• Wed. May 7th, 2025

24×7 Live News

Apdin News

வாக்களிப்பு வீதம் குறைந்தாலும் தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி நிச்சயம் | அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Byadmin

May 6, 2025


ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலைப் போன்று வாக்களிப்பு வீதம் பதிவாகாவிட்டாலும், தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி நிச்சயம். எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் கிராமங்களின் அபிவிருத்திகளை அதிகரிப்பதற்கான பலத்தை நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வழங்குவர் என்ற நம்பிக்கை இருக்கிறது என சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (6) வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கத்தின் கீழ் மக்கள் எதிர்கொண்டுள்ள முதலாவது தேர்தல் இதுவாகும்.

கடந்த 6 மாதங்களில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் ஜனாதிபதியும் முன்னெடுத்த திட்டங்கள் தொடர்பில் மக்கள் நன்கு அறிவர். தற்போது மக்களின் வாழ்க்கை சுமை குறைக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளதால் மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள் குறைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் எதிர்வரும் நான்கு ஆண்டுகளில் கிராமங்களின் அபிவிருத்திகளை அதிகரிப்பதற்கான பலத்தை நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வழங்குவர் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாம் பாரிய வெற்றியைப் பெற்றுக்கொள்வோம்.

தனித்தனியே இருப்பதைப் போன்று காண்பித்து ஒன்றிணைந்து அரசாங்கத்தின் மீது அவதூறு பரப்பிய எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் சிறந்த பாடம் புகட்டுவர்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலைப் போன்று வாக்களிப்பு வீதம் பதிவாகாவிட்டாலும், தேசிய மக்கள் சக்திக்கு வெற்றி நிச்சயம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் வீழ்ச்சியடைவது இயல்பானதாகும். ஒன்றிணைந்து அரசாங்கத்தை கவிழ்க்க நினைக்கும் எதிர்க்கட்சிகளே செல்வதற்கு இடமின்றி தனித்து விடப்படப்போகிறது என்றார்.

By admin