பட மூலாதாரம், EPA
-
- எழுதியவர், அஜித் காத்வி
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
2025-26-ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்
இந்த முறை மத்திய பட்ஜெட்டில் வருமான வரியில் பெரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஊதியம் பெறும் நபர்கள் வருட வருமானம் ₹12.75 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. மற்றவர்களுக்கு ₹12 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கும்.
இதன் காரணமாக, இந்த முறை வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது தொடர்பாக பலருக்கு குழப்பங்களும் தவறான புரிதல்களும் ஏற்பட்டுள்ளன.
ஏற்கனவே, இந்தியாவில் பான் கார்டு மற்றும் வருமான வரி தாக்கல் செய்வது குறித்து பொதுவான வரி செலுத்துவோரிடம் பல தவறான கருத்துக்கள் உள்ளன.
உதாரணமாக,
- ஐடி ரிட்டர்ன்ஸை (IT Returns) யார் தாக்கல் செய்ய வேண்டும்?
- வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய எவ்வளவு வருமானம் இருக்க வேண்டும்?
- வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது மற்றும் பான் கார்டுகள் பற்றிய சில முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்க, பட்டயக் கணக்காளர் மற்றும் வரி நிபுணர் கரீம் லக்கானியுடன் பிபிசி பேசியது.
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயம் யாருக்கு உள்ளது?
பட மூலாதாரம், Getty Images
உங்கள் மொத்த வருமானம் ‘அடிப்படை விலக்கு வரம்பை’ மீறினால், நீங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார் கரீம் லக்கானி.
அதாவது, பொது வரி செலுத்துவோர் (60 வயதுக்கு உட்பட்டவர்கள்) ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம் மேல் இருந்தால், மூத்த குடிமக்களின் (60 முதல் 80 வயது) ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் மேல் இருந்தால், மிக மூத்த குடிமக்கள் (80 வயதுக்கு மேல்) ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் மேல் இருந்தால் வருமான வரி தாக்கல் செய்வது கட்டாயம்.
மேலும், மொத்த வருமானம் (பிரிவு 80 இன் கீழ் விலக்குகளை கழிப்பதற்கு முன்) மேற்கண்ட விலக்கு வரம்பை மீறினால், வருமான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.
கூடுதலாக, ஒவ்வொரு நிறுவனமும் லாபம் ஈட்டியிருந்தாலும் சரி, நஷ்டம் அடைந்திருந்தாலும் சரி, ஐடி ரிட்டர்ன்ஸை தாக்கல் செய்வது கட்டாயமாகும்.
இதேபோல், வேறு சில சூழ்நிலைகளிலும் நீங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அவை பின்வருமாறு,
- நீங்கள் ஐடி ரீஃபண்ட் (IT Refund) (வரியை திரும்பப் பெற) பெற விரும்பினால்
- இந்தியாவில், மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக அறக்கட்டளையின் கீழ் வைத்திருக்கும் சொத்து உங்களிடம் இருந்தால்.
- நீங்கள் ஒரு அரசியல் கட்சியாக இருந்தால்.
- நீங்கள் இந்தியாவில் வசிப்பவராக இருந்து, இந்தியாவிற்கு வெளியே சொத்துக்கள் அல்லது நிதி நலன்களைக் கொண்டிருந்தால் (இது NRI கள் அல்லது RNOR களுக்கு – Resident but Not Ordinary Residents – பொருந்தாது).
- நீங்கள் இந்தியாவில் வசிப்பவராக இருந்து, வெளிநாட்டில் உள்ள வங்கி கணக்கில் கையொப்ப அதிகாரம் பெற்றிருந்தால் (இதுவும் NRIகள் அல்லது RNOR களுக்கு பொருந்தாது).
பட மூலாதாரம், Getty Images
உங்கள் வருமானம் அடிப்படை விலக்கு வரம்பை விடக் குறைவாக இருந்தாலும், கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் நீங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நடப்புக் கணக்குகளில் ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்திருந்தால்.
- ஒரு சேமிப்புக் கணக்கில் ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்திருந்தால்.
- உங்களுக்காகவோ அல்லது வேறு ஒருவருக்காகவோ வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் செலவிட்டிருந்தால்.
- உங்கள் வருடாந்திர மின்சாரக் கட்டணம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சென்றால்.
- உங்கள் TDS அல்லது TCS (மூலத்தில் வசூலிக்கப்படும் வரி) ரூ.25,000 க்கும் (மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 க்கும்) அதிகமாக இருந்தால்.
- உங்கள் வணிகத்தின் ஆண்டு வருவாய் ரூ.60 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால்.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாததற்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்படும்?
பட மூலாதாரம், Getty Images
கணக்குகளைத் தணிக்கை செய்யத் தேவையில்லாத தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு, ஐடி வருமானத்தை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை தாண்டியால் என்னவாகும்?
- உங்கள் ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால், கடைசி தேதிக்குப் பிறகு ரிட்டர்ன் தாக்கல் செய்தால் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
- உங்கள் மொத்த வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் இருந்தால், கடைசி தேதிக்குப் பிறகு தாக்கல் செய்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படலாம்.
- உங்கள் வருமானம் அடிப்படை விலக்கு வரம்பை விடக் குறைவாக இருந்தால் எந்த அபராதமும் இல்லை.
- ஆனால், வங்கியில் ரூ.1 கோடிக்கு மேல் டெபாசிட் செய்தல், வெளிநாட்டுப் பயணத்திற்கு ரூ.2 லட்சத்திற்கு மேல் செலவிடுதல் போன்ற நிபந்தனைகள் இருந்தால், தாமதமாக ரிட்டர்ன் தாக்கல் செய்ததற்காக அபராதம் விதிக்கப்படலாம்.
- உங்கள் வரி நிலுவையில் இருந்தால், சரியான நேரத்தில் ரிட்டர்ன் தாக்கல் செய்யாவிட்டால், நிலுவைத் தொகைக்கு மாதத்திற்கு 1% வட்டி வசூலிக்கப்படும்.
- உங்களுக்கு வணிகம் அல்லது மூலதன இழப்பு இருந்தும், சரியான நேரத்தில் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டால், அந்த இழப்பை அடுத்த ஆண்டின் வருமானத்துடன் சமநிலைப்படுத்த முடியாது.
- உங்கள் வருமானத்தை சரியான நேரத்தில் தாக்கல் செய்வதன் மூலம், இந்த இழப்புகளை நீங்கள் முன்னோக்கி எடுத்துச் சென்று எதிர்காலத்தில் உங்கள் வரிச்சுமையைக் குறைக்கலாம்.
- நீங்கள் அதிக வரி செலுத்தியிருந்தால், ரீஃபண்ட் பெற உரிமை இருந்தாலும் (வரியை திரும்பப் பெற உரிமை பெற்றிருந்தால்),வருமான வரி கணக்கைத் தாமதமாக தாக்கல் செய்தால் பணம் திரும்ப கிடைப்பது தாமதமாகலாம்.
- கடுமையான வழக்குகளில், வருமான வரித் துறை சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
- வரி 25,000க்கு மேல் இருந்தால், ஆறு மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
- மற்ற சந்தர்ப்பங்களில், மூன்று மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம்.
பான் கார்டு இருந்தால் ஒருவர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?
பட மூலாதாரம், Getty Images
உங்களிடம் பான் கார்டு இருப்பதால் மட்டும் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என கட்டாயமில்லை. அது உங்கள் மொத்த வருமானம் மற்றும் சில சிறப்பு காரணிகளை பொறுத்தது.
உதாரணமாக, மேலே குறிப்பிட்டபடி:
- உங்கள் நடப்புக் கணக்கில் ரூ.1 கோடி மேல் டெபாசிட் செய்திருந்தால்
- உங்கள் சேமிப்புக் கணக்கில் ரூ.50 லட்சம் மேல் டெபாசிட் செய்திருந்தால்
- அல்லது வெளிநாட்டு பயணத்திற்கு ரூ.2 லட்சம் மேல் செலவிட்டிருந்தால் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வது கட்டாயமாகும்.
ஒவ்வொரு வருடமும் அவற்றை தாக்கல் செய்ய வேண்டுமா?
பட மூலாதாரம், Getty Images
“நீங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யத் தொடங்கியிருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்வது கட்டாயமில்லை”என்று கரீம் லக்கானி கூறுகிறார்.
அதாவது, ” ஒரு வருடத்தில் உங்கள் மொத்த வருமானம் அடிப்படை விலக்கு வரம்பை விடக் குறைவாக இருந்தால், அந்த ஆண்டிற்கான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை.”
“உதாரணமாக 2023–24 மதிப்பீட்டு ஆண்டில் உங்கள் வருமானம் ரூ.3 லட்சமாக இருந்தால் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்திருப்பீர்கள். ஆனால் 2024–25 மதிப்பீட்டு ஆண்டில் உங்கள் வருமானம் ரூ.2 லட்ச ரூபாயாகக் குறைந்து, அப்போது வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் எந்த நிபந்தனையும் பூர்த்தி செய்யவில்லை என்றால், அந்த ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை.”
ஆனால், முறையாக வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வது நல்லது என்று லக்கானி அறிவுறுத்துகிறார்
இது, நிதி மேலாண்மையைப் பேணுவதோடு எதிர்காலத்தில் கடன்களைப் பெறுவதையும் எளிதாக்கும்.
இது தவிர, உங்களுக்கு வரி பிடித்தம் செய்யப்பட்டிருந்தாலும் மொத்த வருமானம் வரிக்கு உட்பட்டதாக இல்லாவிட்டால், ரீஃபண்ட் பெற விண்ணப்பிக்கலாம்.
ஒருமுறை வரியை திரும்பப் பெற வருமான வரி தாக்கல் செய்யத் தொடங்கினால், ஒவ்வொரு ஆண்டும் வரியை திரும்பப் பெறுவதற்கு வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.
அதேபோல், உங்கள் வருமானம் விலக்கு வரம்பை விடக் குறைவாக இருந்தாலும், எதிர்கால ஆண்டுகளில் வணிக இழப்புகளை ஈடுசெய்ய ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
ஒரு நபருக்கு ஒரு வருடத்தில் வருமானம் இல்லாததால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்றாலும், அடுத்த ஆண்டு அவர் மீண்டும் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யலாம்.
வரி செலுத்தும் நபர் ஓய்வு பெற்றாலோ அல்லது பணி புரிவதை நிறுத்தினாலோ, என்ன செய்ய வேண்டும்?
பட மூலாதாரம், Getty Images
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கடமை, ஓய்வு பெறுவது அல்லது வேலையை விட்டு வெளியேறுவதுடன் மட்டும் முடிவதில்லை.
ஒரு நபர் ஓய்வு பெற்ற பிறகும் அல்லது வேலை செய்வதை நிறுத்திய பிறகும் அவர் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டுமா இல்லையா என்பது சில விஷயங்களைப் பொறுத்தது.
1. வருமானம்
- ஓய்வுக்குப் பிறகு உங்கள் வருமான ஆதாரங்கள் என்ன?
- உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கிறதா?
- வங்கி வட்டி, வாடகை வருமானம், பங்குச் சந்தை வருமானம் போன்ற வேறு வருமானங்கள் உள்ளனவா?
- இந்த எல்லா வருமானங்களின் கூட்டுத்தொகையும் அடிப்படை விலக்கு வரம்பை மீறினால், நீங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
2. ஓய்வூதியம்
- ஓய்வுக்குப் பிறகு பெறப்படும் ஓய்வூதியமும் வருமானமாகக் கருதப்படும். அது வருமான வரிக்கு உட்பட்டது.
- ஓய்வூதிய வருமானம் விலக்கு வரம்பை மீறினால், வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
3. வங்கி பரிவர்த்தனைகள்
- ஓய்வுக்குப் பிறகு வங்கிக் கணக்கில் பெரிய பரிவர்த்தனைகள் நடந்தால்
- கணக்கில் ரூ.1 கோடி மேல் டெபாசிட் செய்திருந்தாலோ
- வெளிநாட்டு பயணத்திற்காக ரூ.2 லட்சம் மேல் செலவிட்டிருந்தாலோ, வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
4. வரி திரும்பப்பெறுதல் (Refund) :
- ஓய்வு பெறுவதற்கு முன்பு சம்பளத்திலிருந்து அதிக வரி கழிக்கப்பட்டிருந்தால், அதைத் திரும்பப் பெற வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
- ஓய்வு பெற்ற நபரின் வருமானம் விலக்கு வரம்பை விடக் குறைவாக இருந்தால் மற்றும் வேறு எந்த நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்படாவிட்டால், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வது கட்டாயமில்லை. ஆனால் வரியை பெற அல்லது பிற காரணங்களுக்காக தானாக முன்வந்து வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்.
தொடர்ந்து வருமான வரி தாக்கல் செய்வதால் நன்மைகள் என்ன?
பட மூலாதாரம், Getty Images
வருமான வரி நிபுணர்கள் வருமான வரி கணக்கை (ITR) முறையாகவும் காலக்கெடுவிற்குள்ளும் தாக்கல் செய்ய அறிவுறுத்துகிறார்கள். இதற்கான பல காரணங்கள் உள்ளன:
- உங்கள் வருமானத்திற்கான அதிகாரப்பூர்வச் சான்று என்பது வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதுதான். இது அனைத்து வகையான கடன், கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் அல்லது முக்கிய நிதி பரிவர்த்தனைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
- வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளின் ஐடி ரிட்டர்ன்ஸ் (ITR) படிவத்தைக் கேட்கின்றன.
- வெளிநாடு செல்வதற்கான விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, பல நாடுகளின் தூதரகங்கள் கடந்த சில ஆண்டுகளின் வருமான வரி கணக்கு தாக்கல் சான்றிதழை கேட்கின்றன. இது உங்கள் பொருளாதார நிலைத்தன்மைக்கும் வருமானத்திற்கும் சான்றாகும். இதனால் விசா பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
- வரியைத் திரும்பப் பெறவும், இழப்புகளை முன்னோக்கி எடுத்துச் செல்லவும் கூட இது தேவைப்படுகிறது.
- அரசாங்க டெண்டர்கள் மற்றும் பிற பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போது கூட, கடந்த சில ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
- இது தவிர, இது உங்கள் முகவரிக்கான சான்றாகவும் கருதப்படுகிறது.
தொடர்ந்து வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாததால் ஏற்படும் தீமைகள் என்ன?
பட மூலாதாரம், Getty Images
வழக்கமான வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதில் நன்மைகள் உள்ளன, அதே நேரத்தில் அதனைத் தாக்கல் செய்யாமல் இருப்பதில் சில தீமைகளும் உள்ளன.
எடுத்துக்காட்டாக,
- வருமான வரி விதிகளின்படி, நீங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய தகுதியுடையவராக இருந்து, சரியான நேரத்தில் தாக்கல் செய்யவில்லை என்றால், உங்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் மற்றும் நிலுவையில் உள்ள வரிக்கு வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.
- உங்களுக்கு ஒரு வணிக அல்லது மூலதன இழப்பு ஏற்பட்டு, சரியான நேரத்தில் உங்கள் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றால், அடுத்த ஆண்டில் அத்தகைய இழப்புகளை நீங்கள் ஈடுசெய்ய முடியாது. ரியல் எஸ்டேட் மீதான இழப்புகள் இதில் விலக்கப்பட்டுள்ளன.
- நீங்கள் அதிகமாக வரி செலுத்தியிருந்து, இப்போது பணத்தைத் திரும்பப் பெற விரும்பலாம், ஆனால் வருமானத்தை தாக்கல் செய்யாமல் இருப்பது அந்த செயல்முறையைத் தாமதப்படுத்தும்.
- வங்கிகளும் நிதி நிறுவனங்களும் வருமான வரி கணக்கு தாக்கல் தாக்கல் செய்யாதவர்களுக்கு கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளை வழங்கத் தயங்குகின்றன.
- பல நாடுகள் விசா விண்ணப்பங்களுடன் வருமான வரி கணக்கு தாக்கல் சான்றிதழை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்குகின்றன. அது இல்லாமல், விசா பெறுவது கடினமாகிவிடும்.
- கடுமையான சந்தர்ப்பங்களில், வருமான வரித் கணக்கு தெரிந்தே தாக்கல் செய்யப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.
- வழக்கமான வருமான வரி தாக்கல் செய்யாத மக்களின் நிதி நம்பகத்தன்மை குறைத்து மதிப்பிடப்படுகிறது.
- இதன் காரணமாக, உங்கள் வருமானம், விலக்கு வரம்பை விடக் குறைவாக இருந்தாலும், வருமான வரித் தாக்கல் செய்வது சிலருக்கு நன்மை பயக்கும்.
ஐடி வருமானம் மற்றும் பான் அட்டைகள் தொடர்பான தவறான புரிதல்கள்
பட மூலாதாரம், Getty Images
வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் பான் கார்டுகள் தொடர்பாக வரி செலுத்துவோரிடம் பல தவறான கருத்துக்கள் உள்ளன.
சி.ஏ. கரீம் லக்கானி இந்த தவறான கருத்துக்களில் சிலவற்றை பட்டியலிட்டுள்ளார்.
தவறான கருத்து: நிறுவனம் வரி கழித்திருந்தால், வருமான வரி தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை.
உண்மை: உங்கள் மொத்த வருமானம் அடிப்படை விலக்கு வரம்பை விட அதிகமாக இருந்தால், வரி கழிக்கப்பட்டிருந்தாலும் கூட, வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது கட்டாயமாகும்.
தவறான கருத்து: எனது வருமானம் வரிக்கு உட்பட்டது அல்ல, எனவே நான் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியதில்லை.
உண்மை: உங்கள் வருமானம் அடிப்படை விலக்கு வரம்பை விடக் குறைவாக இருந்தால், பொதுவாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை,
ஆனால் மேலே குறிப்பிட்டுள்ளபடி, வங்கி பரிவர்த்தனைகள், வெளிநாட்டுப் பயணம் போன்ற பெரிய செலவுகள் இருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம்.
தவறான கருத்து: சம்பளம் வாங்குபவர்கள் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.
உண்மை: மொத்த வருமானம் விலக்கு வரம்பை மீறும் எவரும், அவர்கள் சுயதொழில் செய்பவராக இருந்தாலும், அல்லது வணிகம் செய்பவராக இருந்தாலும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
தவறான கருத்து: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது மிகவும் சிக்கலான மற்றும் அதிக நேரம் செலவிட வேண்டிய பணி
உண்மை: வருமான வரி தாக்கல் செய்யும் செயல்முறை இப்போது இணையதளத்திலே உள்ளது, மேலும் மிகவும் எளிதானது.
தவறான கருத்து: பரிசுகளுக்கு வரி இல்லை, எனவே அவற்றை வருமான வரிக் குறிப்பில் காட்ட வேண்டிய அவசியமில்லை.
உண்மை: சில உறவினர்களிடமிருந்து பெறப்படும் பரிசுகளுக்கு மட்டுமே வரி விலக்கு உண்டு. சில பரிசுகளுக்கு வரி விதிக்கப்படும், மேலும் அவை வருமான வரித் தாக்கல் படிவத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்
தவறான கருத்து: நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யத் தொடங்கியதும், ஒவ்வொரு ஆண்டும் அவற்றை தாக்கல் செய்ய வேண்டும்.
உண்மை: ஒரு வருடத்தில் உங்கள் வருமானம் விலக்கு வரம்பை விடக் குறைவாக இருந்தால், வேறு எந்த நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்படாவிட்டால், நீங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டியதில்லை.
வரி செலுத்துவோர் பான் கார்டு குறித்து அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள்
பட மூலாதாரம், Getty Images
- வரி தாக்கல் செய்வதற்கு மட்டுமல்ல, அடையாளச் சான்றாகவும் பான் கார்டு அவசியம். வங்கிக் கணக்கைத் தொடங்குவதற்கும் , முதலீடுகளைச் செய்வதற்கும், பெரிய கொள்முதல்கள் அல்லது விற்பனைகளைச் செய்வதற்கும் பான் கார்டு தேவைப்படுகிறது.
- உங்களிடம் பான் கார்டு இருக்கிறது என்பதற்காக மட்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயமில்லை. அதற்கான தேவை உங்கள் வருமானத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
- பான் கார்டில் முகவரியை மாற்றுவது கடினம் அல்ல. இதை இணையத்தளத்திலோ,நேரிலோ சென்று செய்துகொள்ளலாம்.
- ஆதார் அட்டை இருந்தால், பான் கார்டு தேவையில்லை என்பதும் தவறான கருத்து. இவை இரண்டும் தனித்தனி ஆவணங்கள். சில நிதி பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாயமாகும், மேலும் வருமான வரி தாக்கல் செய்ய பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதும் அவசியம்.
குழந்தைகளுக்கு பான் கார்டு இருக்க வேண்டுமா?
ஒரு குழந்தை ஒரு முதலீட்டில் நாமினியாக நியமிக்கப்பட்டு, பெரிய நிதி பரிவர்த்தனைகள் அவரது பெயரில் செய்யப்பட வேண்டுமென்றால், பான் கார்டு அவசியம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
கூடுதலாக, ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது சட்டவிரோதமானது மேலும் அதற்கு அபராதம் விதிக்கப்படலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு