• Fri. Dec 20th, 2024

24×7 Live News

Apdin News

விசாரணை கைதிகளுக்கு அவசரகால விடுப்பு: வழிகாட்டு விதிகளை உருவாக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | Emergency leave to remand prisoners

Byadmin

Dec 20, 2024


சென்னை: விசாரணை கைதிகளுக்கு சிறைத் துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை புழல் சிறையில் விசாரணை கைதியாக உள்ளவர் சதீஷ். இவரது தந்தை அருள்தாஸ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனது மனைவி இறந்துவிட்டதால், இறுதி சடங்கில் பங்கேற்க எனது மகனுக்கு அவசரகால விடுப்பு வழங்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, ‘‘மனுதாரரின் ஒரே மகன் என்ற அடிப்படையில் அவரது தாய்க்கு இறுதி சடங்குகளை மேற்கொள்ள, சிறையில் உள்ள சதீஷுக்கு அவசரகால விடுப்பு வழங்க வேண்டும்’’ என்றார்.

சிறைத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், ‘‘மற்ற கைதிகள்போல விசாரணை கைதிகளுக்கு சிறைத்துறை அதிகாரிகள் அவசரகால விடுப்பு வழங்க சட்டத்தில் இடமில்லை. அவர்கள் விசாரணை நீதிமன்றங்களை அணுகித்தான் ஜாமீன் பெற வேண்டும்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கூறியதாவது: நீதிமன்ற விடுமுறை நாட்களில் விசாரணை கைதியின் தாயோ, தந்தையோ இறந்தால், இறுதி சடங்கில் எப்படி பங்கேற்க முடியும்? எனவே, சிறையில் உள்ள விசாரணை கைதியின் தாய் அல்லது தந்தை உயிரிழக்கும் பட்சத்தில், சிறைத் துறை அதிகாரிகளே உடனடியாக நிபந்தனைகளுடன் அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் விதிகளை தமிழக அரசு வகுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரர் அவரது தாயின் இறுதி சடங்கில் பங்கேற்கும் வகையில் விடுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.



By admin