• Fri. Sep 19th, 2025

24×7 Live News

Apdin News

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு | tamilnadu weather update

Byadmin

Sep 19, 2025


சென்னை: தமிழகத்தில் செப்.20, 21 தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும் (செப்.20), நாளை மறுதினமும் வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22 முதல் 25-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிஸ் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக விழுப்புரத்தில் 19 செமீ, திருப்பத்தூரில் 17 செமீ, திருப்பத்தூர் மாவட்டம் வடபுதுப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் கெடாரில் தலா 16 செமீ, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியல் 15 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர், கடலூர் மாவட்டம் வனமாதேவி, பண்ருட்டி ஆகிய இடங்களில் தலா 13, விழுப்புரம் மாவட்டம் வளவனூரில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



By admin