• Sat. Mar 22nd, 2025

24×7 Live News

Apdin News

வார்னர் வான் ப்ரான்: சோவியத் ஒன்றியத்தை முந்தி, அமெரிக்கா நிலவில் முதலில் கால் பதிக்க வழிவகுத்த இவர் யார்?

Byadmin

Mar 22, 2025


வார்னர் வான் ப்ரான், அமெரிக்கா, ஜெர்மனி

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், சாரதா வி
  • பதவி, பிபிசி தமிழ்

ஹிட்லரின் ராணுவத்திற்கு ராக்கெட் செய்து கொடுத்த விஞ்ஞானிதான், நிலவில் கால் பதித்த அமெரிக்காவின் சாதனைக்கு பின்னால் இருந்தவர். அவரின் பெயர் வார்னர் வான் ப்ரான். ஹிட்லரின் ஜெர்மனியில் ராக்கெட் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்தவராக இருந்த அவரின் ஆராய்ச்சியில்தான் வி2 என்ற ஏவுகணை உருவானது. இந்த ஏவுகணையை பயன்படுத்திய ஹிட்லரின் படை, இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கர்களையும் சோவியத் படைகளையும் கதி கலங்க செய்தது. இந்த விஞ்ஞானி போருக்கு பின் அமெரிக்காவில் தஞ்சமடைந்தார். அவரின் வாழ்க்கை பல வியத்தகு சாதனைகளை உள்ளடக்கியது.

வார்னர் வான் ப்ரான், மனித குலம் ஒரு நாள் நட்சத்திரங்களை அடையும் என்று உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், நடைமுறையில் அவர் போருக்கான ராக்கெட் தயாரிக்க தொழில்நுட்பம் வகுத்துக் கொடுத்தார். நாஜி ஜெர்மனியிலிருந்து நாசா வரையிலான அவரது வாழ்க்கைப் பயணம் இலக்கும், அறநெறியும், புவிசார் அரசியலும் சந்திக்கும் முரண்பாட்டின் வெளிப்பாடாகும்.

நாஜி பொறியாளர்

ஜெர்மனியின் விர்சிட்ஸ் நகரில் 1912 ஆம் ஆண்டு பிறந்த வான் ப்ரானுக்கு விண்வெளி மீதான ஆர்வம் சிறு வயதிலிருந்தே தொடங்கியது.

“ஒரு புத்திசாலி இளைஞராக இருந்த அவர் கவனம் சிதறியதால் கணிதத்திலும், இயற்பியலிலும் தோல்வியடைந்தார். அதனால் உறைவிடப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். தனது பதின்ம வயதுகளில் விண்வெளி ராக்கெட்டுகள் குறித்து கனவு காண தொடங்கினார். 22 வயதில் இயந்திரவியல், வானூர்தி பொறியியலில் பட்டங்களையும், இயற்பியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். ஜெர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வருவதற்கு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அந்த நாட்டின் ராணுவத்தின் ராக்கெட் திட்டத்தின் சிவிலியன் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். 25 வயதில் அவர் பால்டிக் கடற்கரையில் உள்ள பீனெமுண்டே ராக்கெட் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தளத்தின் சிவிலியன் தொழில்நுட்ப இயக்குனராக இருந்தார்” என்று ப்ரானின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிய பாப் வார்ட் குறிப்பிடுகிறார்.

By admin