கவிஞர் வாலியின் பிறந்த நாள் இன்று. வாலியால் தன்னுடைய கலையுலக வாரிசு என்று அறிவிக்கப்பட்ட கவிஞர் பா.விஜயிடம், வாலி எழுத்தில் உங்களுக்குப் பிடித்தப் பத்துப் பாடல்களைப் பற்றிப் பகிருங்கள் என்று பிபிசி தமிழ் சார்பாக அணுகினோம்.
“வாலி ஒரு மகாகவி. உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் வரலாற்றில், ஒரே மொழியில், 15,000 பாடல்களை எழுதிய ஒரே பாடலாசிரியர் வாலி அவர்கள் மட்டுமே. அவரால் மட்டுமே நிகழ்த்த முடிந்த சாதனை இது. நான் அவருடன் பழகிய, பேசிய, அருகில் இருந்து கற்ற ஏராளமான நினைவுகள் என்றும் என் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும். அவர் எழுதியதில் எனக்குப் பிடித்த பாடல்கள் என்றால், அவர் எழுதிய எல்லாமே மிகச்சிறந்த பாடல்கள் தான். தற்போது என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் சில பாடல்களைப் பற்றி நான் பகிர்கிறேன்.” என்று கூறி சில பாடல்களை பா.விஜய் பகிர்ந்தார். இனி அவரது வார்த்தைகளில்…
படக்குறிப்பு, கவிஞர் பா.விஜய்
1. ரோஜா ரோஜா… (காதலர் தினம்)
அந்த காலகட்டத்தில் பாண்டவர் பூமி, அவதார புருஷன் போன்ற தீவிர இலக்கிய படைப்புகளை வாலி எழுதிக் கொண்டிருந்தார். அந்த இலக்கிய நடையை திரையிசைப் பாடல் ஒன்றில் பாய்ச்சியிருந்தார்.
‘இளையவளின் இடையொரு நூலகம், படித்திடவா பனிவிழும் இரவுகள் ஆயிரம்’ போன்ற வரிகளில் இருக்கும் இலக்கிய நயத்தை நான் வியந்திருக்கிறேன். இலக்கியத் தமிழ் மின்னி மிளிர்ந்து, பொங்கி வழியும். அவ்வளவு இலக்கியத்துவமாக வாலி அதற்கு முன் எழுதவில்லை. அதனாலயே எனக்கு மிக மிகப் பிடித்த, மனதுக்கு இணக்கமான பாடல் இது.
2. வள்ளி வள்ளி…. (தெய்வ வாக்கு)
இசைஞானி இளையராஜாவின் இசையில் ‘வள்ளி வள்ளி என வந்தான்’ என்ற பாடல், வாலி படைத்த அதிசயம். அந்தப் பாடலில் சந்தங்கள் எல்லாமே குத்துப் புள்ளி சந்தமாக வரும். அதற்கு வார்த்தைகளை எழுதுவது மிகக் கடினம். சொல்லால், கண்ணால், வண்ணப்பூ, வஞ்சிப்பூ, அன்புத்தேன், இன்பத்தேன் என அந்த சந்தத்துக்குச் சரியான சப்தத்தில் அவர் வார்த்தைகளைப் போட்டிருப்பார்.
இந்தக் கண்ணோட்டத்தில் இந்தப் பாடலைக் கேளுங்கள். ஒரு குத்துப் புள்ளியையும் தவறவிடாமல் அழகிய சொற்களால் நிரப்பியிருப்பார் வாலி.
3. கொஞ்ச நாள் பொறு தலைவா… (ஆசை)
என் மனதுக்கு நெருக்கமான இன்னொரு பாடல். புதிய தலைமுறை ரசிகர்களிடம் வாலி அவர்களை கொண்டு சேர்ந்தப் பாடலாக இதை நான் பார்க்கிறேன்.
‘நெஞ்சுக்குள்ள ஒட்டி வெச்சேன் வண்ணவண்ண சித்திரமா, வேறொருத்தி வந்து தங்க என் மனசு சத்திரமா’ என்ற வரிகளில் சொற்கள் தெறித்திருக்கும்.
எனக்கு அவர் மேல் மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்திய, அவரை நான் ஆதர்சமாக ஏற்று எழுத ஆரம்பித்த காலகட்டம் அது.
4. நியூயார்க் நகரம் உறங்கும்… (சில்லுனு ஒரு காதல்)
நான் என் குடும்பத்துடன் நியூயார்க் செல்லும்போது என் மகன் இதை கவனித்து என்னிடம் கேட்டான். ‘கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது’ என்ற வரிஅது.
வாலி எந்த வெளிநாட்டுக்கும் சென்றதில்லை. அவரிடம் பாஸ்போர்ட்டே கிடையாது. அதனால் அந்த வரியைக் குறிப்பிட்ட என் மகன், ‘எப்படி அவர் இதை நேரில் அனுபவிக்காமல், கேள்வி ஞானத்தில் மட்டும் எழுத முடியும், யார் இந்த உணர்வை அவருக்கு கடத்தியிருக்க முடியும்’ என்று ஆச்சரியப்பட்டான்.
நியூயார்க் நகரத்துக்கு கப்பலில் வந்து இறங்கி கரைக்கு நடந்தவர்களால் மட்டுமே இதை உணர முடியும். ஆனால் அங்கு செல்லாத வாலியால் இதை எழுத முடிகிறதென்றால் அவர் எவ்வளவு அற்புதமான, அலாதியான கவிஞராக இருக்க முடியும் என்று இந்தத் தலைமுறையைச் சேர்ந்த என் மகன் வியந்தது போலவே நானும் வியந்தேன்.
5. தேவுடா தேவுடா… (சந்திரமுகி)
நாங்கள் பல கவிஞர்கள் ஆளுக்கொரு பாடல் என சந்திரமுகி படத்தில் பாடல்கள் எழுதினோம். நான் அத்திந்தோம் பாடலை எழுதியிருந்தேன். தேவுடா தேவுடா பாடல் மெட்டமைக்கும் போது நான் அங்கு இருந்தேன். இசையமைப்பாளர் வித்யாசாகர் மெட்டை அமைத்துவிட்டார். வாலி வந்தார். ரஜினிகாந்தும் அவரும் பேச ஆரம்பித்தனர். அவர்களோடு புகைப்படம் எடுத்த பிறகு அவர்களைத் தவிர மற்றவர்கள் வெளியே வந்துவிட்டோம். அடுத்த சில நிமிஷங்களில் அவர்களும் வெளியே வந்துவிட்டனர். சரி, பாடல் வரிகளை இன்னொரு நாள் எழுதுவார் என்று நினைத்துக் கொண்டேன்.
வாலி எங்களைப் பார்த்து பேசிவிட்டுக் கிளம்பினார். மீண்டும் நாங்கள் உள்ளே சென்றோம். ”என்னப்பா இது? வாலி வந்தார், கேட்டார், எழுதினார், சென்றுவிட்டார், பாடல் முடிந்துவிட்டது” என்று வித்யாசாகர் எங்களிடம் ஆச்சரியப்பட்டுக் கூறினார். எங்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது.
வாலி மெட்டைக் கேட்டிருக்கிறார், உடனே தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா என்று சொல்லியிருக்கிறார். . இதற்குப் பிறகு இந்த மெட்டுக்கு வேறு வார்த்தைகளை யோசிக்கவே முடியவில்லை என்றார் வித்யாசாகர். என்ன இது வாடா போடா என்பது போல வருகிறதே என்று ரஜினிகாந்த் கேட்டிருக்கிறார். ஆனால் இந்தப் பாடல் அதான் டா இதான் டா பாடலை விட மிகப்பெரிய வெற்றி பெறும், தயக்கம் வேண்டாம் என்றாராம் வாலி. அவர் கூறியது போலவே பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
6. நலம் வாழ… (மறுபடியும்)
தத்துவத்தை மெட்டில் கொண்டு வருவது கடினம். எப்படி உங்களுக்கு இது சாத்தியமாகிறது என நான் பல முறை அவரிடம் வியந்து கேட்டிருக்கிறேன். அதுவும் இசைஞானி இளையராஜா, மெட்டுக்குத் தான் பாட்டு என்பதில் உறுதியாக இருப்பார். சந்தம் 100 சதவிதம் பொருந்தினால் மட்டுமே அவர் ஒப்புக் கொள்வார். அப்படி கச்சிதமாகப் பொருத்துவதில் மன்னாதி மன்னன் வாலி.
‘விரல்களைத் தாண்டி வளர்வதைக் கண்டு, நகங்களை நாமும் நறுக்குவதுண்டு’ என்று எழுதியிருப்பார். இவ்வளவு பெரிய ஆழ்ந்த அர்த்தம் கொண்ட தத்துவத்தை மெட்டில் உட்கார வைத்ததுதான் வாலியின் தனித்துவம். ஒருவரிடம் மொழி வளம் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். அந்த வரிகளில் மெட்டு உச்சத்துக்குப் போகும், உடன் இந்த வார்த்தைகள் அருவி போல பொங்கி வழியும்.
7. முக்காலா முக்காபுலா…. (காதலன்)
இதைப் பலர் கூற மாட்டார்கள். இது என்ன, சாதாரணப் பாடல் தானே என்று பார்ப்பார்கள். ஆனால் இது ஒரு தங்க்லீஷ் பாடல் என்றெல்லாம் இந்தப் பாடலை ஒதுக்கி வைக்க முடியாது. என்னைப் பொருத்தவரை ஒரு புது பாணியை உருவாக்கிய வரிகள் இவை. ஆனால் அன்றிருந்த ஒட்டுமொத்த இளைஞர்கள், குழந்தைகளை வசீகரித்த, சுண்டி இழுத்த வார்த்தைகள் இவை. அவரை விட்டால் வேறு யாராலும் யோசிக்க முடியாது என்று சொல்லும்படியான வார்த்தைகள் இவை. எழுதவும் மிகக் கடினம். அர்த்தமில்லாத வார்த்தைகளை காதுகளுக்கு இனிமையாகவும் இருப்பது போல எழுத வேண்டும்.
இதே போலத்தான் சிக்கு புக்கு ரயிலே பாடலும். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை ஒரு உச்சத்துக்குக் கொண்டு போய் வைத்த பாடல்கள் இவை. அவரே இந்தப் பாடல்கள் பற்றி சிலாகித்துப் பேசுவார். வாலி எழுதிய துள்ளாட்டம் போட வைக்கும் பாடல்களில் இந்தப் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
8. தென் மதுரை வைகை நதி… (தர்மத்தின் தலைவன்)
சமீபத்தில் ஒரு திருமண விழாவுக்குச் சென்றிருந்தேன். அந்த குடும்பத்தினர் இந்தப் பாடலை ஒலிக்க விட்டு உற்சாகமாக கேட்டுக் கொண்டிருந்தனர்.
‘நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை, தன்னை போல என்னை என்னும் நீயும் நானும் ஓர் தாய் பிள்ளை’ என்ற வரிகளுக்கெல்லாம் நெகிழ்ந்துவிட்டனர். இன்னும் ஆழமாக அந்த வார்த்தைகளோடு தங்களை பிணைத்துக் கொண்டதாக நினைக்கின்றனர்.
இதெல்லாம் என்றோ எழுதிய ஒரு பாடல். ஆனால் அது காலம் கடந்தும், திரும்பத் திரும்ப உயிர் பெற்று சாகாவரத்துடன் ஒலிக்கிறதே என்று நான் நினைத்துக் கொண்டேன். தலைமுறைகளை கடந்து, அந்தப் பாடல் மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்கிறது.
9. பூவே செம்பூவே… (சொல்லத் துடிக்குது மனசு)
அவ்வளவு அர்த்தம் பொதிந்த பாடல் இது. இந்தப் பாடலைக் கூர்ந்து கவனித்தால் இதிலிருக்கும் ஒரு தெய்வீகத்தை நம்மால் உணர முடியும். கதையின் நோக்கப்படி அவர் எழுதியிருக்கலாம். ஆனால் பக்தி நிலைக்குப் போகும் தெய்வீகத்தன்மையை அவர் இந்தப் பாடலில் கலந்திருப்பதாகத் தான் நான் பார்க்கிறேன்.
‘நான் செய்த பாவம் என்னோடு போகும், நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும்’ போன்ற வரிகளையெல்லாம், நம்முடனே இருக்கும் ஒரு அன்பின் வடிவத்திடம் நாம் சொல்கிற வார்த்தைகளைப் போல, நெஞ்சுக்கு நெருக்கமாக இருக்கும் ஒருவருக்கு அர்ப்பணிக்கும் வரிகளைப் போலவே எனக்குத் தோன்றும்.
வாலி மிகத் தீவிரமான முருக பக்தர். நான் எப்போது மருதமலை, திருச்செந்தூர் சென்றாலும், வாலிக்காக திருநீறு பிரசாதம் கொண்டு வருவேன். உற்சாகமாக, கொண்டாட்டமாக அதை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்வார். அன்றெல்லாம் புது அழகுடன் காட்சியளிப்பார்.
முருகனுக்கென்றே, ‘நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே, நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே’ என்று உருகி உருகி அவர் எழுதிய பாடல் இது. நான் பில்லா திரைப்படத்தில் எழுதிய சேவற்கொடி பறக்குதடா பாடலுக்கு வாலி எழுதிய இந்தப் பாடலும் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.