விழுப்புரம்: விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 18ம் ஆண்டு மருதம் விழா நேற்று இரவு தஞ்சை ரெட்டிப்பாளையம் ரங்கராஜன் கலைக்குழு மூலம் வினோத் கலைக்குழுவில் நாட்டுப்புறக்கலைகள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பண்பாட்டு அசைவுகள் என்ற தலைப்பில் பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதி உரையாற்றினார்.
“வள்ளுவன் சிலை அமைத்து கால் நூற்றாண்டு விழா கொண்டாடிய இந்தத் தருணத்தில் திருக்குறள் புத்தகத்தை குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் அனைவருக்கும் வழங்க வேண்டும்.” என்றார்.
இதனை தொடர்ந்து விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் ரமேஷ் பேசும்போது, “கீழடி நாகரிகம் போல, பம்பை நாகரிகம் கொட்டப்பாக்கத்து வேலி, தென்னமாதேவி, அகரம் ஆகிய கிராமங்களில் தென்பெண்ணையாற்றின் கிளை நதியான பம்பை வாய்க்காலில் வெள்ளப்பெருக்கத்திற்கு பிறகு ஆற்றங்கரையில் காதணி, சுடுமண் கலையங்கள் பல சுவடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. கீழடியைப் போன்று ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.”என்றார்.
இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா பேசுகையில், “இது குறித்து வனத்துறை அமைச்சர் பொன்முடியின் கவனத்திற்கு கொண்டு சென்று, அவர் மூலம் தொல்லியல் துறையின் ஆணையரான முதன்மை செயலாளர் உதயசந்திரன் கவனத்திற்கு கொண்டுசெல்வேன். இதில் உள்ள உங்கள் அக்கரையை விட தொகுதி எம்எல்ஏவான எனக்கு கூடுதல் அக்கறை உள்ளது.
தமிழர்களின் நாகரிகத்தை வெளியுலகிற்கு கொண்டுவருவதற்காக எதை கேட்டாலும் செய்து கொடுக்கும் முதல்வர் இதற்கும் முயற்சி எடுப்பார். தொல்லியலில் ஆர்வம் கொண்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசுவின் கவனத்திற்கு கொண்டு சென்று முயற்சிகள் மேற்கொள்வேன்.” என்றார்.