”கொரோனா காலத்தில் கூட நாங்கள் தனிமைப்படுத்தப்படவில்லை. ஆனால், இன்று தனிமையாகியுள்ளோம். மனவேதனையில் கதைத்துக்கொண்டிருக்கின்றோம்.” என கண்டியின் வாரியகல – ஹில்சைட் பகுதியைச் சேர்ந்த சிவா தெரிவிக்கின்றார்.
இலங்கையில் திட்வா புயலின் தாக்கம் அதிதீவிர நிலையில் இருந்த போது, நில்லம்பே பகுதியிலேயே அதிகளவான மழை பதிவாகியிருந்தது.
431 மில்லிமீட்டர் மழை பதிவான நில்லம்பே பகுதிக்கு சொந்தமான பிரதேசமே வாரியகல – ஹில்சைட்.
இங்கு சுமார் 200 குடும்பங்களைச் சேர்ந்த 700க்கும் அதிகமானோர் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், இன்று வாரியகல – ஹில்சைட் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் தனிமையாகியுள்ளதை போன்றதொரு எண்ணத்தை கொண்டுள்ளனர்.
அனைத்து வீதிகளும் தடைப்பட்டுள்ளன
வாரியகல – ஹில்சைட் என்பது மலையொன்றுக்கு மேல் அமைந்துள்ள ஒரு கிராமம்.
இந்த கிராமத்திற்கு செல்வதற்கு சில வீதிகள் இருந்த போதிலும், கடந்த சில தினங்களாக பெய்த மழை காரணமாக இந்த கிராமத்திற்கு செல்லும் அனைத்து வீதிகளும் தடைப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மக்களினால் நகர் பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், நகர் பகுதிகளிலுள்ளவர்களுக்கு ஹில்சைட் கிராமத்திற்குள் செல்ல முடியவில்லை.
இதனால், இந்த கிராமம் முழுமையாக தனிமைப்பட்டுள்ளதை போன்றதொரு எண்ணத்தில் இந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பல கடினமான சூழ்நிலைக்கு மத்தியில் நேற்றைய தினம் இவர்கள் காட்டு பகுதிக்குள் புதியதொரு ஒற்றையடி பாதையொன்றை வெட்டியுள்ளனர்.
இவ்வாறு மக்களினால் தற்காலிகமாக வெட்டப்பட்ட ஒற்றையடி பாதையின் ஊடாகவே, பிபிசி குழு, அந்த பிரதேசத்தை நோக்கி இன்று சென்றது.
பாரிய மண்சரிவு
அந்த பிரதேசத்தில் பாரிய மண்சரிவு சம்பவங்கள் பல பதிவாகியுள்ளதுடன், சில வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதை காண முடிந்தது.
இந்த பிரதேசத்தில் எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை. சிலருக்கு சிறு காயங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளன.
எனினும், வெளிநகரங்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளமையினால், அத்தியாவசிய பொருட்களை இங்கு கொண்டு வர முடியவில்லை.
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வாழ்க்கையில் தமக்கு இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை என்கிறார் புஷ்பகலா.
” எனக்கு 40 வயது. எனது அனுபவத்தில் இப்படியொன்று நடக்கும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. என்னுடைய பிள்ளைகளை தூக்கிக்கொண்டு இரவு நேரத்தில் அங்கேயும் இங்கேயும் அலைந்தோம். என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பாதுகாப்பான இடம் என்று சொல்லி ஒரு இடமும் எங்களுக்கு கிடைக்கவில்லை” என்கிறார் அவர்.
பல தினங்களுக்கு பின்னர் பிரதேசத்திலுள்ள ஆண்கள் நகரத்திற்கு சென்று உணவு பொருட்களை வாங்கி வந்ததாகவும் அவர் கூறுகின்றார்.
”நேற்று காலையில் என் கணவர் பலருடன் சேர்ந்து காலை 7 மணிக்கு சென்று பொருட்களை வாங்கிக்கொண்டு இரவுதான் வந்தார்கள். அவ்வளவு கஷ்டப்பட்டு அவர்கள் கொண்டு வந்தார்கள். பிள்ளைகளுக்கு என்ன நடக்கும் என்று தெரியாமல் இருக்கின்றது. மலை மேலே ஒரு பெரிய கல் இருக்கின்றது. அது எங்கு வந்து விழும் என்று தெரியாது” என அவர் கவலையுடன் குறிப்பிட்டார்.
‘சாப்பாடு கூட கிடைக்கவில்லை’
இப்படியொரு சம்பவம் இனி ஒரு நாளும் வரக்கூடாது என இந்திராணி தெரிவிக்கின்றார்.
”மழைக்கு பிறகு இப்படியொரு சம்பவம் இனி நடக்கக்கூடாது என்று தான் நினைக்கின்றேன். இவ்வளவு சேதம் நடந்துள்ளது. எங்களை இன்று வரை யாரும் வந்து பார்க்கவில்லை. மழையில் பிள்ளைகளை தூக்கிக்கொண்டு ஓடினார்கள். இதுவரை ஒரு சாப்பாடு கூட கிடைக்கவில்லை. கடைகளில் பிஸ்கட் கூட இல்லை. இலங்கைக்கே இப்படியொன்று இனி நடக்கக்கூடாது.” என இந்திராணி கூறுகின்றார்.
தனக்கு 81 வயதாகின்ற நிலையில், தனது வாழ்க்கையில் இவ்வாறானதொரு கோர அனர்த்தத்தை கண்டதில்லை என கோவிந்தம்மா குறிப்பிடுகின்றார்.
”பலத்த சத்தம் கேட்டது. என் மகன் என்னை கூட்டிக்கொண்டு வந்துவிட்டான். வீட்டில் இருந்த 4 ஆடுகள் இறந்துவிட்டன. இன்றைக்கு சாப்பிட கூட கஷ்டமாக தான் உள்ளது.” என்கிறார் கோவிந்தம்மா
”எங்கள் கிராமத்திற்கு வருவதற்கு இரண்டு பாதைகள்தான் இருக்கின்றன. இந்த இரண்டு பாதைகளும் சரிந்து வீழ்ந்துள்ளன. இந்த கிராமத்தில் நாங்கள் தனிமைப்பட்டிருக்கின்றோம். எங்களுக்கு இப்போதைக்கு எந்தவொரு உதவியும் இல்லை. யாரும் இதுவரை எங்களை வந்து பார்க்கவில்லை. தமிழ், சிங்கள மக்கள் என 200 குடும்பங்கள் இந்த கிராமத்தில் இருக்கின்றோம். சாப்பிடுவதற்கு கூட ஒன்றும் இல்லை. கஷ்டமான சூழ்நிலையில் இருக்கின்றோம். எங்களுக்கு உதவி செய்து, எங்கள் மக்களை காப்பாற்ற வேண்டும்” என பிரதேசத்தைச் சேர்ந்த சிவா குறிப்பிடுகின்றார்.