• Wed. Oct 29th, 2025

24×7 Live News

Apdin News

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் நவ.3 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு | Moderate rains likely in Tamil Nadu and Puducherry till Nov. 3 – Chennai Meteorological Department

Byadmin

Oct 28, 2025


சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், நாளை முதல் வரும் நவ.3-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “நேற்று (அக்.27) காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ‘மோந்தா’ புயல் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்.28) காலை 5.30 மணி அளவில் தீவிரப் புயலாக வலுப்பெற்று, காலை 8.30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், மச்சிலிப்பட்டினத்திலிருந்து தெற்கு – தென்கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 240 கிலோ மீட்டர் தொலைவிலும், விசாகபட்டினத்திலிருந்து தெற்கு – தென்மேற்கே 320 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது, வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப் பகுதிகளில், மசூலிப்பட்டினம் கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் தீவிரப்புயலாக, இன்று (அக்.28) மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 110 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

நேற்று (அக்.27) மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்.28) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 36 மணி நேரத்தில் மேலும், வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும்.

அக்.28: தமிழகத்தில் இன்று (அக்.28) ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை – காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அக்.29 முதல் நவ.3 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: இன்று (அக்.28) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (அக்.29) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: இன்று (அக்.28) தமிழகம், புதுவை கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை (அக்.29) வடதமிழகம் மற்றும் புதுவை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.



By admin