தமிழ்நாட்டில் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்) முடிந்து, வரைவு வாக்காளர் பட்டியலை இன்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார்.
மாவட்ட வாரியாக வரைவுப் பட்டியலை அந்தந்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகள் வெளியிட்டார்கள்.
இன்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி, தமிழ்நாட்டில் மொத்தமாக 97,37,832 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
எஸ்.ஐ.ஆர் பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பு, மாநிலத்தில் மொத்தம் ஆறு கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளர்கள் இருந்தனர்.
ஆனால், எஸ்.ஐ.ஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது வெளியாகியுள்ள வரைவுப் பட்டியலில் ஐந்து கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் உள்ளனர்.
இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள்/குறிப்பிட்ட முகவரியின் வசிக்காதவர்கள், வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்தவர்கள் ஆகிய பிரிவின்கீழ் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன எனத் தேர்தல் ஆணையம் கூறுகிறது.
அதாவது தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு காரணங்களால் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இவர்கள் பிற மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் வாக்காளர்களாக இருப்பது
காணப்படாதது
டிசம்பர் 14க்குள் எஸ்.ஐ.ஆர் படிவத்தை சமர்ப்பிக்காதது
ஏதேனும் காரணங்களுக்காக வாக்காளர்களாகப் பதிவு செய்ய விரும்பாதது
இந்த நிலையில், வரைவுப் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அதுகுறித்து இங்குப் பார்ப்போம்.
பெயர் இருப்பதை உறுதி செய்வது எப்படி?
வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் தமது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை எபிக் (EPIC) எண்ணை உள்ளிட்டுத் தெரிந்துகொள்ளலாம். கணக்கீட்டுப் படிவத்தில் எபிக் (EPIC) இருக்கும்
அதில் உங்கள் உங்கள் எபிக் (EPIC) எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். பின்னர் உங்கள் பெயர் உள்ளதா இல்லையா என்பதை அறிந்துகொள்ளலாம்.
அத்துடன் பிற வழிகளில் உள்நுழைந்து தேடும் வசதியும் உள்ளது.
உங்களுடைய மாவட்டம், தொகுதி மற்றும் வாக்குச்சாவடி விவரங்கள் ஆகியவற்றை இதில் காணலாம்.
இணையதளத்தில் பதிவேற்றப்படுவதோடு, வரைவுப் பட்டியல் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் பார்வைக்கும் வைக்கப்படும். மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் ஒரு நகல் கொடுக்கப்படும்.
எனவே, ஒருவர் தமது பெயர் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவரைத் தொடர்பு கொண்டுகூட உறுதி செய்துகொள்ள முடியும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோப்புப்படம்
பெயர் இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இந்த வரைவுப் பட்டியலில் இடம்பெறாத, குறித்த காலக்கெடுவிற்குள் கணக்கீட்டுப் படிவம் சமர்ப்பிக்காத வாக்காளர்கள், தங்களை வாக்காளர்களாகச் சேர்ப்பதற்கான படிவம் 6-ஐ புதிதாகச் சமர்ப்பித்து தங்களின் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும், வரைவுப் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள், நீக்கப்பட்டதற்கான காரணத்தை அந்தந்த மாவட்ட ஆட்சியர் இணையதளம் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி இணையதளத்தில் பார்க்கலாம்.
படிவம் 6-ஐ பயன்படுத்தி புதிய வாக்காளர்கள், கணக்கீட்டுப் படிவம் கிடைக்காதவர்கள், கிடைத்தும் சமர்ப்பிக்காதவர்கள் என அனைவரும் தங்களின் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.
அதேபோல, வேறு இடத்திற்கு மாறிச் சென்றவர்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம் 8-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
டிசம்பர் 19 முதல் ஜனவரி 18 வரை பெயர்களைச் சேர்ப்பது மற்றும் நீக்குவதைச் (Claims and objection period) செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஒருவேளை பெயர் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என்று ஆட்சேபங்கள் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18 வரை அதைத் தெரிவிக்கலாம். அதற்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.