• Tue. Sep 2nd, 2025

24×7 Live News

Apdin News

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு | Weather Forecast: Rain Chances at Tamil Nadu for Tomorrow to Sept.7th

Byadmin

Sep 1, 2025


சென்னை: தமிழகத்தில் நாளை முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை 6 நாட்கள் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை (செப்.2) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும், நாளை மறுதினமும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். செப்.4 முதல் 7-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று இன்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் கள்ளந்திரியில் 6 செ.மீ மழை, புதுச்சேரியில் 5 செ.மீ மழை, மதுரை மாவட்டம் பெரியபட்டி, சென்னை பெரம்பூர், ஐஸ் ஹவுஸ், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், சென்னை அமைந்தக்கரை, நுங்கம்பாக்கம், அயனாவரம், சென்ட்ரல், நெற்குன்றம், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, மதுரை மாவட்டம் தானியமங்கலம், விழுப்புரம் மாவட்டம் வானூர், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், சேலம் மாவட்டம் சந்தியூர், மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி, மேலூர் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



By admin