படக்குறிப்பு, 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2024ம் ஆண்டில் முதல் முறையாக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 25 சதவிகிதம் அதிகமாக இருந்தது
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் செய்யப்பட்டிருப்பதாக ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களைப் போலவே, மக்களவைத் தேர்தல்களிலும் ‘வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான மோசடி’ நடந்ததாக குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ‘தவறானவை’ என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், வாக்குத் திருட்டு என்று சொல்வது உண்மை என்று ராகுல் காந்தி நம்பினால், அவர் பிரமாணப் பத்திரம் ஒன்றில் கையெழுத்திட்டு புகார் அளிக்க வேண்டுமென்றும், அவ்வாறு செய்ய முடியாவிட்டால், அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கூறுகிறது.
முன்னதாக, பிகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், தேர்தல் ஆணையம் குறித்த கேள்விகளை செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் எழுப்பியிருந்தார்.
பிகாரில் வாக்களர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிர திருத்தத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட முதல் வரைவுப் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியிருந்தார்.
வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் வேண்டுமென்றே மோசடிகள் செய்யப்படுவதாக தேஜஸ்வி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், பொதுவாக பலருக்கும் எழும் இதுபோன்ற கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் பிபிசி அனைவருக்கும் எளிமையாக புரியும் வகையில் தயாரித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் பெண்கள்
EPIC என்றால் என்ன?
EPIC என்பதன் முழு வடிவம் ‘வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை’. பொதுவாக இது வாக்காளர் அட்டை என்று அழைக்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் இந்த வாக்காளர் அடையாள அட்டையில், வாக்காளரின் பெயர், புகைப்படம், பாலினம், பிறந்த தேதி, வயது, முகவரி மற்றும் பிரத்யேகமான EPIC எண் ஆகியவை இருக்கும்.
ஒருவருக்கு இரண்டு EPIC எண்கள் இருக்க முடியுமா?
சட்டப்படி, ஒரு நபரிடம் EPIC எண் ஒன்று மட்டுமே இருக்க முடியும்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் படி, ஒரு நபரின் பெயர், ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் மட்டுமே இருக்க முடியும்.
பொதுவாக, ஒருவர் வேறு ஊருக்கு மாறும்போது புதிய வாக்காளர் அட்டையைப் பெறுவார்.
பல நேரங்களில் ஓரிடத்தில் இருந்து வேறு இடத்துக்கு/ஊருக்கு மாறிச் செல்பவர்கள், தங்களுடைய பழைய EPIC எண்ணை ரத்து செய்வதில்லை. இந்த சூழ்நிலையில், ஒரு நபரின் பெயரில் இரண்டு EPIC எண்கள் வழங்கப்படுகின்றன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஒரு நபரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால்தான் அவரால் வாக்களிக்க முடியும்
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா, இல்லையா என்பதை எப்படி சரிபார்ப்பது?
தேர்தல் ஆணையத்தின் தேசிய வாக்காளர் சேவை போர்ட்டலில் வாக்காளர் பட்டியல் இருக்கும். அதிலிருந்து தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா, இல்லையா என்பதை ஒருவர் சரிபார்க்கலாம்.
இதற்காக, தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் மூன்று விருப்பத்தெரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒருவர் தனது விவரங்கள், EPIC எண் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சரிபார்க்கலாம்.
இந்த மூன்று வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி, தனது சட்டமன்றத் தொகுதி மற்றும் வாக்குச்சாவடியின் முகவரியை வாக்காளர் கண்டறியலாம். இந்த போர்ட்டலின் உதவியுடன், ஒருவர் தனது பெயரில் இரண்டு EPIC எண்கள், அதாவது இரு வாக்காளர் அட்டைகள் உள்ளதா என்பதையும் கண்டறியலாம்.
ஒன்றுக்கு மேற்பட்ட EPIC எண்கள் கண்டறியப்பட்டால், அந்த நபர் படிவம் எண் 7ஐ நிரப்பி தனது பழைய வாக்காளர் அடையாள அட்டையை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
இதைத் தவிர, அச்சிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இருக்கிறதா என்பதை கண்டறிய, அவர் வாக்குச்சாவடி நிலை அதிகாரியிடம் (BLO) அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சரிபார்க்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் என்ன செய்வது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2024 மக்களவைத் தேர்தலின் போது, முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடியே 80 லட்சமாக இருந்தது
வாக்காளர் பட்டியலில் தனது பெயரைச் சேர்க்க, ஒருவர் தேர்தல் ஆணையத்தில் படிவம் எண் 6ஐ நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
முதல் முறையாக வாக்காளராக தன்னைப் பதிவு செய்பவர்கள், இந்தப் படிவத்தை நிரப்ப வேண்டும். இந்தப் படிவத்தில், நபரின் பெயர், வயது, பிறந்த தேதி, பாலினம், முகவரி, குடும்பத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தேவை.
இந்தப் படிவத்தை வாக்காளர் உதவி மைய செயலியில் ஆன்லைனில் நிரப்பலாம் அல்லது BLO அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.
பட மூலாதாரம், Congress
படக்குறிப்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ‘வாக்கு திருட்டு’ என்ற கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்
டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் ஏன் கிடைக்கவில்லை?
டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் தரவை வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கு முன்பும் இதேபோன்ற கோரிக்கையை காங்கிரஸ் தலைவரும் அப்போதைய மத்தியப் பிரதேச முதலமைச்சருமான கமல்நாத் 2019ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்திடம் முன்வைத்தார். வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் முறையில் பகுப்பாய்வு செய்ய, இயந்திரம் படிக்கக்கூடிய வடிவத்தில் முழுமையான வாக்காளர் பட்டியல் கொடுக்க வேண்டும் என்று அவர் தேர்தல் ஆணையத்திடம் கோரியிருந்தார்.
கமல்நாத்தின் கோரிக்கையை மறுத்த தேர்தல் ஆணையம், இயந்திரம் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியல் வாக்காளர்களின் தனியுரிமைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கமல்நாத் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் கமல்நாத்தின் வழக்கை நிராகரித்துவிட்டது. தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் கொள்கை சரியானது என்று நீதிமன்றம் நம்பியது.
“வாக்காளர் பட்டியலை PDF வடிவத்தில் வழங்குவது வாக்காளர்களின் தனியுரிமையை மீறவில்லை என்றால், அதே பட்டியலை டிஜிட்டல் வடிவத்தில் வழங்குவது எப்படி அதை மீறியதாக இருக்கும்? இது எனக்குப் புரியவில்லை” என்று ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் (ADR) இணை நிறுவனர் ஜக்தீப் சோக்கர் கேள்வி எழுப்புகிறார்.
இதில் தனியுரிமை பற்றிய எந்த கேள்வியும் இல்லை என்றும், தேர்தல் ஆணையம் டிஜிட்டல் வடிவத்தில் வாக்காளர் பட்டியலைக் கொடுக்க விரும்பவில்லை” என்றும் அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கனடாவில் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்கப்படுகிறது
டிஜிட்டல் வாக்காளர் பட்டியல்கள் கிடைக்கும் நாடுகள்?
கனடா தேர்தல் சட்டத்தின்படி, அந்நாட்டு தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு டிஜிட்டல் வடிவ வாக்காளர் பட்டியல்களை வழங்குகிறது.
இந்தப் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்களுடன், அவர்களின் முகவரியும், தனிப்பட்ட அடையாள எண்களும் இருக்கும்.
இதேபோல், அமெரிக்காவின் பல மாகாணங்கள் வாக்காளர் பட்டியல்களை மின்னணு முறையில் கொடுக்கின்றன.
பெரும்பாலான மாகாணங்களில் பத்திரிகையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என பல தரப்பினரும் பயன்படுத்தும் ஒரு பொது ஆவணமாகவே டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் உள்ளது.