சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு (எஸ்ஐஆர்) திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, திராவிடர் கழகம் உட்பட 49 கட்சிகள் பங்கேற்றன. கூட்டத்தில் எஸ்ஐஆர் பணிகளை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும். இல்லையென்றால், தமிழக கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று ஸ்டாலின் முன்வைத்த தீர்மானம் அனைத்து கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்கள் வாக்குரிமையை பறிக்கும்விதமாகவும், அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் பிஹாரில் வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்த பணிகள் நடைபெற்றன. அதுபோல தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது. நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம்தான். அதற்காக உரிய கால அவகாசத்தை கொடுக்க வேண்டும். பதற்றமில்லாத சூழலில் அதை செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த பணிகளை முறையாக செய்ய முடியும்.
மாறாக தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக முழுமையான திருத்தப் பணிகள் செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரமாகும். அதைதான் பிஹாரில் செய்தார்கள். அதனால்தான் அதனை எதிர்க்கிறோம். தமிழக மக்களின் உரிமைகளைக் காக்க, ஜனநாயக குரலை காக்க வரைவு தீர்மானத்தை முன் வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக மக்களின் வாக்குரிமையை பறித்து, ஜனநாயகத்தை படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆர்-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்து கட்சிகளின் கடமை. வாக்காளர் பட்டியல் திருத்தத்தை குழப்பங்கள், ஐயங்கள் இல்லாமல் போதிய கால அவகாசத்துடன், 2026 பொது தேர்தலுக்கு பின்பு நடத்த வேண்டும் என்ற நமது கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்காததால், உச்ச நீதிமன்றத்தை நாட தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் தலைவர்களுக்கும் நன்றி. இக்கூட்டத்தில் பங்கேற்காதவர்களும், தங்களுடைய கட்சிகளில் எஸ்ஐஆர் குறித்து விவாதித்து, ஜனநாயகத்தை காத்திடும் முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் அதில் தெரிவித்துள்ளார்.