• Mon. Dec 23rd, 2024

24×7 Live News

Apdin News

வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் நாளை எங்கெல்லாம் கனமழை? | Heavy rain likely in Chengalpattu, Villupuram, Cuddalore tomorrow

Byadmin

Dec 23, 2024


வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், அன்று மாலை அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வழுவிழந்தது. இதையடுத்து நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு – தென்மேற்கு திசையில் நகர்ந்து, வரும் 24-ம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியை ஒட்டிய வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும். இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 8 செமீ மழை பதிவானது.

வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியில கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 87.8-89.6 டிகிரியை பாரன்ஹீட்டை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 75.2-77 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டியும் இருக்கக்கூடும்.

ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்றும், வடதமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



By admin