அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் “அனைத்து நாடுகள்” மீதும் புதன்கிழமை (ஏப். 02) முதல் பரஸ்பர வரி விதிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்நாளை, அமெரிக்காவின் ‘விடுதலை நாள்’ என வர்ணித்துள்ளார் டிரம்ப்.
ஏற்கெனவே அந்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், எஃகு, கார்கள் மீது இறக்குமதி வரி (சுங்க வரி) விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டிரம்பின் இந்த பரஸ்பர விதி நடைமுறைக்கு வரவுள்ளது.
இதனால், உலகளவில் வர்த்தகப் போர் ஏற்படும் என்றும் உலகளவில் பொருளாதாரம் பாதிப்புக்குள்ளாகும் என்றும் பதற்றம் உருவாகியுள்ளது.
அமெரிக்காவின் வரிவிதிப்பால் தாங்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம் என, பிரிட்டன் தெரிவித்துள்ளது. அதேசமயம், ஐரோப்பிய ஒன்றியம், கனடா ஆகியவை இந்த வரிவிதிப்பை எதிர்கொள்ள பதில் நடவடிக்கைகள் குறித்து திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளன.
ஒரு நாடு வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கும் வரிகளே சுங்க வரி எனப்படும். இது, அரசுக்கு வருவாயை அதிகரிப்பதோடு, அதை ஒத்த உள்ளூர் பொருட்களுக்கு சந்தையில் நன்மை பயக்கின்றன.
இந்தியாவை “வரிகளின் மன்னன்” என டிரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார். அமெரிக்காவின் பரஸ்பர வரிவிதிப்பால் இந்தியாவின் இறக்குமதிகள் மற்றும் பொருளாதாரத்தில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்பதை இந்த விளக்கப் படங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை இந்திய பிரதமர் நரேந்திர மோதி வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடனான செய்தியாளர் சந்திப்பில், “இந்தியா என்ன வரி விதிக்கிறதோ அதையே அமெரிக்காவும் விதிக்கும்,” என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.
உலகளவில் ஒப்பீட்டளவில் இந்தியா இறக்குமதி பொருட்கள் மீது அதிக வரி விதிக்கிறது. இறக்குமதி பொருட்கள் மீது இந்தியா 17% வரி விதிக்கும் நிலையில், அமெரிக்கா 3.3% வரி விதிக்கிறது என உலக வர்த்தக மையம் தரவுகள் கூறுகின்றன.
அரிசி, ஆமணக்கு எண்ணெய், தேன், மிளகு ஆகியவற்றை இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. அதேபோன்று, அமெரிக்காவிலிருந்து பாதாம், வால்நட், பிஸ்தா, ஆப்பிள், பருப்பு வகைகள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை சீனாவுடன் அதிகமாக உள்ளது. சீனாவுடனான அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறை 24.7 சதவிகிதமாகவும், கனடாவுடன் 5.6 சதவிகிதமாகவும் உள்ளது. ஆனால் இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை 3.8 சதவிகிதம் மட்டுமே. அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறை விஷயத்தில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவுக்கு இந்தியாவில் இருந்து அதிகளவில் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. 24% வர்த்தக பற்றாக்குறைக்கு மருந்துகளே காரணம்.
பிரதமர் மோதி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு இடையே ஜனவரி மாதம் நடந்த தொலைபேசி உரையாடலில், அமெரிக்காவிடமிருந்து அதிகளவிலான பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா வாங்க வேண்டும் என்று பிரதமர் மோதிக்கு டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தகம் முறையாக நடைபெற வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதாவது, அமெரிக்காவுக்கு வர்த்தக பற்றாக்குறை ஏற்படக்கூடாது என டிரம்ப் விரும்புகிறார்.