படக்குறிப்பு, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா முகமையை மூடும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்க அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா செய்தி நிறுவனத்தை மூடுவதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்நிறுவனம் டிரம்ப் எதிர்ப்பு மனநிலையுடன் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், வரிசெலுத்துபவர்கள் இத்தகைய பிரசாரங்களுக்கு இலக்காவதை தடுக்கும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதோடு, வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா மீதான அரசியல்வாதிகள் மற்றும் வலதுசாரி ஊடகங்களின் விமர்சனங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இரண்டாம் உலகப்போர் நேரத்தில் நாஜி பிரசாரங்களை எதிர்கொள்ளும் விதமாக கட்டமைக்கப்பட்ட வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா இன்னமும் ஒரு அடிப்படையில் ரேடியோ சேவையாகவே தொடர்கிறது. ஒவ்வொரு வாரமும் லட்சக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் இதன் சேவைகளைப் பெறுவதாக அந்நிறுவனம் கூறுகிறது.
ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 1,300 ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் உள்ளனர்
வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் இயக்குநர் மைக் அப்ராமோவிட்ஸ் பேசுகையில், அவர் உட்பட அந்நிறுவனத்தின் 1,300 ஊழியர்களும் ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
“டிரம்பின் இந்த உத்தரவால் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா அதன் கடமையை செய்ய முடியவில்லை. குறிப்பாக இரான், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் அமெரிக்காவை இழிவுபடுத்துவதற்காக தவறான செய்திகளை பரப்ப பில்லியன் டாலர் பணத்தை செலவிட்டு வருகின்றன.” என்று அப்ராமோவிட்ஸ் கூறுகிறார்.
“இந்த நடவடிக்கை சுதந்திரமான மற்றும் தன்னிச்சையான ஊடகங்களுக்கான அமெரிக்காவின் நீண்டகால உறுதிப்பாட்டை குறைத்து மதிப்பிடுகிறது” என்று அமெரிக்க ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய தேசிய பிரஸ் கிளப் தெரிவித்துள்ளது.
“ஒரே இரவில் ஒட்டுமொத்த செய்தியறையும் முடக்கப்படுமானால், பத்திரிகை சுதந்திரத்தின் நிலை குறித்து என்ன சொல்ல முடியும்” எனவும் கேள்வி எழுப்பியுள்ள அந்த அமைப்பு, “ஒரு நிறுவனம் துண்டாடப்பட்டுள்ளது. இது வெறும் ஊழியர் தொடர்புடையது அல்ல மாறாக சுதந்திரமான இதழியலின் எதிர்காலத்தை அச்சுறுத்தலுக்குள்ளாக்கும் அடிப்படை மாற்றம்” என குற்றம் சாட்டியுள்ளது.
மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட தகவல்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிரசாரங்களை எதிர்கொள்ளும் விதமாக இந்த முகமைகள் செயல்படுகின்றன
அதிபரின் நடவடிக்கையானது விஓஏ எனப்படும் வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் தலைமை நிறுவனமான உலக ஊடகங்களுக்கான அமெரிக்க முகமையை (US Agency for Global Media) குறிவைக்கும் விதமாக உள்ளது. இந்நிறுவனம் Radio Free Europe மற்றும் Radio Free Asia போன்ற லாபநோக்கற்ற நிறுவனங்களுக்கு நிதி வழங்குகிறது. கம்யூனிஸ்ட் பிரசாரங்களை எதிர்கொள்ளும் வகையில் இவற்றின் செயல்பாடு இருக்கும்.
உலக ஊடகங்களுக்கான அமெரிக்க முகமை (USAGM) தனது மேலாளர்களை “பணியை குறைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. மனித வளத்தை குறைத்துக் கொண்டு விதிகளுக்கு தேவைப்படும் அளவுக்கு செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்” என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளியான சிபிஎஸ் கூற்றுப்படி, யூஎஸ்ஏஜிஎம் மனிதவள இயக்குநர் கிரிஸ்டல் தாமஸின் மின்னஞ்சல் மூலம் விஓஏ பணியாளர்களுக்கு இந்த விவரம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
சிபிஎஸ்-க்கு கிடைத்த தகவலின்படி, அனைத்து நிரந்தரமற்ற பணியாளர்கள் மற்றும் சர்வதேச ஒப்பந்ததாரர்களுக்கும் வழங்குவதற்கான பணம் தற்போது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேடியோ ஃப்ரீ ஏசியா மற்றும் ரேடியோ ஃப்ரீ யூரோப் அல்லது ரேடியோ லிபர்டி ஆகிய நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் சிபிஎஸ்-க்கு கிடைத்துள்ளது. அந்நிறுவனங்களுக்கான அமெரிக்க அரசின் நிதி உதவி ரத்து செய்யப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுஎஸ்ஏஜிஎம் நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் விஓஏ மற்றும் இதர நிலையங்களின் கூற்றுப்படி தங்களுக்கு 400 மில்லியன் நேயர்கள் இருப்பதாக கூறுகின்றன. இது பிரிட்டன் அரசின் பகுதி நிதியோடு செயல்படும் பிபிசியின் உலக செய்தி சேவைக்கு இணையானது.
ஆலோசகராக நியமிக்கப்பட்ட டிரம்பின் விசுவாசி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டிரம்ப்பின் தீவிர விசுவாசியான கரி லேக் யுஎஸ்ஏஜிஎம்-ன் சிறப்பு ஆலோசகராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார்
செக் குடியரசு நாட்டின் வெளியுறவு அமைச்சரான ஜான் லிப்பாவ்ஸ்கி, பராகுவே-யில் இயங்கி வரும் ரேடியோ ஃப்ரீ யுரோ/ரேடியோ லிபர்ட்டியை தொடர்ந்து இயங்கச் செய்ய ஐரோப்பிய யூனியன் உதவும் என்று நம்புவதாகக் கூறினார்.
திங்கட் கிழமை நடைபெறும் ஐரோப்பிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் இந்த ஒலிபரப்பு சேவைகளை பகுதி அளவாவது இயங்கச் செய்ய வழிகளை காணுமாறு கேட்டுக் கொள்வேன் என செக் குடியரசின் வெளியுறவு அமைச்சர் கூறினார்.
பெரும் பணக்காரரும் டிரம்பின் பிரதான ஆலோசகர்களில் ஒருவருமான ஈலோன் மஸ்க் அமெரிக்க அரசின் செலவுகளை குறைக்கும் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். இவர் தமது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் விஓஏ மூடப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார்.
வீடற்றவர்களை பாதுகாக்கும் திட்டம், அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்களுக்கான நிதி உள்ளிட்ட அமெரிக்க அரசின் பிற ஃபெடரல் முகமைகளுக்கான நிதியையும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளார்.
டிரம்ப் தமது முதல் ஆட்சிக்காலத்தின் போதும் விஓஏ குறித்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். தன்னுடைய தீவிர விசுவாசியான கரி லேக்-ஐ யுஎஸ்ஏஜிஎம்-ன் சிறப்பு ஆலோசகராக சமீபத்தில் நியமித்தார்.
அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள் பலவும் தனக்கு எதிராக பக்கச் சார்புடன் செயல்படுவதாக அதிபர் டிரம்ப் வழக்கமாகவே குற்றம் சாட்டி வந்தார். நீதித்துறையில் பேசும் போது சிஎன்என் மற்றும் எம்எஸ்என்பிசி ஆகிய செய்தி முகமைகளை “ஊழல்” என்ற வார்த்தையின் மூலம் குறிப்பிட்டார்.
நாஜி மற்றும் ஜப்பானிய பிரசாரங்களை எதிர்கொள்வதற்கான உத்தரவோடு 1942 ம் ஆண்டு வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா தொடங்கப்பட்டது. இதன் முதல் ஒளிபரப்பு பிபிசியால் கடனாக வழங்கப்பட்ட ஒரு டிரான்ஸ்மீட்டரில் தொடங்கப்பட்டது என்பதன் மூலம் இதன் குறைந்தபட்ச நோக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
அமெரிக்க முன்னாள் அதிபரான ஜெரால்டு ஃபோர்டு , விஓஏவின் தலையங்க சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான பொது சாசனத்தில் 1976-ஆம் ஆண்டு கையெழுத்திட்டார்.
ராணுவ தொடர்பற்ற ஒளிபரப்புகளை மேற்பார்வையிடும் நிர்வாகிகள் வாரியம் 1994-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
2013-ஆம் ஆண்டு ஏற்பட்ட சட்டத் திருத்தம் ஒன்று விஓஏ மற்றும் துணை நிறுவனங்கள் அமெரிக்காவில் ஒளிபரப்பைத் தொடங்க அனுமதி வழங்கியது.