• Sat. Feb 7th, 2026

24×7 Live News

Apdin News

வருமான வரி வழக்கு: விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது செல்லத்தக்கது – உயர் நீதிமன்றம் கூறியது என்ன?

Byadmin

Feb 7, 2026


வருமான வரி வழக்கு, விஜய், சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, கோப்புப் படம்

வருமான வரித் துறையால் தனக்கு விதிக்கப்பட்ட ஒன்றரைக் கோடி ரூபாய் அபராதத்தை ரத்துசெய்ய வேண்டுமென தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. நிவாரணம் கோரி தீர்ப்பாயத்தை அணுகலாம் எனவும் கூறியுள்ளது.

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், 2015 -16ஆம் நிதியாண்டில் தனக்குக் கிடைத்த கூடுதல் வருவாயான 15 கோடி ரூபாய் குறித்த விவரத்தை தானாக முன்வந்து தெரிவிக்காததாக வருமான வரித் துறை 2022ஆம் ஆண்டில் அவருக்கு 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.

குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த அபராதம் விதிக்கப்படவில்லையென்பதால் இதனை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, குறிப்பிட்ட காலத்திற்குள் தான் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.

விஜய் தரப்பு விரும்பினால், காலக்கெடு குறித்த விவகாரத்தைத் தவிர்த்து வேறு விஷயங்களை முன்வைத்து மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தை அணுகலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?

வருமான வரி வழக்கு, விஜய், சென்னை உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், @actorvijay/X

படக்குறிப்பு, 2015இல் விஜய் நடிப்பில் வெளியான புலி திரைப்படம்

2015ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி விஜய்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறை சோதனைகளை நடத்தி சில ஆவணங்களைக் கைப்பற்றியது. அந்த ஆவணங்களின்படி, 2015ஆம் ஆண்டில் புலி திரைப்படத்தைத் தயாரித்த பி.டி. செல்வகுமாரும் ஷிபு என்பவரும் அந்தப் படத்திற்காக காசோலை மூலம் 16 கோடி ரூபாயும் ரொக்கமாக 4.93 கோடி ரூபாயும் அளித்திருந்தது தெரியவந்தது.

By admin