பட மூலாதாரம், Reuters
அமெரிக்க அதிபர் மாளிகையில் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கியை துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நடத்திய விதம், ‘எதிர் தரப்பை கடுமையாக தாக்கி பேசுபவர்’ என்ற பார்வை தன் மீது ஏற்படுவதை பற்றி அவர் அச்சப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.
ஆனால் அவருக்கு முந்தைய துணை அதிபர்கள் கவனம் ஈர்க்கும் மைய அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்ததற்கு முரணான நடவடிக்கை இது.
ஸெலன்ஸ்கி மீதான வார்த்தை தாக்குதலை தொடங்கி வைத்தது வான்ஸ்தான். பின்னர் டிரம்ப் அதில் இணைந்துக்கொண்டார்.
யுக்ரேன்-ரஷ்யா போரில் ராஜ்ஜீய ரீதியான நடவடிக்கையை முன்னெடுத்ததற்காக டிரம்ப்பை பாராட்டி வான்ஸ் பேசுவதற்கு முன்பு வரை இந்த சந்திப்பு நல்லவிதத்திலே சென்றுக்கொண்டிருந்தது
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தையை விமர்சித்து வரும் ஸெலன்ஸ்கி “ஜே.டி., நீங்கள் எந்த வகையான ராஜ்ஜீய நடவடிக்கையைப் பற்றி பேசுகிறீர்கள்?” என வினவியதோடு, “நீங்கள் கூறுவதன் பொருள் என்ன?” என கேள்வி எழுப்பினார்.
“உங்கள் நாட்டில் அழிவை முடிவுக்கு கொண்டு வரும் விதமான ராஜ்ஜீய நடவடிக்கையைப் பற்றி நான் பேசுகிறேன் ” என வான்ஸ் பதிலளித்தார்.
“மரியாதைக்குரிய அதிபர் அவர்களே, நீங்கள் ஓவல் அலுவலகத்திற்கு வந்து அமெரிக்க ஊடகங்கள் முன்னதாக பிரச்னையை எழுப்ப முயலுவதை நான் அவமரியாதையாகக் கருதுகிறேன்” என கூறினார் வான்ஸ்.
2024 அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சிக்காக பிரசாரம் செய்ததாகவும் ஸெலன்ஸ்கி மீது அவர் குற்றம் சாட்டினார்.
ஸெலன்ஸ்கி தேர்தலுக்கு முன்னதாக செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள ஆயுத தொழிற்சாலையை பார்வையிட்டதோடு, ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸையும் வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.
ஸெலன்ஸ்கி மீது சீற்றம் காட்டிய வான்ஸ்-க்கு குடியரசுக் கட்சியினரிடையே அதிக ஆதரவு கிடைத்து வருகிறது.
“ஜே.டி.வான்ஸ் தேசத்திற்காக நிலைப்பாடு எடுத்ததால் அவரைப்பற்றி பெருமை கொள்கிறேன்”, என யுக்ரேனின் நீண்டகால ஆதரவாளரும், வெளியுறவுக் கொள்கை முன்னோடியுமான தெற்கு கரொலைனா செனட்டர் லிண்ட்சே கிரஹாம் கூறினார்.
ஸெலன்ஸ்கி ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அலபாமா செனட்டரான டாமி டூபர்வில்லி, ஸெலன்ஸ்கியை “யுக்ரேனிய தந்திரக்காரர்” என குறிப்பிட்டார்.
நியூயார்க்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மைக் லாவ்லர் “இது அமெரிக்கா, யுக்ரேன் என இருவருமே தவறவிட்ட வாய்ப்பு” எனக் கூறினார்.
பட மூலாதாரம், EPA
ஜே.டி.வான்ஸ் முந்தைய துணை அதிபர்களைப் போன்றவர் அல்ல!
தங்களின் நாட்டிற்கு வந்த மற்றொரு நாட்டின் தலைவர் மீதான வான்ஸின் தாக்குதல், அமெரிக்க துணை அதிபர்களுக்கு இயல்பானதல்ல.
அதிபராக தேர்வானவர்களுக்கு தேவைப்படும் போது உதவுவதும், தங்கள் தலைவரின் பின்னால் அமைதியாக அமர்வதும்தான் அவர்களின் பணியாக இருந்தது.
வெளிநாட்டுப் பயணங்களில் அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தும் விஸ்வாசமுள்ள துணையாக இருப்பது, அதிபர் கூறுவதையே கூறுவது, அதிபரின் இதயத்துடிப்போடு ஒத்துப்போவதுதான் அவர்களின் பணியாக இருந்தது.
ஒப்பீட்டளவில் டிரம்ப்பின் முதல் துணை அதிபரான மென்மையான நடத்தை கொண்ட மைக் பென்ஸ்-உடன் ஒப்பிட்டாலே பெரிய வேறுபாட்டை உணர முடியும்.
ஆனால், டிரம்ப்பின் வெளியுறவுக் கொள்கைகளின் உள் உணர்வுகளுக்கு பின்னால் பகுத்தாய்ந்து இயங்குபவராக அறியப்படும் ஜே.டி.வான்ஸ், யுக்ரேனுக்கு அமெரிக்கா வழங்கும் உதவிகளில் வெளிப்படையாக அதிருப்தி கொண்டவராக இருந்திருக்கிறார்.
2022 ம் ஆண்டில் ஓஹியோ செனட் சபைக்கு போட்டியிட்ட போது பாட்காஸ்ட் (Podcast) ஒன்றில் பேசிய வான்ஸ்,”நேர்மையாக பதிலளிக்கிறேன். யுக்ரேனில் என்ன நடந்தாலும் அதுபற்றி எனக்கு கவலை இல்லை” என கூறினார்.
2028ல் வான்ஸ் அதிபர் வேட்பாளரா?
இன்று அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்றுவோம் (Make America Great Again ) என்ற இயக்கத்தின் வாரிசாக கருதப்படும் அளவுக்கு பரிணமித்திருக்கும் துணை அதிபர் வான்ஸ், 8 ஆண்டுகளுக்கு முன்பு அதிபர் டிரம்ப்பை ஒரு முட்டாள் எனக்கூறி கிண்டல் செய்திருந்தார்.
பழமைவாத வாக்காளர்களிடையே ஜே.டி.வான்ஸ்-க்கு புகழ் இருந்த போதிலும், சமீபத்தில் ஃபாக்ஸ் நியூஸ்-க்கு பேட்டி அளித்த டிரம்ப், 2028ம் ஆண்டு அதிபர் தேர்தலுக்கான போட்டியாளராக வான்ஸ் இருப்பாரா என்று கூற ”இது நேரமல்ல” என கூறினார்.
டிரம்ப்-க்காக அரசியல் சண்டையிடும் நபராக எந்தத் தடையுமின்றி வான்ஸ் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளார். நிர்வாக அமைப்புகள் மீது வெளிப்படையான விமர்சனங்களை முன்வைப்பதில் அதிபரைக் காட்டிலும் முன்னிலையில் நிற்கிறார்.
கூட்டாளி நாடுகளை குறி வைக்கிறாரா வான்ஸ்?
பட மூலாதாரம், Getty Images
வான்ஸ்-ன் வசவுகளுக்கு ஆளானவர்களின் ஒற்றுமை என்னவென்றால் இவர்கள் அனைவருமே அமெரிக்காவின் கூட்டாளிகள்.
அமெரிக்க துணை அதிபர்கள் வழக்கமாக பங்கேற்கும், மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் இது தொடங்கியது. இந்த மாநாட்டில் கமலா ஹாரிஸ் மறக்க முடியாத பேச்சுக்களைக் கொடுத்திருக்கிறார்.
ஆனால், இந்த முறை ஐரோப்பிய ஜனநாயகத்தின் நிலை குறித்த கடுமையான தாக்குதலுக்காக மியூனிக் பாதுகாப்பு மாநாட்டை வான்ஸ் பயன்படுத்திக் கொண்டார். ஐரோப்பிய தலைவர்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதாகவும், குடியேற்றங்களை கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“உங்கள் வாக்காளர்களைப் பார்த்து பயந்து ஓடிக் கொண்டிருந்தால், அமெரிக்காவால் உங்களுக்கு ஒன்றும் செய்ய முடியாது” என்று வான்ஸ் பேசினார்.
அரசியல்வாதிகள், ராணுவ தலைமைகள், தூதர்கள் என அந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஐரோப்பா மீதான சித்தாந்தத் தாக்குதல்!
ஐரோப்பா தனது பாதுகாப்பு மற்றும் ராணுவத்திற்காக கூடுதலாக செலவிட வேண்டும் என்பது, வழக்கமானது அல்ல என்றாலும், பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வாதமாக மாறியுள்ளது.
முழுமையான சித்தாந்தத் தாக்குதலான இது, டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து விலகி, தனது பாதுகாப்பு கவனத்தை சீனா மீது குவிக்கிறது என்பது மட்டுமல்லாமல், டிரம்ப் பாணியிலான ஜனரஞ்சகவாதத்தை ஐரோப்பிய கண்டத்திலும் ஊக்குவிக்கிறது.
மியூனிக் மாநாட்டுக்கு உரைக்கு பிறகு, ஜெர்மனியின் தீவிர வலதுசாரி கட்சியின் தலைமையுடனான வான்ஸின் இரவு உணவு சந்திப்பு காரணமின்றி நடைபெறவில்லை.
அவருடைய பேச்சு ஐரோப்பிய தலைவர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்களிடமிருந்து எதிர்விளைவுகளை ஏற்படுத்தியது.
இருப்பினும் ஆன்லைனில் வான்ஸ் அவர்களை எதிர்கொண்டார், எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வரலாற்றாசிரியர் நியால் ஃபெர்குசன் உட்பட பலருடன் விரிவான விவாதங்களில் ஈடுபட்டார்.
“தார்மீகக் குப்பை, வரலாற்று கல்வியின்மை” மட்டுமின்றி “உலகவாதி”யாக இருக்கின்றனர் என அவர்களை வான்ஸ் விமர்சித்தார்.
பட மூலாதாரம், Getty Images
பிரிட்டனில் கருத்து சுதந்திரம் பற்றிய விவாதம்
இதுவும் போதாதெனில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமரை சந்தித்த போது அவருக்கு எதிராகவும் வாதங்களை முன்வைக்க வான்ஸ் தயங்கவில்லை.
கியர் ஸ்டாமரிடம் நேரடியாகப் பேசிய அவர் ,”பிரிட்டனில் கருத்து சுதந்திரம் மீறப்படுகிறது. இது பிரிட்டனை மட்டும் பாதிப்பதில்லை. பிரிட்டனில் என்ன நடந்தாலும் அது உங்களைச் சார்ந்தது. ஆனால் இது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களையும், சில நேரங்களில் அமெரிக்க குடிமக்களையும் பாதிக்கிறது” என்றார்.
இதனை உறுதியாக மறுத்துப் பேசிய பிரிட்டன் பிரதமர் “பிரிட்டனில் கருத்து சுதந்திரத்தைப் பொருத்தவரை, எங்களின் வரலாற்றை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்… நீண்ட காலமாக பிரிட்டனில் கருத்து சுதந்திரம் இருக்கிறது. இது இன்னமும் நீண்ட காலத்திற்கு தொடரும்” என்றார்.
இது ஐரோப்பாவில் செயற்கை நுண்ணறிவு மற்றும் சமூக வலைத்தளங்களுக்கான ஒழுங்குபடுத்து நடவடிக்கை குறித்து மியூனிக்-ல் வான்ஸ் முன்வைத்த விமர்சனத்தின் எதிரொலியாகவே கருதப்படுகிறது.
டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியுமா?
சில ராஜதந்திரிகள் நம்புவது போல ஸெலன்ஸ்கி மீதான வான்ஸின் வார்த்தை தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா? என பல கேள்விகள் எழுகின்றன.
அமெரிக்க பத்திரிகைகளிடம் பேசிய வெள்ளை மாளிகை வட்டாரங்கள் இதனை மறுத்துள்ளன.
எதிரிகளுக்கு தண்டனை வழங்க, ஈலோன் மஸ்க் உடன் வேலையை பகிர்ந்து கொள்ளும் வான்ஸின் புதிய செயல்பாடு, அதிபரின் உத்தரவால் உருவாகிறதா?
அல்லது இந்த வேலையை வான்ஸ் தானாக ஏற்றுக் கொண்டுள்ளாரா? மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற இருக்கும் தேர்தலில் பிரசார களத்தில் டிரம்ப் மீண்டும் நிற்காத அளவுக்கான அடிப்படை கட்டமைப்பை வான்ஸ் உருவாக்கி வருகிறாரா?
இந்த கேள்விகளுக்கு பதில் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். வான்ஸ் டிரம்ப்பின் துணை அதிபர் என்ற நிலையைத் தாண்டி எழுச்சியடைந்து கொண்டிருக்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.