• Thu. Aug 7th, 2025

24×7 Live News

Apdin News

விக்டோரியா பப்ளிக் ஹால்: சென்னையில் வரலாற்று நிகழ்வுகள் அரங்கேறிய கட்டடத்தின் கதை

Byadmin

Aug 6, 2025


VICTORIA HALL

சென்னையின் குறிப்பிடத்தக்க அடையாளங்களில் ஒன்றான விக்டோரியா பப்ளிக் ஹால் கட்டப்பட்டு சுமார் 135 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் அந்த அரங்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, புத்துயிர் பெறுகிறது. கம்பீரமான இந்தக் கட்டடத்தின் வரலாறு என்ன?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் சென்னை மாநகராட்சி கட்டடத்திற்கும் இடையில் சிவப்பு வண்ணத்தில் கம்பீரமான கோபுரத்துடன் காட்சியளிக்கும் அந்தக் கட்டடத்தை அவ்வழியாகச் செல்பவர்கள் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது. பார்ப்பவர்களை ஈர்க்கும் அந்தக் கட்டடம், ஒரு காலத்தில் சென்னையின் மிக முக்கியமான, மிக பரபரப்பான இடங்களில் ஒன்றாக இருந்த இடங்களில் ஒன்று.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சென்னை நகரம், மாகாணத்திலேயே எல்லா வகையிலும் முக்கியமான நகரமாக வளர்ந்துகொண்டிருந்தது. அந்தத் தருணத்தில் சென்னையில் கூட்டங்களை நடத்த, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்த ஒரு அரங்கம் தேவை என்பதை எல்லோருமே உணர்ந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் இதுபோல கூட்டங்களுக்கான அரங்குகள் மிகச் சிறிதாகவே இருந்தன. பெரும்பாலும் அவை கல்வி நிலையங்களுக்குள் அமைந்திருந்தன.

VICTORIA HALL

இந்த நிலையில்தான், சென்னையில் ஒரு பெரிய அரங்கத்தைக் கட்டுவதற்கான முயற்சிகளை அப்போதைய சென்னை நகரப் பிரமுகர்கள் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். அந்தத் தருணத்தில் சென்னை நகர் மன்றத் தலைவராக எஸ்.டி. அருண்டேல் இருந்தார். அந்த காலகட்டத்தில் பீப்பிள்ஸ் பார்க் (People’s Park) என்ற பெயரில் 116 ஏக்கருக்கு மிகப் பெரிய பூங்கா ஒன்று அந்தப் பகுதியில் இருந்தது. அந்தப் பூங்காவின் வடக்குப் பகுதியில் சுமார் 57 கிரவுண்ட் நிலம் இந்த அரங்கிற்காக ஒதுக்கப்பட்டது. இந்த அரங்கத்தைக் கட்டுவதற்காக நிதி திரட்ட ஆரம்பித்தபோது விஜயநகரத்தின் மகாராஜாவாக இருந்த ராஜா சர் ஆனந்த் கஜபதி பெருமளவில் நிதியுதவி அளித்தார்.

By admin