• Tue. Feb 25th, 2025

24×7 Live News

Apdin News

வாழ்வில் வெற்றி தரும் மகா சிவராத்திரி

Byadmin

Feb 24, 2025


சிவராத்திரியை, ஒளிமயமான இரவு, இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கிறோம். சிவனின் அருள் இருந்தால் மட்டுமே இந்த மகா சிவராத்திரி விரதம் இருக்க வாய்ப்பு கிடைக்கும்.

மதுரை: அம்பிகைக்கு நவராத்திரி என்றால் அப்பன் ஈசனுக்கு சிவராத்திரி விரதம் சிறப்பு வாய்ந்தது. எல்லோருக்கும் மகா சிவராத்திரி விரதம் இருக்கும் பாக்கியம் கிடைக்காது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, அந்த சிவனின் அருள் இருந்தால் மட்டுமே இந்த மகா சிவராத்திரி விரத வாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 18ஆம் தேதி மாசி 6ஆம் தேதி சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.

இந்து மதத்தில் மகா சிவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. சனிப்பிரதோஷ விரதமும், மகா சிவராத்திரியும் ஒரே நேரத்தில் வருவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பகலில் திரயோதசியும், இரவில் சதுர்த்தசி திதியும் கூடும், சிவராத்திரியானது மிக விசேஷமானதாகும். ‘கவுரிசங்கர சம்மேளன சிவராத்திரி’ என்றும் இதைக் கூறுவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவராத்திரி வருகிற 18ம் தேதி சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட உள்ளது.

சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருள். சிவபெருமான் தன்னை வணங்குபவர்களின் மனதில் இருக்கும் தீய எண்ணக் கழிவுகளான காமம், கோபம், குரோதம், பேராசை, பொறாமை போன்ற கர்ம வினைக் கழிவுகளை அழிப்பவர். அவரை வழிபடுபவர்களின் வாழ்வில் நிலவும் நோய்கள், மனக் கவலைகள், வறுமை நிலை போன்றவற்றை அறவே அழிப்பவர். ஒருவர் தனது மூன்று பிறவியில் செய்த பாவங்களையும் அழிப்பவர் சிவபெருமான்.

சிவராத்திரியை, ஒளிமயமான இரவு, இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கிறோம். ஒருவர் தன் வாழ்வின் வினைப்பயனை அழிக்க, எட்டு விதமான சிவ வழிபாட்டு முறைகளை கடைப் பிடிக்கலாம் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அவற்றில் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதி அன்று வரும் மகா சிவராத்திரி விரதமாகும்.

உலகம் முழுவதும் கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்ட காலத்தில், அன்னை பார்வதி உலக உயிர்களுக்காக தவம் இருந்து இறைவனை பூஜித்தார். அந்த இரவே சிவராத்திரி நாளாகும். பார்வதிதேவி தவமிருந்து, சிவ பெருமானின் இடப்பாகத்தில் இடம் பெற்றது சிவராத்திரி தினமாகும். உமாதேவி சிவபெருமானிடம் ஆகம உபதேசம் பெற்றதும் சிவராத்திரி அன்றுதான்.

பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன் தவம் செய்து, சிவபெருமானிடம் இருந்து ‘பாசுபதம்’ என்னும் அஸ்திரத்தை பெற்றதும் இந்த சிவராத்திரி தினமே. மார்க்கண்டேயனுக்காக, எமதர்மனையே சிவபெருமான் சம்ஹாரம் செய்த நாள் மகாசிவராத்திரி. பகீரதன் ஒற்றைக் காலில் கடுந்தவம் புரிந்து, கங்கையை பூமிக்குக் கொண்டு வந்ததும் சிவராத்திரி தினத்தில்தான்.

கண்ணப்ப நாயனார், குருதி வடியும் லிங்க வடிவிலிருந்த ஈசனின் கண் மீது தன் கண்களைப் பொருத்தி முக்தி அடைந்ததும் மகாசிவராத்திரி நாளில்தான். பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும், லிங்க ரூபமாக சிவபெருமானின் அருள் வழங்கிய நாள் மகா சிவராத்திரியாகும்.

மகா சிவராத்திரிக்கு விரதம் இருக்க நினைப்பவர்கள் வெள்ளிக்கிழமையன்று தொடங்கிவிட வேண்டும். அன்றைய தினம் ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு விரதத்தை தொடங்க வேண்டும்.

மகா சிவராத்திரி அன்று காலையில் குளிர்ந்த நீரில் குளித்து விட்டு நெற்றியில் திருநீறு பூசி, பூஜை அறையில் உள்ள இறைவனின் படம் முன்பாக விளக்கேற்றி விரதத்தைத் தொடங்க வேண்டும். சனிக்கிழமையன்று பகல் மற்றும் இரவு முழுவதும் எதுவும் சாப்பிடக்கூடாது.

சிவராத்திரி நாளில் சமைத்த உணவுகளை உண்ணாமல், சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தலாம். வயதானவர்கள் மற்றும் நோயாளிகள், சமைக்காத உணவுகளான பால், பழங்கள், அவல் சாப்பிடலாம். மகா சிவராத்திரி அன்று முழுவதும் மவுன விரதம் இருந்து, மனதிற்குள்ளேயே ‘பஞ்சாட்சரம்’ அல்லது ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரங்களை உச்சரித்து வந்தால் புண்ணிய பலன் மிகுதியாகும்.

ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்துவந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அதோடு அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வாழ்வில் செல்வம் வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர், வரும் 18ஆம் தேதி மகா சிவராத்திரி விரதம் இருக்க வேண்டும். மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன், சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. முழுமையாக விரதம் கடைப்பிடித்தால் தீராத நோய்களும் தீரும். சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.

By admin