• Wed. Sep 3rd, 2025

24×7 Live News

Apdin News

வலிந்து காணாமல் ஆக்கபட்ட உறவுகளுக்கான நீதியும் ஊடகவியலாளர் அச்சுறுத்தலும் | கேசுதன்

Byadmin

Aug 31, 2025


விடுதலை போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்த பல அப்பாவி பொதுமக்கள் சூட்சுமமான முறையில் காணாமல் ஆக்கப்பட்டது எல்லோரும் அறிந்த விடயமே. ஆனாலும் நீதிக்காக போராடிவரும் உறவுகளுக்கு அசமந்த போக்கினை காட்டி வரும் அரசாங்கம் இன்றுவரையில் வாய்திறக்காமல் இருப்பது சந்தேககமாகவே மக்களால் உணரமுடிகிறது.

மகிந்த அரசாங்கம் போரை நிறைவு செய்த பின்னர் பல மக்கள் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டு வதை முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டு பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது சிங்கள அரசாங்கத்திற்கு மட்டுமே தெரிந்த உண்மையாக உள்ளது. இது காலாகாலமாக அரசாங்கத்தினால் தட்டிக்கழிக்கப்படுகின்ற செயல்பாடாகவே இருந்துவருகிறது.

வெள்ளை வேன்களில் கடத்திச்செல்லப்பட்டவர்களும் விடுதலை போராட்ட களங்களில் இராணுவக்கட்டுப்பாட்டில் பொய்யான குற்றச்சாட்டுக்களில் கைதுசெய்யப்படடவர்களும் முள்ளிவாய்க்கால் இறுதியுத்தத்தின்போது திருமணமானவர்,ஆகாதவர் போராளிகள் அப்பாவிப்பொதுமக்கள் என பயங்கரவாத தடைச்சட்டத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு வெவ்வேறு பேருந்துகளில் ஏற்றப்பட்டவர்கள் என்ன ஆனார்கள் என்று விடைதெரியாமல் வீதி வீதியாய் நடைப்பிணமாக செல்லும் உறவுகளுக்கு நீதி கிடைக்க வடக்கு கிழக்கில் ஒவ்வொரு இடங்களிலும் போராட்டம் இடப்பெற்ற வண்ணமே உள்ளன.

செம்மணி புதைகுழி தோற்றம்

1995ம் ஆண்டு பிற்பகுதியிலும் 1996ம் ஆண்டு முற்பகுதியிலும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்க்குடாநாடு மீள சிங்கள இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததில் இருந்து தன்னிச்சையான கைதுகள் ,சித்திரவதை ,வன்புணர்வு , காணாமல் ஆக்கப்படுதல் ஆகிய மலிந்தே காணப்பட்டன. அக்காலத்தில் இலங்கை ஜனாதிபதியாக இருந்தவர் சந்திரிக்கா அம்மையார். அந்த தருவாயில் மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்க முனைந்தால் அது பாரதூரமான விளைவுகளை மக்கள் சந்திக்க நேர்ந்தது.
கைது செய்யப்பட்ட பெண்கள் ஆண்கள் என்போரை விடுதலைபுலிகள் என பொய்முத்திரை குத்தப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டனர். குடும்பபெண்கள் கைக்குழந்தைகளோடு செம்மணி முகாமில் கணவர்களை தேடுவதற்காக செல்லும் வேளையில் கூட்டு வன்புணர்வு சிங்கள இராணுவத்தினரால் நடத்தப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்ட வரலாறுகள் ஏராளம்.

கொடிய குற்றங்களை தமிழ் மக்கள் மீது திணித்த அரசாங்கம் அதை மூடி மறைபதற்காக பல சித்துவேலைகளை காட்டினர் என்பது தமிழ் மக்கள் அனைவரும் உணர்ந்ததே. அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரையிலும் தமிழ் மக்கள் மீது இனவாத வெறியாட்டமே ஆடிவருகிறது.

ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்

இன்று செம்மணி விவகாரம் வெளிவருகின்ற போதிலும் அதை சர்வதேச அரங்கில் முன்னிலைப்படுத்த விளைகின்ற எமது ஊடக வியலாளர்கள் விசாரணைக்காக அழைக்கப்படுவதும் பல மணிநேர விசாரணைக்கு உட்படுத்தபடுவதையும் அவைகளை வீடுகள் தாக்கப்படுவதையும் சொத்துக்கள் நாசமாக்கப்படுவதையும் தொடர்ந்துவருகின்றனர். மக்கள் போராட்ட களங்களை மற்றும் தொடரும் தமிழ் மக்கள் மீதான இனவாத செயல்பாடுகளை பதிவு செய்யும் பொருட்டு அதை வலைபங்கங்களிலும் முகநூல்களிலும் பதிவு செய்பவர்கள் அச்சுறுத்தப்படுவதோடு அவர்களின் குடும்பங்களையும் தங்கள் அவர்களின் அச்சுறுத்தல் கட்டுப்பாடில் வைக்கின்றனர். தமிழர்களுக்காக தமிழர் மண்ணுக்காக இங்கு போராடும் ஊடகங்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலீஸ் பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

உதாரணமாக குறிப்பிடுவோமேயானால் போர்ச்சூழல் ஏற்ப்பட்டிருந்த காலத்தில் கூட 2000 ஆண்டு ஊரடங்கு உத்தரவின்போது பிபிசி மற்றும் வீரகேசரிக்கு நடுநிலையான உண்மைச் செய்திகளையும் சம்பவங்களையும் வழங்கிவந்த முன்னணி ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் இலங்கை இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் பெற்றோரின் கழுத்தில் கத்திவைக்கப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட இனவாத வன்முறைகளை வெளிக்கொணரும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்களையும் மீறி சர்வதேச அரங்கில் மக்களின் நீதிக்காக போராடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தற்போது பயங்கரவாத தடைச்சட்டம் , பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் போன்றன தவறாக பயன்படுத்தப்பட்டு ஊடகவியலாளர்கள் அடக்கப்படுவதை பார்க்க முடியும். பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்காக பல்லின அமைப்புக்கள் கூட்டறிகைகளை இலங்கை அரசாங்கத்தை கேட்டுள்ளது.

மக்களின் கருத்துச்சுதந்திரத்திற்கு இடமளிக்காத அரசாங்கம் தங்களின் குற்றங்களை மூடிமறைக்கவே உறுதியாக உள்ளது எனும் முடிவுக்கு வரலாம்.
இலங்கையில் இடம்பெறும் இனவாத செயல்பாடுகள் பழிவாங்கல் குறிப்பாக போர்க்குற்றங்களை குறித்துப்பேசும் வாய்களை அடைப்பதற்கும் ஒடுக்குவதற்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை பெரும்பாலும் காண முடியும்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நீதியின் மௌனம்

2025-08-30 திகதி வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதையும் ஐநா ஆணைக்குழுவிற்கு
தங்கள் மனுக்களை வழங்குவதையும் தவறவில்லை. பல வருடங்களாக தொடரும் இந்த போராட்டம் முடிவிற்கு வருவதாக தெரியவில்லை. இலங்கை இனவாத அரசாங்கங்கங்களை நம்பி நம்பி தமிழ் மக்கள் தங்கள் நம்பிக்கைகளை கைவிட்டு வருகின்றனர். சர்வதேசம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காண நீதியில் மௌனம் காப்பது ஏன்? போர்க்குற்றங்களை சிங்கள அரசாங்கம் தான் நிகழ்த்தியது என்பது உலகறிந்த உண்மை. அதனை தட்டிக்கழித்து வரும் பதவிபீடம் ஏறும் சிங்கள தலைமைகள் ஒன்றுக்கொன்று உதவிபுரிவதை கட்டிடாமல் அவர்களை எதிரிகளாக சித்தரித்து தமிழ் மக்கள் மத்தியில் கபட நாடகம் ஆடிவருகின்றது.தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு என்றாவது ஒரு நாள் சர்வதேசம் பதில் சொல்லியே ஆகவென்றும். போராட்டங்கள் கைவிடப்பட்ட பின்னரும் தமிழ் மக்களின் அபிலாசைகளையும் அவர்களின் எண்ணங்களையும் குழிதோண்டி புதைப்பதிலேயே குறியாக நிற்கிறது.

தமிழ் மக்கள் ஆண்டாண்டுகாலமாக அனுபவித்து வந்த வலிகள் இன்னும் தொடர்ந்தவண்ணமே உள்ளன. போராளிகள் என்று அடையாளப்படுத்திய பின்னரும் புனர்வாழ்வளிப்பதாக கூட்டிச்சென்று இன்னும் வீடு திரும்பாத உறவுகள் மிகையாகவே உள்ளனர். விசாரணைகளின் பெயரில் கைதுசெய்யப்பட்டு கூடிச்சென்ற உறவுகள் எங்கே? உறவுகளால் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல எந்த சிங்கள தலைமைகளும் முன்வரவில்லை. இது சிங்கள இனவாதிகளிடம் உள்ள குரோத மனப்பாங்கையே வெளிக்காட்டி நிற்கிறது.

கதறியழும் தாய்மார்களின் சாபங்களின் மீது படுத்துறங்கும் வேடம் தரித்த உத்தமர்களின் அரசியல் அத்திவாரம் சர்வதேச நீதி தமிழ் மக்களின் மீது திரும்புமேயானால் அவர்களின் அரசியல் அத்திவாரம் உடைத்தெறியப்படும் என்பது போராடும் மக்களின் கருத்துக்களாகவே அங்கு முழங்குகின்றன. பல ஆண்டுகளாக முன்னெடுத்து வரும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியில் ஐநா மௌனம் சாதிப்பது ஏன்? சிங்கள இனவாத அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதில் அச்சத்தை தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவிக்கிறது.

போர்ச்சூழலை உருவாக்கி முடித்ததன் பின்னர் மகிந்த அரசாங்கம் போர்குற்றங்களை நிராகரித்தே வந்தது அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கணிசமான அளவு இவருடைய காலத்திலேயே இடம்பெற்றது என்பது மறைக்க முடியாத உண்மை. அத்தோடு ஜேவிபி அரசாங்கம் அக்காலத்தில் இருந்தே ஒவ்வொரு அரசாங்கத்துடனும் இணைந்து தமிழின அழிப்பு உக்திகளையே கையாண்டு வந்தது. சிறுபான்மை இனங்களை அழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஜேவிபி தலைமையில் இருந்த தருவாயிலும் தலைமையில் இருந்த தலைமைகளின் மீதும் இந்த இனவெறி செயல்களை ஊட்டி வளர்த்தது.

மிதமிஞ்சிய இனவன்முறைகளுக்கு முகம் கொடுத்து வரும் சிறுபான்மை இனமான தமிழ் மக்கள் அவர்களின் உறவுகளுக்கான நீதிகளை கிடைத்தால் மிகப்பெரும் வெற்றி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டுவருகின்றனர். இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து சர்வதேச நீதிகளையே மக்கள் வேண்டி நிற்கின்றனர் என்றால் எவ்வளவு காலமாக சர்வதேச நீதி புறக்கணிக்கப்படுகிறது என்பது தெரிகிறது. இறுதி மூச்சு வரை மக்கள் சிங்கள இனவாத அரசாங்கத்திடம் இருந்து நீதிகளை பெற முடியாது என்பதை தெரிந்த பின்னரே சர்வதேச நீதிகளை பெற முயன்று வருகின்றனர்.

உலக நாடுகளால் மட்டுமே முடியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதி பெற்றுத்தரமுடியும் என்ற திடத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டங்கள் இன்றும் தொடர்ந்து வருகின்றது.

கேசுதன்

By admin