• Tue. Oct 29th, 2024

24×7 Live News

Apdin News

வளர்ந்துவரும் அணிகளுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் ஏ அணி சம்பியனானது

Byadmin

Oct 29, 2024


ஓமானில் நடைபெற்ற வளர்ந்துவரும் வீரர்களைக் கொண்ட அணிகளுக்கு இடையிலான ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணி சம்பியனானது.

இலங்கை ஏ அணிக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் 11 பந்துகள் மீதம் இருக்க ஆப்கானிஸ்தான் ஏ அணி 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றியீட்டி சம்பயின் பட்டத்தை சுவீகரித்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை ஏ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை ஏ அணியின் முன்வரிசை வீரர்கள் நால்வர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழக்க 5ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை வெறும் 15 ஓட்டங்களாக இருந்தது.

இதன் காரணமாக இலங்கை ஏ அணி பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால், பவன் ரத்நாயக்க, சஹான் ஆராச்சிகே ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து   அணியின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தினர்.

பவன் ரத்நாயக்க 20 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சஹான் ஆராச்சிகே 6ஆவது விக்கெட்டில் நிமேஷ் விமுக்தியுடன் மேலும் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

நிமேஷ் விமுக்தி 23 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் மேலும் ஒரு விக்கெட் சரிந்தது. (108 – 7 விக்.)

சஹான் ஆராச்சிகே 64 ஓட்டங்களுடனும் துஷான் ஹேமன்த 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் மொத்த எண்ணிக்கையை 133 ஓட்டங்களாக உயர்த்தினர்.

பந்துவீச்சில் பிலால் சமி 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஏ.எம். கஸன்பர் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் ஏ அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி சம்பியனானது.

ஆப்கானிஸ்தான் ஏ அணியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரர் ஸுபைத் அக்பாரி முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார், ஆனால், சிதிக்குல்லா அத்தல் 2ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் தார்விஷ் ரசூலியுடன் 43 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் கரிம் ஜனத்துடன் 52 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் மொஹமத் இஷாக்குடன் 39 ஓட்டங்களையும் பகிர்ந்து ஆப்கானிஸ்தான் ஏ அணியை சம்பியனாக்கினார்.

சிதிக்குல்லா அத்தல் ஆட்டம் இழக்காமல் 55 ஓட்டங்களைப் பெற்றதுடன் தார்விஷ் ரசூலி 24 ஓட்டங்களையும் கரிம் ஜனத் 33 ஓட்டங்களையும் மொஹமத் இஷாக் ஆட்டம் இழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சஹான் ஆராச்சிகே, துஷான் ஹேமன்த, ஏஷான் மாலிங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஏ.எம். கஸான்பார்

By admin