• Fri. Oct 25th, 2024

24×7 Live News

Apdin News

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு | Chance of heavy rain in 19 districts today

Byadmin

Oct 25, 2024


சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த ‘டானா’ புயல், வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று தீவிர புயலாக வலுப்பெற்றது.

120 கி.மீ வேகத்தில் காற்று இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை பகுதிகளில், பூரி – சாகர் தீவுகளுக்கு இடையே, பிதர்கனிகா மற்றும் தாமரா (ஒடிசா) அருகே அதிதீவிர புயலாக இன்று காலை கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில், அப்பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதற்கிடையே, தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், 26 முதல் 30-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



By admin