• Fri. Nov 15th, 2024

24×7 Live News

Apdin News

வருமான வரி துறை கட்டுப்பாட்டுக்குள் கூட்டுறவு சங்கங்களை கொண்டுவர மத்திய அரசு முயற்சி: பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு | union Government tries to bring cooperative societies under control of it dept

Byadmin

Nov 10, 2024


திருவாரூர்: தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை வருமான வரித் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சிப்பதாகவும், தமிழக அரசு இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருமான வரித் துறை சார்பில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிச் செயலாளர்கள் கூட்டம் நடத்தி, கூட்டுறவு சங்கங்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. அனைத்து சங்கங்களையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும் விவசாயிகளின் பங்குத் தொகையை மூலதனமாகக் கொண்டு செயல்படுகின்றன. இவை தமிழக அரசின் கூட்டுறவு சங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றன.

மகாராஷ்டிராவில் சில கூட்டுறவு வங்கிகளில் பெரும் செல்வந்தர்கள் ரூ.500 கோடிக்கு மேல் பதுக்கி வைத்திருந்ததை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதை காரணம் காட்டி, நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வருமான வரித் துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல.

மேலும், வேளாண் கூட்டுறவு சங்கங்களை வருமான வரி செலுத்துமாறு நிர்பந்தப்படுத்தினால், அது விவசாயிகளுக்கு பேராபத்தாக அமையும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து, தமிழக அரசு வெளிப்படையான கொள்கை நிலையை தெளிவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால், விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



By admin