திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த பாதை கடந்த ஓராண்டுக்கு மேலாக அடைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் சுவர் வைத்து அந்த பாதையை அடைத்துள்ளார்.
அத்தியாவசியத் தேவைகளுக்கு நகரப் பகுதிக்குச் செல்ல அபாயகரமான சாலையில் சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகப் பட்டியலின மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது பட்டியலின மக்கள் செல்வதை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் ‘தீண்டாமை சுவர்’ என பட்டியலின மக்கள் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அதில் பட்டா உரிமையாளரின் அனுமதி பெற்று சுவர் இடிக்கப்பட்டு பாதை அமைத்துத் தரப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டாகியும் இன்றுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்று பாதிக்கப்பட்ட மக்கள் அரசிடம் கேள்விகளை எழுப்புகின்றனர்.
இந்த சுவரை எழுப்பிய நிலத்தின் உரிமையாளர் ஜெபகர் அலி தற்போது மற்றொரு நபரிடம் அந்த இடத்தை விற்றுவிட்டதால் இந்த விவகாரம் மேலும் சிக்கலாகியுள்ளது.
அதேசமயம், இது பொதுப் பாதை அல்ல, தன்னுடைய பட்டா இடம் . வீட்டு மனைகள் விற்பனைக்காக எல்லை மற்றும் பொதுவான பாதுகாப்பு காரணங்களுக்காக சுவர் எழுப்பியதாகவும் ஜெபகர் அலி கூறுகிறார். அந்த இடத்தை தற்போது வேறொரு நபரிடம் விற்று விட்டதால் தனக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை எனவும், பட்டியலின மக்கள் வைக்கும் குற்றச்சாட்டை ஜெபகர் அலி மறுக்கிறார்.
இந்த விவகாரம் குறித்த உண்மை நிலை என்ன என்பதைக் கண்டறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.
“தீண்டாமைச் சுவரின்” பின்னணி என்ன?
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டில் அமைந்துள்ளது கோவில்பத்து. இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கோவில்பத்து மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள பாரியபுரம், நடுத்தெரு, மேலத்தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் பட்டியல் இன மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். கோவில்பத்து எல்லைக்குட்பட்ட பகுதியில் ‘B வாய்க்கால்’ மீது தட்டிப் பாலம் அமைத்து, அதன் வழியாக அத்தியாவசியத் தேவைகளுக்கு நகரத்தை சென்றடைகின்றனர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டியலின மக்கள் இந்த பாதையை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
15 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுவருக்கு உட்பட்ட தற்போதைய மனைகள் விவசாய நிலமாக இருந்தன. அப்போதிலிருந்தே வாய்க்காலில் தட்டிப் பாலத்தைப் பயன்படுத்தி, வரப்பு வயல்வெளிகளைத் தாண்டி அவசரத் தேவைகளுக்கு வந்து செல்ல இப்பகுதி மக்களுக்கு இது பிரதான பாதையாக இருந்துள்ளது.
காலப்போக்கில் விவசாய நிலங்கள் வீட்டுமனைகள் ஆன பின்னர், 15 ஆண்டுகளாகக் காலி மனையாக இருந்த இப்பகுதியில் வழக்கம்போல் பட்டியலின மக்கள் அந்தப் பாதையைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
நகரத்தை இணைக்கத் தெருச் சாலைகள் இருந்தாலும், ஆபத்தான வளைவுகளால் அடிக்கடி ஏற்பட்ட விபத்துகள், ஒரு கிலோமீட்டர் கூடுதல் பயணம் உள்ளிட்ட காரணங்களால் இந்தப் பாதையை பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில்தான் இந்தப் பாதையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு சுவர் எழுப்பப்பட்டுள்ளதாகக் கோவில்பத்து பகுதி மக்கள் கூறுகின்றனர்.
“சாதிய பாகுபாடு தான் காரணம்”
பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவாரூர் மாவட்ட தலைவர் முரளி “கடந்த ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் வலங்கைமான் உதவி காவல் ஆய்வாளர் மற்றும் வலங்கைமான் பேரூராட்சி இளநிலை உதவியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் கோவில்பத்து பகுதி மக்கள் தரப்பில் 10 பேரும், நில உரிமையாளர் ஜெபகர் அலி மற்றும் அவர் தரப்பில் 10 பேரும் பங்கேற்று கையெழுத்திட்டுள்ளனர்” என்றார்.
சமாதானக் கூட்டத்தில் பிரச்னைக்குரிய இடமான ‘B வாய்க்கால்’ பகுதியை பொதுப்பணித்துறை மூலம் நில அளவை செய்து, ஆக்கிரமிப்புகள் இருப்பின் அகற்றப்படும் என்றும், ஆக்கிரமிப்பு இல்லாத பட்சத்தில் பட்டாதாரரின் அனுமதியுடன் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் நில எடுப்பு செய்து பாதை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓராண்டு காலம் ஆகியும் இதுவரை அரசு தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் முரளி, “நடவடிக்கையின்மை காரணமாக, கிராம மக்களுடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குத் தொடர்ந்து மனு அளித்தோம்,” எனக் கூறினார்.
மதுராபட்டினம், கரூர், தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் சமீபத்தில் நடந்த சாதிய ஆதிக்கச் சம்பவங்களையும் முரளி சுட்டிக்காட்டினார்.
பட்டியலின மக்கள் கூறுவது என்ன?
பிபிசி தமிழிடம் பேசிய கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த 46 வயதான மஞ்சுளா, “நான் இங்குக் கல்யாணம் ஆகி வந்து 25 வருடங்கள் ஆகின்றன. இத்தனை காலமாக இந்தப் பாதையைத்தான் நாங்கள் பயன்படுத்தி வந்தோம். நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பது தான் இங்கு பிரச்னையே. பிரதான சாலையில் நிறைய விபத்துகள் ஏற்படுகின்றன. நகரத்துக்குள் செல்ல இரண்டு பெரிய ஆபத்தான வளைவுகளை கடக்க வேண்டும். ஏற்கெனவே எங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் அந்த சாலையை பயன்படுத்தி, விபத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்” கூறுகிறார்.
“இரவோடு இரவாக எழுப்பப்பட்ட சுவர்..”
பிபிசி தமிழிடம் பேசிய 65 வயது ஜெயலட்சுமி, “எனக்கு விவரம் தெரிந்தது முதல் இதுதான் பாதையாக இருந்தது. என் பிள்ளைகள் பள்ளிக்கூடம் போனதும் இந்தப் பாதையில தான். அப்போது வரப்பாக அகலமாக இருக்கும். எங்களுக்கு பாதை அமைத்து தருவதாக உறுதி அளித்துவிட்டு, இரண்டு பக்கமும் சில ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுச்சுவர் எழுப்பிவிட்டார். பிறகு, திடீரென ஒரு நாள் இரவில் ஒன்பது அடி அகலப் பாதையை சுவர் எழுப்பி அடைத்து விட்டார்” என்றார்.
பிபிசி தமிழிடம் பேசிய கோவில்பத்து பகுதியைச் சேர்ந்த இளைஞர் சரவணன்: “பெயரளவுக்கு கூட்டம் நடத்துகிறார்கள். ஆனால் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இந்த மாத இறுதியில் மறுபடியும் சமாதானக் கூட்டம் நடத்தப் போவதாக சொல்லி இருக்கிறார்கள்” என்றார்.
பிபிசி தமிழிடம் பேசிய ஜெபகர் அலி “இது திட்டமிட்ட சதி, பணத்துக்காக இவ்வாறான தவறான பார்வையில் பிரச்னையைப் பெரிதாக்குகிறார்கள். இது எனது பட்டா நிலம். 2009-ல் பாதி பகுதி வரை சுவர் எழுப்பி அடைத்துவிட்டேன், மீதிப் பகுதியை பிறகு சுவர் எழுப்பினேன். பாதை அமைத்துத் தருவதாக நான் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை,” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், தற்போது அந்த இடத்தை வேறு ஒருவரிடம் விற்றுவிட்டதால், இது குறித்துத் தன்னால் எதுவும் செய்ய முடியாது, அந்த நிலத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி
இந்த நிலம் தற்போது ஃபாசில் என்பவருக்கு விற்கப்பட்டுள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய அவர், “நான் ஆறு வருடங்கள் வெளிநாட்டில் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தில், இந்த இடத்தில் 2086 சதுர அடி நிலத்தை மட்டும் வாங்கினேன், அதிலும் நான் வாங்கிய அந்த குறிப்பிட்ட இடத்தில் இவ்வளவு பெரிய பிரச்னை இருப்பது சில நாட்களுக்கு முன்புதான் தெரியவந்தது” என்றும் கூறினார்.
அந்த இடத்தில் வீடு கட்டுவதற்காகத் தண்ணீர் தேவை காரணமாக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி நடக்கும் நிலையில், “நான் பணம் கொடுத்து வாங்கிய இடத்தை இழக்க முடியாது” என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார். பிரச்னை தெரிந்தவுடன், முந்தைய உரிமையாளரிடம் பணத்தைத் திரும்பக் கேட்டு நிலத்தை வாங்கச் சொன்னபோது, அவர் மறுத்துவிட்டதாகவும் ஃபாசில் தெரிவித்துள்ளார்.
அரசு தரப்பில் கூறுவது என்ன?
இது பற்றி பிபிசி தமிழிடம் பேசிய வலங்கைமான் தாசில்தார் ஓம் சிவக்குமாரன், “சுவர் எழுப்பப்பட்டிருக்கும் பின்புறம் பொதுப் பாதை உள்ளது, சுவருக்குப் பின்னால் வாய்க்கால் செல்கிறது, அந்த வாய்க்கால் வரை அரசு இடத்தில்தான் உள்ளது. சுவர் எழுப்பப்பட்டுள்ளது ஆக்கிரமிப்பு இடம் கிடையாது, பட்டா இடம். கடைத்தெருவில் அமைந்திருக்கும் நகரப் பகுதிக்கு எளிமையாகச் செல்ல இந்த குறுகிய பாதையை நீண்ட காலமாக மக்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள்.”
“இது ஆக்கிரமிப்பு எனவும், தீண்டாமைச் சுவர் எனவும் கடந்தாண்டு மனு அளித்திருந்தனர். ஆனால், அதன் பிறகு நில அளவை செய்யும்போது இது ஆக்கிரமிப்பு இல்லை, பட்டா இடம் என்பது தெரியவந்தது. இருந்தாலும் ஆதிதிராவிடர் நலத்துறை பார்வைக்குக் கொண்டு செல்வதாக சமாதானக் கூட்டத்தில் தெரிவித்திருந்தோம். ஆனால், மக்களுக்கு இது பிரதான பாதையாக இருந்தாலோ, அல்லது மயானத்திற்கு தேவைப்பட்டாலோ அரசு தரப்பில் நடவடிக்கை எடுப்பதற்குச் சரியான காரணமாக இருக்கும்.” என்று கூறினார்.
மேலும், “இவர்களுக்கு நகரப் பகுதிக்கு வருவதற்கு தார் சாலை ஏற்கனவே தெருவில் இருப்பதால், பாதை ஏற்படுத்தி தர சரியான காரணங்கள் இல்லை. இந்த மனு பற்றிய நிலவரத்தை ஏற்கனவே ஆட்சியரிடம் அனுப்பியுள்ளோம். ஆதிதிராவிடர் நலத்துறையும் நேரடியாக வந்து பார்த்து இந்த பாதை அவசியமானதாக இருந்தால் ஏற்படுத்தித் தருவார்கள்” என்று கூறினார்.
அரசு நிலத்தை எடுக்க நேர்ந்தால், தான் செலவழித்த சுமார் 24 லட்சம் ரூபாயைத் திரும்பக் கொடுத்தால் மட்டுமே நிலம் தர முடியும் என்றும் கூறிய ஃபாசில், “இருந்தாலும் என்னால் அதை உறுதியாகச் சொல்ல முடியாது” என்றார்.
பிபிசி தமிழிடம் பேசிய வலங்கைமான் பேரூராட்சி தலைவர் ஷர்மிளா, “இந்த பகுதி தீண்டாமை பிரச்னைகள் அதிகம் நடைபெறும் பகுதி அல்ல. வலங்கைமான் டவுன் பொருத்தவரை எல்லா சமுதாய மக்களும் வசிக்கிறார்கள். கோவில்பத்து பகுதியில் பட்டியலின மக்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். அந்த இடம் பாதையாக இருந்தது என கூறுவது சரிதான், ஆனால் அது இன்னொருவருடைய பட்டா நிலம் என்பதால் நாம் அது பற்றி தகவல் எதுவும் தெரிவிக்க முடியாது. ஒருவேளை அரசு முன்வந்து பட்டாதாரர் அனுமதியுடன் இந்த இடத்தை வாங்கினால் பாதை ஏற்படுத்த வாய்ப்புண்டு” என்று கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு