பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், கா.அ.மணிக்குமார்
- பதவி, பிபிசி தமிழுக்காக
-
(இந்தக் கட்டுரையில் வரும் அனைத்து கருத்துகளும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகளே. இவை பிபிசியின் கருத்துகள் அல்ல)
“பல அம்சங்களில், முகமதியர்களின் ஆட்சி நம்முடைய ஆட்சியைவிட மேலோங்கியிருந்தது; அவர்கள் தாங்கள் கைப்பற்றிய நாடுகளில் நிரந்தரமாக குடியேறினர்; இந்திய மக்களுடன் திருமண உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு அவர்களுக்கு அனைத்து சலுகைகளும், உரிமைகளும் வழங்கினர். வென்றவர்களுக்கும் வெல்லப்பட்டவர்களுக்குமான நலன்களும், உணர்வுகளும் ஒன்றாயின. இதற்கு நேர்மாறாக, நமது ஆட்சி இரக்கமற்ற, சுயநலம் கொண்ட, உணர்ச்சியற்றதாய் உள்ளது.”
– ஹென்றி கேவன்டிஷ் வில்லியம் பென்டிங்
இந்த மேற்கோள் சென்னை மாகாண ஆளுநராகவும் , இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்த வில்லியம் பென்டிங் பிரபுவின் கூற்றாகும்.
ஆங்கிலேயர் ஆட்சியின் தன்மை
மகாத்மா காந்தியால் இந்திய தேசியத்தின் தந்தையாகக் கருதப்பட்ட தாதாபாய் நௌரோஜி ஆங்கிலேயர் ஆட்சியின் தன்மையை இவ்வாறு விளக்கினார்: “முந்தைய வெளிநாட்டுப் படையெடுப்பாளர்கள் படையெடுப்புகளின்போது நாட்டைச் சூறையாடிக் கொள்ளையடித்துத் திரும்பியபோது பெரும் காயங்களை ஏற்படுத்தினர். இருப்பினும் காயங்கள் நாளடைவில் ஆறின; தன் விடாமுயற்சியால் இந்தியா மீண்டும் வலிமை பெற்றது.
படையெடுப்பாளர்கள் இந்தியாவிலேயே தங்கி ஆட்சி செய்தபோது அவர்களது ஆட்சி அன்றைய சூழலுக்கு ஏற்றாற்போல் அமைந்திருந்ததே தவிர நாட்டின் செல்வங்கள் ஏதும் வெளியேறவில்லை. உற்பத்தி செய்த பொருட்கள் நாட்டிலேயே தங்கின. நாட்டிற்கான சேவையில் பெற்ற அறிவு, அனுபவம் அனைத்துமே மக்கள் வசமாகின. ஆனால், ஆங்கிலேயே ஆட்சியில், அனைத்து உலகிற்கும் சவாலிட்டு இந்தியாவின் நுழைவாயிலில் காவலர்களாக நின்றுகொண்டு, எத்தகைய செல்வத்தைக் காப்பதாகக் கூறுகிறார்களோ, அவற்றையே பின் கதவின் வழியே அபகரித்து எடுத்துச் செல்கிறார்கள்.”
நவீன இந்திய வரலாற்றைப் படிக்கும் மாணவர்கள், பிளாசி போருக்குப் பிறகு மூர்சிதாபாத் கருவூலம் சூறையாடப்பட்டதைத் தொடர்ந்து வங்காளத்தின் பொருள்வளம் சுரண்டப்பட்டு மாகாணம் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டது மற்றும் அங்கிருந்த மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கொடிய பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு மடிந்தது ஆகிய அனைத்தையும் நன்கு அறிவார்கள்.
ஆனால் வங்காள மாகாணத்தைப் போலவே, ஆற்காடு நவாப் அரியணை வாரிசுரிமை தொடர்பாக ஒரு சர்ச்சை எழுந்தபோது, கிழக்கிந்திய கம்பெனியின் பேராசைக்கும், ஏகாதிபத்திய சுரண்டலுக்கும் சென்னை மாகாணம் எவ்வாறு வாய்ப்பளித்தது என்பதை அறிய மாட்டார்கள். 1757 முதல் 1900 வரையிலான காலகட்டத்தில் ஆங்கிலேயரின் ஏகாதிபத்திய ஆதிக்கத்தால் தமிழர்கள் அனுபவித்த இன்னல்களையும், இழப்புகளையும் எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.
பட மூலாதாரம், Getty Images
ஆங்கிலேயரின் நாடு பிடிக்கும் திட்டமும் ஆற்காடு நவாப் வாரிசுரிமை பிரச்னையும்
ஆற்காட் நவாப் தோஸ்த் அலி இறந்த பின் வாரிசுரிமைக்கான போட்டியில் பிரெஞ்சுகாரர்களால் ஆதரிக்கப்பட்ட சந்தா சாஹிப்பிற்கு எதிராக உரிமை கோரிய முகமது அலிக்கு ஆதரவாக நின்ற ஆங்கிலேயர்கள், அவருக்கு ஆயுத உதவியையும், பெரும் தொகையைக் கடனாகவும் வழங்கினர்.
போர் தொடங்கிய நேரத்திலேயே (1756), நவாப் 1,371,906 பகோடாக்கள் (18ஆம் நூற்றாண்டில் ஒரு பகோடா = 3.5 ரூபாய்) கடன்பட்டிருந்தார். அடமானம் வைக்கப்பட்ட நவாபின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நிலப் பகுதிகளில் இருந்து வரும் வருமானம் குறைந்ததாலும், கடுமையான வட்டியைக் கட்ட வேண்டியிருந்ததாலும் 1766ஆம் ஆண்டு நிலுவையில் இருந்த கடன் தொகை 1,365,104 பகோடாக்களாக இருந்தது.
மூன்று கர்நாடக போர்கள் முடிந்து, இறுதியில் பிரெஞ்சுகாரர்கள் தோற்கடிக்கப்பட்டு ஆங்கிலேயர் வென்றதும் அவர்களின் ஆதரவைப் பெற்றிருந்த முகமது அலி நவாப் ஆனார். அவர் அரியணை ஏறியதும் (1765), ஆங்கில நாடாளுமன்றத்தில் எட்மண்ட் பர்க் குற்றம் சாட்டியது போல, 20 முதல் 40% வரையிலான அதிகப்படியான வட்டியுடன் சேர்ந்து குவிந்திருந்த கடனைத் தீர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு நவாப் ஆளானார். ஆனால் கருவூலம் திவாலாகிய நிலையில் அவரால் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலவில்லை.
அதிகாரத்தில் நீடிக்க வேண்டுமானால், கடன் வழங்கியோரிடம் இருந்து மேலும் கடன் வாங்க வேண்டிய நெருக்கடி அவருக்கு ஏற்பட்டது. எனவே, சில படுமோசமான ஆங்கிலேய வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களிடம் இருந்து கூடுதல் கடன்களைப் பெறுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. 1780இல் தனது ஆட்சிப் பகுதியின் வளமான நிலப் பகுதிகளை விட்டுக் கொடுத்து பெரும் கடனாளியானார்.
பட மூலாதாரம், Getty Images
வட்டிக்குப் பணம் கொடுத்தவர்களின் சுரண்டல்கள்
கடனாக வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களாக இருந்து நில உடைமையாளர்களாக மாறியவர்கள் கிராமப்புறங்களைச் சுரண்டி, அதிக அளவில் செல்வத்தைச் சேர்த்தனர். 1780இல் பாளையங்கோட்டையின் படைத் தளபதியான மேஜர் மெக்காலே விசாரணை நடத்தியபோது, ஒரு ஐரோப்பிய வட்டிக்காரரிடம் நவாப் அடமானம் வைத்திருந்த பாளையங்கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களில் அவரும், அவருடைய ஆறு கூட்டாளிகளும் சேர்ந்து மாவட்டத்தின் தானியங்கள் அனைத்தையும் பதுக்கி வைத்து, அப்பகுதியில் செயற்கையான தானியப் பற்றாக்குறையை ஏற்படுத்தி வந்ததைக் கண்டறிந்தார்.
பர்க்கின் மதிப்பீட்டின்படி, 1760ஆம் ஆண்டிலிருந்து 20 ஆண்டுகளில், கர்நாடக பகுதியிலிருந்து நேரடியாகச் சுரண்டப்பட்ட செல்வம் ஏறக்குறைய 20 மில்லியன் பவுண்டுகளாகும். 1785ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னை குறித்துப் பேசிய பர்க், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வசதி படைத்த சிலர் குறிப்பிடப்பட்ட அந்தப் பகுதிகளைப் பெற்றுக்கொண்டு, “இளவரசர்களை” (பாளையக்காரர்களை) கடனாளிகளாக்கி, அதன் மூலம் கோடிக்கணக்கான பணத்திற்கு அதிபதிகளாக மாறியதாகக் குற்றம் சாட்டினார்.
கடந்த 1792ஆம் ஆண்டு (ஜூலை 12) ஒப்பந்தத்தின்படி, பாளையக்காரர் நாடுகளின் மீதான அனைத்து அதிகாரம், கட்டுப்பாடு, அத்துடன் கர்நாடகம் மற்றும் அதன் சார்புப் பகுதிகளின் ஜமீன்தார்கள்/ பாளையக்காரர்கள் செலுத்த வேண்டிய திறைப்பணத்தை வசூலிக்கும் உரிமை ஆகியவை அனைத்தும் கம்பெனியின் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில், நவாப் அந்த உரிமையை நிரந்தரமாக கம்பெனிக்கு மாற்றினார்.
கடந்த 1795ஆம் ஆண்டில் மாகாண ஆளுநர் கவுன்சிலுக்கு அனுப்பப்பட்ட ஒரு குறிப்பில், ஆளுநர் லார்ட் ஹோபார்ட், அடமானக் கடன்முறை விவசாயிகளின் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார்: “மக்கள் தொகை வெகுவாகக் குறைந்துவிட்டது, எஞ்சியிருந்த விவசாயிகள் மிகுந்த அவல நிலையில் உள்ளனர். குளங்கள் மற்றும் நீர்ப்பாசனக் கால்வாய்களின் நிலை சீரழிந்திருந்தது. எஞ்சியிருந்த விவசாயமும் கட்டாயத்தின் பேரிலேயே செய்யப்பட்டது, விவசாயியின் பங்கு என்பது அவன் திருடி, மறைக்க முடிந்த அளவைத் தவிர வேறில்லை.”
பட மூலாதாரம், Getty Images
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி
கடந்த 1802ஆம் ஆண்டின் ஒழுங்குமுறைச் சட்டம் (XXV) பாளையக்காரர் முறையை ஒழித்தது. அதைத்தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்த பாளையங்களில் வங்காள பாணியிலான ஜமீன்தாரி முறை அமல்படுத்தப்பட்டது.
ஜமீன்தாரிகள் பரம்பரை உரிமையுடன், மாற்றத்தக்கதாகவும் ஆக்கப்பட்டன. ஜமீன்தாரால் பெறப்பட்ட மொத்த விளைச்சலில் மூன்றில் இரண்டு பங்கு அரசாங்கத்தின் பங்காக (peshkash) நிர்ணயிக்கப்பட்டது. ஜமீன்தார்கள் தங்கள் குத்தகைதாரர்களுக்கு வாடகையை நிர்ணயித்து பட்டாக்களை வழங்க வேண்டியிருந்தது. ஜமீன்தார் அரசுக்குச் செலுத்த வேண்டிய நில வரி நிரந்தரமாகயிருந்தபோது, குத்தகைதாரர் ஜமீன்தாருக்கு செலுத்த வேண்டிய தொகையைத் தனது விருப்பம் போல் ஜமீன்தார் உயர்த்த எந்தத் தடையுமில்லை, ஆங்கிலேயர்கள் தங்கள் அதிகாரத்தை மாகாணத்தில் தக்கவைத்துக்கொள்ள ஒரு சக்தி வாய்ந்த உயரடுக்குக் குழுவாக ஜமீன்தார்கள் உருவெடுத்திருந்தனர்.
ஆங்கிலேயர்கள் தங்கள் ஏகாதிபத்திய ஆதிக்கத்தைத் தக்கவைக்க ஜமீன்தாரர்கள் ஆதரவை நம்பியிருந்தனர். ராமநாதபுரம், சிவகங்கை, சிங்கம்பட்டி போன்ற ஜமீன்தாரிகள் அளவில் பெரியவையாக இருந்தன. தங்கள் அந்தஸ்து, கௌரவம் ஆங்கிலேயர்களின் தொடர்ச்சியான ஆட்சியைச் சார்ந்தது என்பதை உணர்ந்து அவர்களும் விசுவாசத்தில் ஒருபோதும் தடம் புரளவில்லை.
சென்னை மாகாணத்தின் மொத்தப் பரப்பளவான 90 மில்லியன் ஏக்கரில், 27.5 மில்லியன் ஏக்கர் நிலங்கள் (30%), 849 ஜமீன்தார்களின் வசம் இருந்தன. அன்றைய சென்னை மாகாணத்தில் கோவில் நிலங்கள் (இனாம்) 7.75 மில்லியன் ஏக்கர் பரப்பளவில் இருந்தன. (444,000 நில உடைமைகளை உள்ளடக்கியது). இது மொத்தத்தில் கிட்டத்தட்ட 8.6%. கம்பெனி நிர்வாகம் கோவில் நிலங்களை ஒழிப்பதற்குத் தன்னால் இயன்றவரை முயன்றது. ஆனால், மக்களிடம் இருந்து வரும் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு அந்த முயற்சியிலிருந்து பின்வாங்க வேண்டியிருந்தது.
இறுதியில் இனாம் நிலங்களையும் சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டியிருந்தது. குறைந்த நில வரியைச் செலுத்துவதற்கு உட்பட்டு, பரம்பரை உரிமையுடையதாகவும் மாற்றத்தக்கதாகவும் அறிவிக்கப்பட்ட இனாம் நிலங்கள் கிராமத் தலைவர், கர்ணம் மற்றும் பிராமணர்களின் வசம் இருந்தன. இத்தகைய பணம் படைத்த, பெரும் நில உடைமை பெற்றிருந்த உயர் வகுப்பினர் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் தூண்களாகினர்.
ஆங்கிலேயர்கள் ரயத்துவாரி (விவசாயிகளிடம் நேரடி வரி வசூல்) முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்தபோது, நிலவி வந்த மரபுகளின் அடிப்படையில் மிராசுதாரர்கள் இந்த முயற்சிக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். பல மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் குத்தகைதாரர்களுக்குப் பட்டா வழங்கியபோது, மிராசுதாரர்கள் உடனடியாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். தஞ்சாவூர் கிராமங்களில் உள்ள அத்தகைய பங்குதாரர்களிடம் இருந்து எதிர்ப்பு குறித்த புகார்கள் பிரதானமாக வந்தன. வருவாய் வாரியத்தால் அந்தச் சூழ்நிலையை ஒரு சமரசத்தின் மூலமாக மிராசுதாரர்களைச் சரிக்கட்டுவதன் மூலமாகவே சமாளிக்க முடிந்தது.
பட மூலாதாரம், Getty Images
நில வரிக் கொள்கை
சோழர்கள் ஆட்சிக் காலத்தில் நிலத்திலிருந்து கிடைத்த விளைச்சலில் 1/6 பங்கு அல்லது 1/4 பங்கு என நில வரியை விளை பொருளாகவே வசூலித்தனர். 1820இல் ரயத்துவாரி வருவாய் முறை அமுல்படுத்தப்பட்ட போது வரி கோரிக்கை, மொத்த விளைச்சலில் பாதி அல்லது சில நேரங்களில் பாதிக்கும் மேலாக இருந்தது. அதையும் அவர்கள் பணமாகச் செலுத்த வேண்டியிருந்தது. சென்னை மாகாணத்தில் நில வரி அதிகமாக இருந்தது. ஒவ்வொரு 100,000 நபர்களுக்கும், வங்காளத்தில் ரூ. 1,005,455, பம்பாயில் ரூ. 1,671,965 மற்றும் சென்னையில் ரூ. 2,312,465 வசூலிக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டது.
நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில், 1820க்குப் பிறகு அடுத்த 20 ஆண்டுகளுக்கு விவசாயப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தன. விலைகள் குறைந்தபோதிலும், வரி மதிப்பீடுகள் அப்படியே இருந்தன. இதன் விளைவாக மாகாணத்தின் ரயத்துவாரி மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 1825-26ஆம் ஆண்டில் 330 லட்சம் ரூபாயாக இருந்த நில வருவாய் கோரிக்கை, 1833ஆம் ஆண்டில் ரூ. 275 லட்சமாகக் குறைந்தது. சாகுபடிப் பரப்பு சுருங்கியதில் இதன் விளைவுகள் பிரதிபலித்தன. 1856ஆம் ஆண்டில், மாகாணத்தின் மொத்தப் பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே சாகுபடியின் கீழ் இருந்தது.
ஒரு விவசாயி நிலத்தைப் பயிர் செய்தாலும் அல்லது தரிசாகப் போட்டிருந்தாலும், அந்த நிலம் தரக்கூடிய விளைச்சலின் அடிப்படையில் ஆங்கிலேயர் கணக்கிட்டு நில வரியை வாடகையாக வசூலித்தனர். இதனால் பருவமழை பொய்த்த காலத்தில் நிலத்தை உழுது பயிரிடாத போதும் விவசாயி நிலவரி செலுத்த வேண்டியிருந்தது. நடைமுறையில் இருந்த சித்ரவதைச் சட்டம் (Torture Act), நிர்ணயித்திருந்த நில வரியை பலவந்தமாக வசூலிக்க வருவாய்த் துறை அலுவலர்கள் கையாண்ட சித்ரவதைகளை நியாயப்படுத்தின.
இந்தச் சட்டம் 1858ஆம் ஆண்டு இந்தியா பேரரசியின் நேரடி ஆளுகைக்குள் கொண்டு வரப்பட்டபின் ஒழிக்கப்பட்டது. இருப்பினும் நில வரி கட்டத் தவறிய விவசாயிகளின் கால்நடைகள், வீட்டில் இருக்கும் சாமான்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்யவும், நிலத்தில் இருந்து அவர்களை வெளியேற்றவும் வருவாய்த் துறைக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
வட்டிக்குக் கடன் கொடுப்போருக்கு பாதுகாப்பு
அதிகாரிகளின் கொடுமைகளில் இருந்து தப்பிக்க விவசாயிகள் வட்டிக்கடைக்காரர்களிடம் இருந்து அதிக வட்டிக்குக் கடன் வாங்கும் நிலைக்கு ஆளாயினர். அரசு வழங்கிய கடன் மூன்று சதவிகித விவசாயிகளுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.
மீதமுள்ள 97% பேர் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களையே நம்பி இருக்க வேண்டியிருந்தது. இந்த வட்டிக் கடைக்காரர்கள் வருடத்திற்கு 37.5% முதல் 56.25% வரை வட்டி வசூலித்தனர்.
ஆங்கிலேயர் வருகைக்கு முன் வட்டிக் கடைக்காரர்கள் நஷ்ட பயத்துடன் கடன் கொடுத்து வந்தனர். ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியில் கடனாகக் கொடுத்த பணம் திரும்பாவிட்டால் கடன் கொடுத்தவர்கள் அடமானத்தில் இருந்த சொத்தைக் கையகப்படுத்திக் கொள்ளும் உரிமையை சட்ட ரீதியாகப் பெற்றனர்.
இதனால் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பலர் நிலத்தை இழந்து நிலமற்ற விவசாயத் தொழிலாளர் ஆயினர். மேலும் நிலம் வேளாண் வகுப்பைச் சாராதவர் கைகளுக்குப் பெருமளவில் மாற இது வழிவகுத்தது.
சந்தைமயமானதால் ஏற்பட்ட இழப்பு
காலனி ஆதிக்கக் கோட்பாடு கச்சாப் பொருட்கள் உற்பத்தியை ஊக்குவித்து சந்தை வேளாண்மையை வளர்த்தது.
இதனால் விளைவிக்கும் வேளாண் பயிர்கள் நுகர்வதற்கு என்பது போய் விற்பனைக்கு என மாறியது. புதிய நில வரிக் கொள்கையால் விவசாயிகள் செலுத்த வேண்டியிருந்த சுமைமிக்க நில வரி அவர்களை பணப் பயிர்களைப் பயிரிடத் தூண்டின.
பணப் பயிர்களான பருத்தி, நிலக்கடலை, கரும்பு, புகையிலை போன்றவை உணவு தானியங்களைவிட அதிக வருவாயைத் தருவதாயிருந்தன. ஆனால் இவை சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொருத்து இருந்தது.
கல்வி அறிவற்ற, சந்தை நிலவரம் அறியாத, அதிக மூலதனம் போட்டு பருத்தியை சாகுபடி செய்த ஏழை தமிழக விவசாயிகள் சர்வதேச சந்தையில் விலை வீழ்ச்சியின்போது பெரும் துயரத்திற்கு ஆளானார்கள்.
பட மூலாதாரம், Getty Images
நீர்ப்பாசன பராமரிப்பில் அக்கறையின்மை
ஆற்றுப்பாசன வசதியற்ற பகுதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்கள் புதிய நீர்ப்பாசன திட்டம் ஏதும் தீட்டாதது மட்டுமின்றி, இருந்த நீர்த் தேக்கங்களைக்கூட பராமரிக்க எத்தகையதோர் ஏற்பாட்டையும் செய்யவில்லை. 1854ஆம் ஆண்டு பொதுப்பணித் துறை ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் நில வரி வசூலில் ஒரு சதவிகிதம் மட்டுமே நீர்ப்பாசனத்திற்குச் செலவிடப்பட்டது.
காவேரி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா டெல்டா பகுதிகள் உருவாகக் காரணமாயிருந்த ஆர்தர் காட்டன் ரயில் போக்குவரத்தைவிட நீர்ப்பாசனத்திற்கு முன்னுரிமை வழங்கக் கூறிய ஆலோசனையை காலனி அரசு நிராகரித்தது.
கடந்த 1840களில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த இ.பி. தாமஸ், கடுமையான வரி விதிப்பால் விவசாயிகள் கிணறுகள் தோண்டுவதற்குக்கூட இயலாமையில் இருந்ததாகக் குறிப்பிடுகிறார். 1852ஆம் ஆண்டு நீர்ப்பாசனத்திற்கான செலவு, 1838ஆம் ஆண்டு மராமத்துத் துறை ஒழுங்கமைக்கப்பட்ட பிறகும்கூட, அரசு செலவீனத்தில் அரை சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருந்தது.
தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆட்சியர்கள், மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் தானியங்களின் அளவு மாகாணத்தில் மக்களின் தேவைக்குப் போதுமானதாக இருந்தது எனக் கூறி நீர்ப்பாசன விரிவாக்கத்திற்கான எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்ததோடு, 1840களில் நிலவிய விவசாய விளைபொருட்களின் குறைந்த விலைகளைக் காரணம் காட்டி, எந்தவொரு கூடுதல் உற்பத்தியும் விலை வீழ்ச்சிக்கு வழிவகுத்து, சந்தையில் உணவுப் பொருட்கள் தேக்கத்தை உருவாக்கும் என்று அச்சுறுத்தினர்.
‘நாட்டின் எந்தப் பகுதிக்கு நாம் திரும்பினாலும், பெரும்பான்மையான நீர்த்தேக்கங்கள் பருவகாலத்தில்கூட முந்தைய காலங்களில் இருந்ததைவிட மிகக் குறைவாகவும், சரியான பராமரிப்பில் வைத்திருந்தால் எவ்வளவு கொள்ளளவு கொண்டிருக்குமோ, அவற்றைவிட மிகக் குறைவாகத் தற்போது இருப்பதைக் காண்கிறோம்’ என பொதுப் பணித்துறை அறிக்கை குறிப்பிட்டது.
பட மூலாதாரம், Getty Images
கடந்த 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடர்ந்து நேர்ந்த கோரப் பஞ்சங்களின் பின்னணியில்தான் சில அணைக்கட்டுகள் கட்டும் திட்டங்களை ஆங்கிலேயர்கள் மேற்கொண்டனர். புதிய அணைக்கட்டு நீர்பாய்ந்த பகுதிகளில் அல்லது பழைய நீர்த்தேக்கங்கள் புனரமைக்கப்பட்ட இடங்களில் விவசாயம் செய்தவர்களிடம் இருந்து கூடுதல் தீர்வையை அரசு வசூலிக்கத் தயங்கவில்லை.
இதனால் கிராமப்புறக் கடன் அதிகரித்தது. சென்னை மாகாணத்தில் 1895ஆம் ஆண்டு கிராமப்புறக் கடன் 450 மில்லியன் ரூபாய் என பிரடரிக் நிக்கல்சன் கமிட்டி அறிக்கை தெரிவித்தது.
வேளாண் மக்களின் அவல நிலை
சென்னை மாகாண குடிமைப் பணி அதிகாரியும், பின்னர் பொதுப் பணித்துறை ஆணையத்தின் உறுப்பினருமான ஜேம்ஸ் டி. போர்டில்லன், 1854ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் பெரும்பான்மையான விவசாயிகளின் நிலையை இங்கிலாந்து நாட்டிற்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்:
“எப்போதும் வறுமையிலும் கடனிலும் இருக்கும் ஏழை வகுப்பைச் சேர்ந்த ஒருவர், பணத்தைப் பார்ப்பது அரிது. மண் சுவர்களும் ஓலைக் கூரையும் கொண்ட குடிசைதான் அவர் குடியிருப்பு. அவருடைய உணவும், அவருடைய குடும்பத்தின் உணவும், வேகவைத்த சிறுதானிய கஞ்சி, சிறிது புழுங்கல் அரிசிக் குருணை சோறு, குழம்பு; சமைத்துச் சாப்பிட மண்பாண்டப் பாத்திரங்கள் மட்டும் தான்.”
நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் பற்றி குறிப்பிடும் போது, “உணவு, வீடு மற்றும் ஆடையைப் பொறுத்தவரை, அவர்கள் மேலே கூறப்பட்ட ஏழை விவசாயிகளின் வகுப்பைவிட மோசமான நிலையில் உள்ளனர். அவல நிலையில் அவர்கள் வசிக்கும் குடிசையை (வீடாக) மதிப்பிடவே முடியாது. கல்வி அல்லது மனப் பக்குவம் எதுவாக இருந்தாலும் அவற்றை முற்றிலும் இழந்தவர்கள் அவர்கள்” என்று எழுதினார்.

மலைத் தோட்டப் பயிர்களும் காடுகள் அழிக்கப்படுத்தலும்
கம்பெனி நிர்வாகம் மலை அடிவாரங்களில் தோட்டப் பயிர்கள் பயிரிடுவதை ஊக்குவித்தது. வங்காளத்தை மையமாகக் கொண்டு ஐரோப்பிய நிறுவனங்கள் இண்டிகோ உற்பத்தியை ஊக்குவித்தன. 1820களில் காபி நடவுக்கு சிறப்பு ஊக்கம் அளிக்கப்பட்டது.
தென்னிந்தியாவில் 19ஆம் நூற்றாண்டின் இரண்டாம் காலாண்டில் ஐரோப்பிய தோட்டக்காரர்கள் சேர்வராயன் மலைகள் மற்றும் பாரமஹால் பகுதிகளில் (சேலம்) காபியை பயிரிட முயன்றனர். 1825ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் தோட்டங்களை ஆரம்பித்தவர்கள் பெரும்பாலும் ஆங்கிலேய, பிரெஞ்சு மற்றும் ஆங்கிலோ-இந்திய தோட்டக்காரர்களாக இருந்தனர்.
காபி பயிரிட, காடுகள் அழிக்கப்பட்டன. திருநெல்வேலியில் தச்சநல்லூரிலும், குற்றாலம் மலைப் பகுதிகளில் காபி தோட்டம் ஐரோப்பிய தொழில் முனைவோர்களால் அமைக்கப்பட்டது. அதைப் பார்த்து சிங்கம்பட்டி ஜமீன்தார் காபி பயிரிட 500 ஏக்கர் பரப்பிலிருந்த காடுகளை அழித்தார். ஆனால் காபி அங்கு விளையவில்லை. இதர பகுதிகளிலும் இலை நோய் தாக்கியபோது அதற்கான மருந்து பற்றி அறியாததால் முயற்சி பலனளிக்கவில்லை.
பழங்குடி மக்களுக்கான நில வளங்களை ஐரோப்பியர்கள் கையகப்படுத்துவதற்கு ஏதுவாக 1833ஆம் ஆண்டு சென்னை மாகாண அரசால் இயற்றப்பட்ட ஒழுங்குமுறைச் சட்டம் ஐரோப்பிய தோட்டக்காரர்கள் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து 21 ஆண்டுகளுக்குத் தேவையான நிலத்தை குத்தகைக்குப் பெறுவதை சாத்தியமாக்கியது.
முதல் ஐந்தாண்டுகளுக்கு நிலம் இலவசமாகவும், மீதமுள்ள 16 ஆண்டுகளுக்கு ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு ஒரு ரூபாய் என்ற அடிமாட்டு விலையில் வழங்கினார்கள். ரயில் தண்டவாளங்கள் அமைக்க காடுகளில் இருந்து மரங்கள் வெட்டப்பட்டு இங்கிலாந்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
பட மூலாதாரம், Getty Images
அதுமட்டுமின்றி காலனி அரசு வன இலாகா ஒன்றை உருவாக்கி (1865) அதுவரை பழங்குடி மக்கள் தடையின்றி பயன்படுத்தி வந்த நிலங்கள் மற்றும் காடுகளைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. இதன் விளைவாகக் காடு சார்ந்த பழங்குடியினரின் பொருளாதாரம் சிதைந்து அங்கு குடியிருந்த பூர்வீக மலைமக்கள் தோட்டத் தொழிலாளர்களாக மாறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தனது ஏகாதிபத்திய நோக்கத்தை மறைத்து இந்தியாவுக்குள் ஒரு வர்த்தக நிறுவனமாக வந்த கிழக்கிந்திய கம்பெனி தனது சூழ்ச்சியினாலும் பிரித்தாளும் கொள்கையின் மூலமும் சென்னை மாகாணப் பகுதிகளை ஒவ்வொன்றாகக் கையகப்படுத்தித் தனது முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அரசாட்சி செய்தது.
கடந்த 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் 70-75 சதவிகிதமான மக்கள் விவசாயத்தை தங்கள் வாழ்வாதாரத்திற்கு நம்பியிருந்த நிலையில் விவசாயத்தின் மூலமே கம்பெனி அரசு வருவாய் பெற முடியும் என்றிருந்ததால் நிலவரியைக் கடுமையாக உயர்த்தி அரசு இயந்திரத்தைப் பயன்படுத்தி விவசாயிகளை வதைத்து வசூலித்தது. அதே நேரத்தில் விவசாயத்திற்கு இன்றியமையாததாகக் கருதப்பட்ட நீர்ப்பாசனம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது.
வேளாண்மைக்குத் தேவையான கடன் உதவி ஏதும் செய்யாமல், வட்டிக்குக் கடன் கொடுப்பவர்கள் எவ்வளவு கொடுமையான வட்டியை வசூலித்தபோதும் அதைப் பற்றிச் சிறிதும் அக்கறை கொள்ளாது வட்டிக்காரர்கள் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரியை தவறாது குறித்த நேரத்தில் செலுத்த உத்தரவாதமாக இருத்ததால் அவர்கள் கொடுத்திருந்த பணத்திற்குப் பங்கம் ஏற்படாதவாறு அடமான சொத்துகளை கையகப்படுத்துவதற்கான சட்ட அங்கீகாரத்தை வழங்கி நிலையை மேலும் ஆங்கிலேயர்கள் மோசமாக்கினர்.
(கட்டுரையாளர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற வரலாற்றுத் துறை பேராசிரியர் ஆவார்)
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு