• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

விசாரணைக் கைதிகளுக்கு சிறை அதிகாரிகள் விடுப்பு வழங்க அதிகாரம்: சுற்றறிக்கை பிறப்பிக்க ஐகோர்ட் உத்தரவு | High Court orders to issue circular granting leave to undertrial prisoners by prison officials

Byadmin

Apr 19, 2025


சென்னை: நெருங்கிய உறவினர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் வகையில், விசாரணை கைதிகளுக்கு சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பரகத்துல்லா என்பவரின் தாயார் மரணமடைந்த நிலையில், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி கோரி பரக்கத்துல்லா சார்பில் அவரது சகோதரி ஷரிக்காத் நிஷா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை அவசர வழக்காக விடுமுறை தினமான இன்று (ஏப்.18) நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், “விசாரணை கைதிகளுக்கு சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்க அதிகாரம் உள்ள நிலையில், ஒவ்வொரு முறையும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு விசாரணை கைதிகள் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை உள்ளது.

எனவே விசாரணை கைதிகளின் பெற்றோர், மனைவி அல்லது கணவர், குழந்தைகள் என நெருங்கிய உறவினர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது இறுதிச் சடங்கில் பங்கேற்கும் வண்ணம் விசாரணை கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகளே அனுமதியளிக்க வேண்டும் என தமிழக உள்துறை செயலர் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கில் தனது தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பரக்கத்துல்லாவுக்கு வரும் ஏப்.20-ம் தேதி வரை அனுமதியளிக்கப்படுகிறது. இறுதிச் சடங்கில் பங்கேற்கும் அவர், சிறைத்துறை அதிகாரிகள் விதிக்கும் நிபந்தனைகளுக்குட்பட்டு செயல்பட வேண்டும்,” என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.



By admin