளுக்கு சமிக்ஞை செய்யும் ஒரு வழியாகவும், அதேசமயம் குழுவின் ஒற்றுமையை ஊக்குவிப்பதற்கும் பயன்படக்கூடும். இதற்கான எடுத்துக்காட்டு வளைய வால் கொண்ட லீமர்கள் (ring-tailed lemurs) என பேராசிரியர் டிம் காரோ கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
இந்த விலங்குகள் சாம்பல் நிற உடல் கொண்டவை, ஆனால் அவற்றின் வால் கருப்பு மற்றும் வெள்ளை கோடுகளுடன் காணப்படும். அவை நடக்கும்போது அந்த வாலை மேலே உயர்த்தி வைத்திருக்கும்.
“அவை ஒரு குழுவாக நகரும் போது வாலை செங்குத்தாக உயர்த்தி செல்கின்றன. அதனால் ‘இதோ நான் இருக்கிறேன், என்னைப் பின்தொடருங்கள்’ என்று கூறும் ஒரு அடையாளமாக இது இருக்கலாம் என நாங்கள் நினைக்கிறோம்,” என்கிறார் காரோ.
இதேபோன்ற வேறு சில உதாரணங்களும் இருந்தன. உதாரணமாக, புலிகளின் காதுகளின் பின்புறத்தில் இருக்கும் வெள்ளை புள்ளிகளைக் கூறலாம்.
“இது போன்ற சமிக்ஞைகளில் சில, குறிப்பாக பாலூட்டிகளில், அது குழுவின் ஒற்றுமையுடன் தொடர்புடையதாக இருக்கலாம்” என்றும் அவர் கூறினார்.
‘வெளிப்படையான பதில் கிடையாது’
பட மூலாதாரம், Getty Images
விலங்குகளிடையே காணப்படும் கருப்பு – வெள்ளை நிறத்தைப் பற்றி வேறு சில கோட்பாடுகளும் உள்ளன.
உதாரணமாக, ஜென்டூ பென்குயின்களை எடுத்துக்கொண்டால், நிற மாற்றத்தை தவிர, அவற்றின் முதுகில் உள்ள கருப்பு இறகுகள் மெலனின் (melanin) எனப்படும் நிறமியால் நிரம்பியுள்ளன. இது அவற்றின் இறகுகளை இயற்கைச் சூழலால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது என்று முனைவர் ஹன்னா ரோலண்ட் கூறுகிறார்.
அதேபோல், இந்த வண்ண வேறுபாடு அவற்றுடைய உடலின் வெப்பநிலையையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
“இருண்ட நிறப் பகுதிகள் வெப்பத்தை மிக வேகமாக உறிஞ்சும். வெள்ளை பகுதிகளைவிட அவை எளிதில் சூடாகும்,” என்று அவர் விளக்குகிறார்.
“அதனால் பென்குயின்கள் வெயிலில் நிற்கும்போது, சில நேரங்களில் தங்கள் முதுகை சூரியனை நோக்கித் திருப்பும். சில நேரங்களில் வெப்பம் அதிகமாக இருந்தால் தங்கள் வயிற்றை சூரியனை நோக்கித் திருப்பும்.”
ஆனால், இதற்கான உறுதியான பதில் எங்களிடம் இல்லை என்பது தான் உண்மை.
“இதன் அடிப்படையில் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அறிவியலில் ஒருபோதும் வெளிப்படையான பதில் கிடையாது” என்கிறார் முனைவர் ரோலண்ட்.
(இந்த கட்டுரை, பிபிசி உலக சேவையின் கிரவுட்சைன்ஸ் நிகழ்ச்சியின் ஒரு அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டது.)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு