படக்குறிப்பு, போட்டிக்குப் பின்னர் விக்னேஷுடன் பேசிய தோனிகட்டுரை தகவல்
“தோனி எனது மகனைப் பாராட்டியதைப் பார்த்துவிட்டு எனக்கு தூக்கம் வரவில்லை” என்று கூறுகிறார், மும்பை இந்தியன்ஸ் வீரர் விக்னேஷ் புத்தூரின் தந்தை சுனில் குமார்.
ஆட்டோ ஓட்டுநரின் மகனான விக்னேஷ் புத்தூர் மும்பை அணியின் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கி பலரின் பார்வையை ஈர்த்தார்.
சென்னை – மும்பை என இரு பெரும் சாம்பியன் அணிகள் மோதும் போட்டிகள் பொதுவாக “எல்கிளாசிகோ” அதாவது பெரும் எதிர்பார்ப்புக்குரிய போட்டியாக பார்க்கப்படுகிறது. நேற்றைய போட்டியில் இருதரப்பிலும் ஜாம்பவான் வீரர்கள் பலர் இருந்த நிலையில், இவர்கள் அனைவருக்கும் மத்தியிலும் 24 வயது இளைஞர் விக்னேஷ் தனது அழுத்தமான தடத்தை பதிவு செய்துள்ளார்.
பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 53 ரன்களை அடித்திருந்த சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் விக்னேஷின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
மெதுவாக வந்த பந்தை ஸ்ரெயிட் டிரைவ் ஆட முயல, பந்து பேட்டின் முனையில் பட்டதால் கேட்சாக மாறியது. அடுத்து ஷிவம் துபே, இதே போன்று ஃபுல்டாஸ் ஆக வந்த பந்தை சிக்ஸ் ஆக மாற்ற முயன்று ஆட்டமிழந்தார். இதிலிருந்து மீள்வதற்குள் தீபக் ஹூடாவின் விக்கெட்டையும் விக்னேஷ் வீழ்த்தியிருந்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மந்திரப் பந்து வீச்சால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் விக்னேஷ்
‘தோனி பாராட்டியதைப் பார்த்து தூக்கம் வரவில்லை’
பட மூலாதாரம், HANDOUT
படக்குறிப்பு, தந்தை சுனில் குமார் மற்றும் தாயார் பிந்துவுடன் விக்னேஷ்
நேற்றைய போட்டியில் மும்பை அணி தோற்ற போதிலும், அறிமுக போட்டியிலேயே 4 ஓவர்களில் 32 ரன்களை வழங்கி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியில் வளரும் நட்சத்திரமாக உருவெடுத்திருக்கிறார் விக்னேஷ் புத்தூர்.
விக்னேஷின் இந்த ஆட்டம் அவரது குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பிபிசி தமிழிடம் பேசிய அவரது தந்தை சுனில் குமார், போட்டிக்குப் பின்னர் தனது மகனை தோனி பாராட்டுவதைப் பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் தனக்கு தூக்கம் வரவில்லை என்று கூறினார்.
“தோனி சார் எனது மகனை வெகுவாக பாராட்டினார். பெற்றோருக்கு வாழ்த்துக்களை கூறுமாறு தோனி எனது மகனிடம் கூறினார். இரவு 12 மணியளவில் போட்டி முடிவடைந்ததும், எனது மகன் எனக்கு போன் செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்” என்கிறார் சுனில்.
தோனி தன்னைப் பாராட்டிய புகைப்படத்தை தான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் பதிவிட்டுள்ளார்.
கேரளாவில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வரும் சுனில் குமார், நேற்றும் வழக்கம் போல தனது ஆட்டோவை ஓட்டச் சென்றுவிட்டார்.
மாலை 5 மணியளவில் உறவினருக்கு போன் செய்த விக்னேஷ், இன்று தான் விளையாட வாய்ப்பிருக்கலாம் என கூறியிருக்கிறார்.
“உறுதியாகத் தெரியாவிட்டாலும், தன்னை நன்கு பயிற்சி எடுக்கச் சொன்னதால் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளது” என விக்னேஷ் கூறியிருக்கிறார்.
இதனால், ஆட்டோ ஓட்டும் பணியை முன்னமே முடித்துக் கொண்டு டிவி முன் அமர்ந்திருந்ததாக சுனில் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, விக்னேஷின் வருகையால் சைனா மேன் வகை பந்து வீச்சில் மேலும் ஒருவர்
‘மேலும் ஒரு சைனா மேன் பவுலர்’
10 வயதில் வீதியில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியிருக்கிறார் விக்னேஷ் அவரிடம் தனித்தன்மை இருப்பதைப் பார்த்து விட்டு, மலப்புரத்தில் அகாடமி நடத்தி வரும் விஜயகுமார் பயிற்சிக்கு சேர்த்துக் கொண்டுள்ளார்.
விக்னேஷ்-க்கு இளம் வயதில் பயிற்சி அளித்த விஜயகுமார் பிபிசி தமிழிடம் பேசிய போது,”நேற்று மாலை வரை இந்தியாவுக்கு சர்வதேச தரத்திலான ஒரே ஒரு சைனா மேன் பவுலராக குல்தீப் யாதவ் மட்டுமே இருந்தார். ஆனால் நேற்று ஐபிஎல் போட்டிக்குப் பிறகு விக்னேஷும் அந்த பட்டியலில் இணைந்து கொண்டார்” எனக் கூறினார்
“கனவு போட்டியான இதில் பிரமாண்டத்தை நினைத்து அச்சப்படாமல் விக்னேஷ் செயல்பட்டார். ரன் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் பேட்டர்கள் இருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விக்னேஷ், துல்லியமாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தார்.” என கூறும் விஜயகுமார், சைனா மேன் ஸ்டைல் பந்து வீச்சை துல்லியமாக வீசுவதுதான் விக்னேஷின் சிறப்பு எனக் கூறுகிறார்.
10 வயதில் தம்மிடம் பயிற்சிக்காக வந்தபோது, மிதவேகம், ரைட் ஆர்ம் ஸ்பின் என பல பந்து வீச்சுக்களை முயற்சி செய்து பார்த்து விக்னேஷுக்கான தேர்வை இறுதி செய்ததாகக் கூறும் விஜய் குமார், ”தொடக்கத்தில் விக்கெட் கீப்பராகவும் அவருக்கு பயிற்சி அளித்தோம்” என்று கூறினார்.
இந்தக் கட்டுரையில் Instagram வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Instagram குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்’ என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
Instagram பதிவின் முடிவு
இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்ற பின்னர் கேரள கிரிக்கெட் அகாடமியின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மாநில அணிக்காக அண்டர் 14, அண்டர் 19, அண்டர் 23 பிரிவுகளில் விளையாடியிருக்கிறார் விக்னேஷ்.
மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டவரான விக்னேஷ், யாரிடமும் பேச மாட்டார் எனக் கூறும் விஜய்குமார், ஆனால் சிறந்த கிரிக்கெட் திறமை அவரிடம் இருப்பதாகக் கூறுகிறார்.
“விக்னேஷ் பயிற்சியைத் தொடங்கிய 2010, 2011 கால கட்டத்திற்கு முன்பு வரை கேரளாவில் கிரிக்கெட் பயிற்சிக்கான உள்ளரங்கங்கள் ஏதும் இல்லை. பின்னர் கேரள கிரிக்கெட் அகாடமியின் மூலம் மாவட்டம் தோறும் கிரிக்கெட் பயிற்சிக்கான உள்ளரங்கங்கள் உருவாக்கப்பட்டன. கேரளாவைப் பொறுத்தவரையிலும் ஜூன் முதல் செப்டம்பர் வரை இடைவிடாத மழை பெய்யும்.
இதனால் விளையாட்டு வீரர்களை பயிற்சியை கைவிட வேண்டியது வரும். இந்த இடைவெளிக்குப் பின்னர் பேட்டர்கள் தங்கள் ஃபுட் மூவ்மெண்ட்டை சரி செய்வதற்கும், பவுலர்கள் சரியான ஆக்ஷன் வேகம் மற்றும் துல்லியத்தைப் பெறுவதற்கும் திணறுவார்கள், உள்ளரங்கங்கள் கிடைத்த பின்பு இந்த பிரச்னை தீர்ந்தது. குறிப்பாக விக்னேஷின் வசிப்பிடத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கிரிக்கெட் உள்ளரங்கம் கிடைத்தது” என பயிற்சியாளர் விஜயகுமார் நினைவு கூர்கிறார்.
சைனா மேன் பவுலிங் என்றால் என்ன?
பட மூலாதாரம், VIGNESH PUTHUR / INSTAGRAM
படக்குறிப்பு, ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் முடித்திருக்கிறார் விக்னேஷ்
இடக்கை சுழற்பந்து வீச்சாளர் தனது மணிக்கட்டை சுழற்றி பந்து வீசுவது சைனாமேன் பந்து வீச்சு என அழைக்கப்படுகிறது. பந்தின் சுழற்சிக்கு இடக்கையின் மணிக்கட்டில் கொடுக்கப்படும் மாறுபாடே காரணமாகிறது. 1920களில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்ட சைனாமேன் பவுலிங் எனப்படும் இந்த வார்த்தை ராய் கில்னர் என்ற பந்து வீச்சாளரை குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் குல்தீப் யாதவ் மிக அரிதான சைனா மேன் பவுலராக அறியப்படுகிறார். தற்போது விக்னேஷ் புத்தூரையும் சைனாமேன் பவுலராக பலரும் ஒப்பிடத் தொடங்கியுள்ளனர்.
விளையாட்டு , கல்வி என அனைத்திலும் ஒரே பாதையில் பயணிக்கும் தனது மகன், முதுகலை ஆங்கில இலக்கிய படிப்பை முடித்திருப்பதாக சுனில் கூறுகிறார்
இளங்கலை பட்டத்தில் நல்ல மதிப்பெண்களுடன் தனது மகன் தேர்ச்சியடைந்ததாக குறிப்பிடுகிறார் சுனில்.