• Fri. Oct 3rd, 2025

24×7 Live News

Apdin News

வானிலை முன்னறிவிப்பு: சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு | Today weather update

Byadmin

Oct 2, 2025


சென்னை: தமிழகத்தில் காஞ்சிபும், திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா இடையே இன்று இரவு கரையை கடக்கக்கூடும்.

இதன் தாக்கம் காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.3) முதல் 8-ம் தேதி வரை ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களிலும், 4-ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 5-ம் தேதி மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 3 செமீ, செஞ்சி, வளத்தி ஆகிய இடங்களில் தலா 2 செமீ, புதுச்சேரி, ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் மயிலம், கோவை மாவட்டம் சின்கோனா ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



By admin